26/05/2020
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று பரவலான பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படைபடையாக வானில் பரவி புகுந்தது.
இது ராஜஸ்தான் மாநில வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களை கவலைப்படச் செய்துள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவிலான வெட்டுகிளிகள் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக பலநாடுகளில் நடந்து வருகிறது.
பாலைவனப்பகுதிகளை ஒட்டிய நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.
பாகிஸ்தான் வழியாக இவை இந்தியாவிற்குள் நுழைகின்றன. ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் இவை ஒரே நாளில் சுமார் 80,000 கிலோ வேளாண் பயிர்களை உணவாக உட்கொள்ளும். இது ஒரு நாளில் 35,000 மனிதர்கள் உண்ணும் உணவிற்கு சமமாகும்.
உலகளவில் மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளி படையெடுப்புகள் அடிக்கடி நடக்கும் என்றாலும் பல ஆண்டுகளுக்குப் பின்பு சுமார் 26 ஆண்டுகள் கழிந்து கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் நடந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
நடப்பாண்டு பிப்ரவரி வரைக்கும் அது தொடர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் வேளான் பயிர்கள் பாதிப்படைந்து 1,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்தது.
கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் அடுத்து இந்தியா, பாகிஸ்தான் நோக்கி படையெடுக்கும் எனவும் இவை இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஏற்கெனவே ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)எச்சரித்திருந்தது.
ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பை தடுப்பதற்கான பணிகளை வேகப்படுத்தாவிட்டால் மிகப்பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படுமளவிற்கான பாதிப்புகள் உண்டாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தாக்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழ்நாட்டிற்கு வர வாய்ப்பில்லை என தமிழ்நாடு வேளாண்துறை தெரிவித்துள்ளது.