12/04/2020
தற்போது ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கு தமிழக அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது என்ற செய்தியோடு ஊரடங்கு காலகட்டத்திலே சிரமப்படக்கூடிய மக்களுக்குஅரசியல் இயக்கங்களோ தன்னார்வ அமைப்புகளோ தனி மனிதர்களோ எந்த உதவியும் செய்யக்கூடாது என்றும் அரசு அறிவித்திருக்கிறது.
மகிழ்ச்சிக்குரிய செய்தி. மக்களுக்கு உதவி கொண்டிருக்கக்கூடிய, மக்களோடு மக்களாக கலந்து செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய சுய பாதுகாப்பைக் குறித்து எவ்வித கவனமும் செலுத்தாமல் மக்களுடைய பிரச்சினையை தங்கள் பிரச்சினையாக முன்னெடுத்துக் கொண்டு செல்லக்கூடிய சமூக போராளிகளுக்கு ஓய்வு தரக்கூடிய ஒரு அறிவிப்பை மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களுக்கும் அதில் ஓய்வு கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
ஆனால் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த கடந்த 23ம் தேதியிலிருந்து இன்றைய நேரம் வரைக்கும் தமிழக அரசு செய்ததென்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஊரெங்கும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தது,
கொரோனோவிற்கு மதச்சாயம் பூசி சிலரை மருத்துவமனையில் சேர்த்தது என்பதைத்தவிர மக்களுடைய பசியைப் போக்குவதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அரசு வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட வேண்டும்.
அரசியல் இயக்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இல்லை என்று சொன்னால் கொரோனோ மரணத்தை விட பட்டினி மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து இருக்கும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பொதுமக்களுடைய பசியைப் போக்குவதற்கு அரசியல் இயக்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளால் செலவிடப்பட்டு வருகிறது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு தன்னார்வ அமைப்புக்கள் செய்யக்கூடிய சேவைகளை அரசு தன் கணக்கில் வைத்துக் கொள்கிறது என்ற கேவலம் கூட நடைபெறுகிறது.
ஆனால் இவற்றைத் தாண்டி மக்களுடைய பசி போக்கப்பட்டிருக்கிறது என்பது தான் அரசு உடைய செயல்களை விட நமக்கு திருப்தி அளிக்கக் கூடிய செயல். அரசியல் இயக்கங்களை தன்னார்வ அமைப்புகளை இந்த களப்பணியில் இருந்து அரசு தடுப்பது என்பது வெற்று ஈகோவை தவிர வேறொன்றும் இல்லை. இதனுடைய பலனை அரசு மிக விரைவாக அனுபவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மத்திய மாநில அரசுகளிடத்திலே மக்களுடைய இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன திட்டங்கள் இருப்பது இருக்கிறது என்பது கூட யாருக்கும் தெரியாது. திட்டமிடுவதற்கு இவர்களுக்கு திராணி இருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். 23ம் தேதியிலிருந்து இதுநாள் வரைக்கும் அரசு மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன செய்திருக்கிறது என்பதற்கு எந்த பதிலும் இல்லை.
குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு மாத காலத்தை எதிர்கொள்ள முடியுமா? இதுவரை அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவிட்டதா? புலம் பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசு இதுவரை செய்ததென்ன? இந்தக்கேள்விகளுக்கு அரசிடம் எந்த பதிலும் இல்லை.
தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைப்பதற்கு அரசியல் இயக்கங்களின் தன்னார்வ அமைப்புகளின் சேவைகளை தடை செய்கிறது. இதன் மூலமாக அரசு என்ன சாதிக்க நினைக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முயலவில்லை
இனிமேல் தமிழகத்தில் ஏற்படக் கூடிய பட்டினிச் சாவுகளுக்கு அரசுதான் பொறுப்பு என்பதோடு மட்டுமன்றி, அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று சொன்னால் தமிழகத்தின் சாலைகளை கொரோனோ அச்சத்தையும் மீறி அரசை தெருக்களில் எதிர் கொள்ள வெல்ஃபேர் கட்சி தயாராகவே இருக்கிறோம் என்பதையும் இந்த நேரத்திலே அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம்.
V அதீகுர் ரஹ்மான்,
மாநிலத் தலைவர்,
வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு