03/09/2020
சுதந்திரப் போராட்டமும் தமிழர்களும் - பாகம் 2 | Freedom Fighters in Tamilnadu Part 2
சுதந்திரப்போராட்டமும் தமிழர்களும்
1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்தியநிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன. அதில் தமிழர்கள் ஆற்றிய பங்கு மிகப் பெரியது.
விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். சுதந்திர வரலாற்றில் வாழ்வாங்கு வையத்துள் வாழ்ந்த தமிழர் தம் பங்களிப்பு தலையாயதும் தவிர்க்க முடியாததுமாக உள்ளது. விடுதலைக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த தியாகிகளை இங்கே நாம் நினைவு கூர்வோம்.
விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழர்கள்
சுப்பிரமணிய பாரதி - Subramania Bharati
(டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
சுப்பிரமணிய சிவா - Subramaniya Siva
(4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925)
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 'சிவா' என்று
அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்தமேடைப்பேச்சாளர், சிறந்த பத்திரிகையாளர் ஆவர். வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
திருப்பூர் குமரன் - Tiruppur Kumaran
(அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932)
இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும்
அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் நடத்த போராட்டத்தில் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.
செண்பகராமன் பிள்ளை - Chempakaraman Pillai
(செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934)
தமிழகத்தைச் சார்ந்த விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு
ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். ஹிட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். 'ஜெய் ஹிந்த்' எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார்.
வ. உ. சிதம்பரம்பிள்ளை - V. O. Chidambaram Pillai
(செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)
வ. உ. சி என்றழைக்கப்படும் சிதம்பரம்பிள்ளை தூத்துக்குடி மாவட்டம். ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். பிரித்தானியக் கப்பல்களுக்கு போட்டியாக உள்நாட்டில் முதல் இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். பிரித்தானிய அரசால்
தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
திரு. வி. கலியாணசுந்தரனார் - Thiru. V. Kalyanasundaram
(ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும்
சிற்றூரில் பிறந்தார். தொழிற்சங்கத்தைத்
தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம் சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார். இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
ப. ஜீவானந்தம் - P. Jeevanandham
(ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963)
நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார். வைக்கம் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் பங்கேற்றவர். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
முத்துராமலிங்கத் தேவர் - U. Muthuramalingam Thevar
(அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963)
தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் பிறந்தார். ஆன்மிகவாதியாகவும்,சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ்
சந்திரபோசின் தலைமையில் நடந்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பியவர்.
முகம்மது இசுமாயில் - Muhammad Ismail
(சூன் 5, 1896 - ஏப்ரல் 5, 1972)
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் திருநெல்வேலியைச் சார்ந்த பேட்டையில் பிறந்தவர். தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா
காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத்
துவங்கினார்.
காமராசர் - K. Kamaraj
(சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975)
காமராசர் விருதுநகரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின் நாளில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என புகழ்வர்.
பி. கக்கன் - P. Kakkan
(சூன் 18, 1908– டிசம்பர் 23, 1981)
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். கக்கன் தனது பள்ளி
மாணவப்பருவத்திலேயே விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். கோயில் நுழைவு போராட்டத்திலும் , ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
ம. பொ. சிவஞானம் - M. P. Sivagnanam (Ma.Po.Si)
(சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995)
சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழ் மேதையும் ஆவார். சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர் நிலப்பரப்பிற்க்காக பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். திருப்பதி, பீர் மேடு, தேவிக்குளம் போன்ற ஊர்களை தமிழர் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடினார்.
https://youtu.be/6c7YR0oqhZM
1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. எனினும் தென்னிந்தியாவில் அதற்...