04/09/2021
முதல்வர் அவர்களுக்கு,
தமிழக அரசு சேவை பெறும் உரிமை சட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது. சேவை பெறும் உரிமை சட்டத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்களை அரசுக்கு பின்னூட்டம் வழங்கும் பொருட்டு, குடிமக்களின் கூட்டு முயற்சியாக இந்த மாதிரி மசோதா அறப்போர் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது,
தமிழ்நாடு சேவை பெறும் உரிமைச் சட்டம், அரசு சேவைகளைப் பெறுவதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளான லஞ்சம் மற்றும் காலதாமதம் ஆகியவற்றை தீர்ப்பதில் ஒரு மைல்கல்லாக அமையும். அறப்போர் இயக்கத்தின் மாதிரி சட்டத்தின் முக்கிய அம்சங்களை கீழே விளக்கி உள்ளோம்
1. இந்த சட்டம், அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் ,குறிப்பிட்ட கால அவகாசத்தில் அச்சேவைகளைப் பெறுவது அவர்களின் உரிமை என உறுதியளிக்கிறது.
2. சேவைகள்,அச்சேவைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி,தேவையான ஆவணங்கள் கட்டணம் ,விண்ணப்பிக்கும் முறை,அந்த சேவையை தரவேண்டிய அரசு அலுவலரின் தகவல்கள் மற்றும் அச்சேவையை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் ஆகியன குடிமக்கள் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு, ஒவ்வொரு அரசு அலுவலகம் மற்றும் வலைத்தளத்திலும் ,இந்த சாசனம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
3. ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனித்துவமான எண்ணுடன் கூடிய ஒரு ஒப்புகை ரசீது வழங்கப்பட வேண்டும். இந்த தனித்துவமான ஒப்புகை எண் மூலம் விண்ணப்பதாரர், தனது சேவை விண்ணப்பத்தின் சமீபத்திய நிலையை இணையதளம் மூலம் அறிய முடியவேண்டும். மேலும் ஒப்புதல் ரசீதில் , விண்ணப்பித்த சேவை வழங்கி முடிக்கப்பட வேண்டிய கடைசி தேதி குறிப்பிடபட்டிருக்க வேண்டும்.
4. சேவை விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதையும் ,அதற்கான தெளிவான காரணங்களையும் முறையாக விண்ணப்பதாரருக்கு ,தபால் மூலமாகவோ ,இணைய தளம் மூலமாகவோ , முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும் . விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். 'போதுமான ஆவணங்கள் இல்லை ' போன்ற பொதுப்படையான காரணங்கள் அனுமதிக்கப்படாது. நிராகரிப்புக்கு காரணமான குறிப்பிட்ட ஆவணம் அல்லது பிற காரணங்களை தெளிவாக நிராகரிப்பு ஆணையில் குறிப்பிட வேண்டும்.
5. சேவை நிராகரிப்பு, விண்ணப்பத்தைப் பெற மறுத்தல் அல்லது ஒப்புதல் ரசீது வழங்க மறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் விண்ணப்பதாரர், முப்பது நாட்களுக்குள் முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டாளர் அதே தனித்துவமான ஒப்புதல் ரசீது எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் அதே ஆன்லைன் போர்டல் மூலம் முதல் மேல்முறையீட்டின் நிலையைக் கண்காணிக்கலாம்.
6. மேல்முறையீடு பெறப்பட்ட 15 நாட்களுக்குள் அந்த மேல் முறையீட்டை, முதல் மேல்முறையீட்டு அதிகாரி முடிக்க வேண்டும். முதல் மேல்முறையீட்டு அதிகாரி, தனது ஆணையை, எழுத்து மூலம், விண்ணப்பதாரர் மற்றும் நியமிக்கப்பட்ட அதிகாரி ஆகியோருக்கு ஆன்லைன் போர்டல் மற்றும் அஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் ஆணை பெறப்பட்ட 5 வேலை நாட்களுக்குள் அந்த சேவையை அந்த நியமிக்கப்பட்ட அதிகாரி வழங்க வேண்டும்.
7. மாநில அரசு, அரசிதழில் அறிவித்து தன்னிச்சையாக இயங்கும் அதிகாரம் கொண்ட ‘தமிழ்நாடு சேவை பெறும் உரிமை ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இந்த அமைப்பு முதல் மேல்முறையீட்டின் ஆணைக்கு எதிராக , அல்லது முதல் மேல்முறையீடு அதிகாரி எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்காததற்கு எதிராக அல்லது மேல்முறையீட்டின் ஆணைக்கு எதிராக நியமிக்கப்பட்ட அதிகாரி சேவை வழங்கவில்லை என்றாலோ குடிமக்கள் சாசனம் மக்கள் பார்வைக்கு வைக்கப்படாததற்கு எதிராக முறையீடு செய்ய உருவாக்கப் படவேண்டும். இந்த ஆணையம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் குறைந்த பட்சம் 10 ஆணையர்களைக் கொண்டிருக்க வேண்டும். தலைமை ஆணையர்/ஆணையர்கள் ஆகியோர் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (அல்லது தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட அமர்வில் இருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதி) ஆகியோர் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.
8. சேவை ஆணையத்தின் ஆணையர்கள் மேல் முறையீட்டாளரையும் சேவை வழங்கும் அதிகாரியையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடிந்தளவு மேல் முறையீட்டாளரின் மாவட்டத்திலேயே நடத்தபபட வேண்டும். முடியாத பட்சத்தில் மேல் முறையீட்டாளர் விருப்பப்படி மேல் முறையீட்டாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமோ அல்லது மேல் முறையீட்டாளர் விருப்பப்பட்டால் தலைமை அலுவலகத்திலோ நடத்தலாம். இரண்டாம் மேல்முறையீடு விசாரணை 30 நாட்களுக்குள் முடிக்கபட வேண்டும்.
9. அரசு ஊழியர் சேவை வழங்க வேண்டும் என்று முடிவாகும் பட்சத்தில் அந்த சேவையை மனுதாரர் பெறும் வரை வழக்கு தள்ளுபடி செய்யப்படாது. இது மனுதாரர் சேவை பெறுவதை உறுதி செய்யும். வேண்டுமென்றே தாமதம் செய்த அரசு ஊழியருக்கு அபராதமாக சேவை வழங்கி இருக்க வேண்டிய நாள் முதல் சேவை வழங்கப்படும் நாள் வரை நாள் ஒன்றுக்கு ரூ 250 ம் அதிகபட்சமாக ரூ 25000 வரை அவர் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். மேலும் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
10. எங்கெல்லாம் மக்களுக்கு அவர்கள் தவறின் காரணம் அல்லாமல் சேவையில் தாமதம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு கண்டிப்பாக நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். அது ரூ 500 முதல் அபராதத் தொகையின் 90% வரை வழங்கப்படலாம்.
தமிழ்நாடு சேவை பெறும் உரிமை வரைவு மசோதாவை தயாரிக்கும் போது இந்த மாதிரி மசோதாவை ஒரு பின்னூட்டமாக எடுத்துக் கொள்ளுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அரசு மசோதாவை இறுதி செய்து தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வைப்பதற்கு முன், மசோதாவின் வரைவை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து , இந்த சட்டம் குறித்த பரந்த அளவிலான மக்களின் கருத்துகளை பெறவும், மக்களை மையமாகக் கொண்ட ஒரு சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
நன்றி
அறப்போர் இயக்கம்.