17/02/2021
வீட்டு வாடகை கட்ட முடியல; எனக்கு ஒரு வீடு ஒதுக்கித் தர முடியுமா?" - கலெக்டரிடம் மனு கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.!
மதுரை மாவட்டம், மேல பொன் நகரத்தைச் சேர்ந்தவர் நன்மாறன். இவர் மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். பதவிக் காலத்தில் அரசியலிலும் சரி, சட்டமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் போதும் சரி, நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றியவர் என்று மாற்றுக் கட்சியினரால் பெயர் பெற்றவர். இந்த நிலையில் நன்மாறன் இன்று (15/02/2021) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார். மதுரை மாவட்டக் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று மனு கொடுப்பதற்காகக் காத்திருந்தார். அங்கு அவரை அடையாளம் கண்டறிந்த சிலர் மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரியிடம் அறிமுகப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில் "நான் இப்போது மதுரை மேல பொன் நகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை. இதனால் மாத மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரம நிலையில் உள்ளேன். எனவே மதுரை ராஜாக்கூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரியிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த நன்மாறன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நான் இப்போது மதுரை மேல பொன் நகரத்தில் வசித்து வருகிறேன். எனக்கு நிரந்தரமாகக் குடியிருக்க வீடு இல்லை. எனவே மதுரை ராஜாக்கூரில் அரசாங்கம் சார்பில் கட்டித்தரப்படும் குடியிருப்பில் இலவச வீடு கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளேன்" என்றார்.
மேலும், அவரிடம் நீங்கள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள், உங்களுக்கு சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், கட்சியிலும், நண்பர்களிடமும் உதவி ஏதும் கேட்டீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சிரித்துக்கொண்டே நான் யாரிடமும் கேட்கவில்லை எனத் தெரிவித்துவிட்டு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார். இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தும், நன்மாறன், தனக்கு வீடு ஒதுக்கித் தரும்படி மனு கொடுக்க வரிசையில் நின்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.