30/09/2022
அறத்தை மீறும்
அறங்காவலர் சபை
ஆலயம் தொழுவது சாலவும் நன்று கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் போன்ற முதுமொழிகள் ஆன்மிகத்துக்கும் மக்களுக்குமான தொடர்புகளைத் துல்லியமாகக் கோடிட் டுக் காட்டுகின்றன. ஒரு சமூகத்தின் வழிகாட்டியாக இருக்கும் சில ஆலயங்களில் நடைபெறும் சில திருகுதாளங்கள் வெளியே தெரிவதில்லை.
கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என பராசக்தி படத்தில் கலை ஞர் கருணாநிதி எழுதிய வசனம் 70 வருடங்கள் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கிறது.
'துன்பப்படுறவங்க எல்லாம் அந்தக் கவலையை தெய்வத்துக்குக்கிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா? அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?' என்ற சினிமாப்பட வசனம் ஒரு சில இடங்களில் பொருந்துவதாக உள்ளது. நம்மைச் சுற்றி இருக்கும் ஆலயங்களில் தனியார் ஆலயங்கள், ஊருக்குரிய ஆலயங்கள், பொது ஆலயங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வானளாவிய கோபுரங்கள், மாடமாளிகைகள், கட்டுமானங்கள் எனப் பல ஆலயங்கள் சிறப்பாக உள்ளன.
ஆனால், ஆலயத்துக்குள் நிலவும் அதிகாரப் போட்டிகள், பொறாமைகள், குத்து வெட்டுகள் வெளியிலே அதிகம் பகிரப்படுவதில்லை. ஒவ்வொரு ஆலயத்துக்குமென யாப்புகள் உள்ளன. கட்டுமாணப்பணிகள், வரவு, செலவுகள் எப்படி இருக்க வேண்டும் என யாப்பிலே வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த யாப்பு விதிகள் எல்லாம் ஒரு மூலையிலே தூக்கி வீசப்பட்டு பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. இவற்றை தட்டிக் கேட்க வேண்டிய பிரதேச செயலகங்கள் மெத்தனப்போக்காக நடப்பதால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆலய நிர்வாக சபைகளுக்கு எதிரான வழக்குகள் பல நீதிமன்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. மோசடி கள், முறையற்ற வரவு, செலவுக் கணக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த மோசடிகளை வெளியே கொண்டு வருபவர்களின் மீது சேறு பூசும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
வடமராட்சியின் புகழ் பூத்த வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவிலானது 1972 ஆம் ஆண்டு TR.72 என்ற வழக்கின்படி பொது ஆலயமாக ஆக்கப்பட்டது. பொது ஆலயம் ஆக்கப்படும் வேளையில் அரசாங்க அதிபரினால் அமைக்கப்பட்ட குழுவானது ஊர் பெரியவர்களுடனும் புத்திஜீவிகளுடனும் இணைந்து இவ் ஆலயத்துக்கான 45 பிரிவுகளை உள்ளடக்கிய யாப்பு ஒன்றினை உருவாக்கினார்கள்.
ஆலயத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக மகாசபைச் செயலாளர் சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்தக் கருத்துகளின் அடிப் படையிலேயே எமக்குக் கிடைத்த தகவல்களை இங்கு பகிரங்கப்படுத்தியுள்ளோம். இவ் யாப்பில் பிரதான ஆண்டு பொதுக் கூட்டம், ஆண்டு களுக்கு ஒருமுறை மகாசபைத் தெரிவுகள், மூன்று வரு டங்களுக்கு ஒருமுறை தர்மகர்த்தா சபைத் தெரிவுகள்,
தர்மகர்த்தா சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வடமராட்சியை நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும். அங்கத்தவர்கள் வெற்றிடங்கள் ஏற்படுகின்ற வேளையில் நிகழ்ச்சிநிரல் எந்த அங்கத்தவர் வெற்றிடம் உள்ளது எனச் சுட்டிக்காட்டி நிகழ்ச்சிநிரல் அமைத்து மகாசபையின் அங்கீகாரம் பெற்ற அங்கத்தவர்களை நிரப்புதல் மற்றும் மிகவும் முக்கியமான சரத்துக்களில் ஒன்றான ஆண்டு கணக்கறிக்கையானது மகாசபையிடம் அடுத்த நிதியாண்டில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். மகாசபையானது கூட்டப்படாதவிடத்து ஆண்டு கணக்கறிக்கை யானது பத்திரிகையில் பிரசுரிக்கப்படல் வேண்டும். இவ்விதம் மிகவும் செவ்விதமாக இதன் நிர்வாகங்கள் ஆரம்ப காலத்தில் இயங்கிக் கொண்டிருந்தன.
*யாப்புகள் மீறத் தொடங்கிய காலப்பகுதி *
80களின் இறுதியும் மற்றும் 90களின் ஆரம்பங்களிலும் இருந்து இவ் யாப்பு படிப்படியாக மாற்றம் பெற்றோ நீக்கம்பெற்றோ யாப்பிற்கு முரணாக இவ்வாலயம் இயங்கத் தொடங்கியதுடன் ஆலயத்தின் ஆண்டு அறிக்கை, கணக்கறிக்கை, அங்கத்துவத் தெரிவுகளுக்குரிய வழிமுறைகள் பின்பற்றப்படலோ எதுவுமே நடைபெறாது ஆலய நிர்வாகம் சீரழியத் தொடங்கியது. குறிப்பாக, 1975 ஆம் ஆண்டில் இருந்து 2002 ஆம் ஆண்டு வரை 48 மகாசபைக் கூட்டங்கள் நடைபெற்று இருக்க வேண்டிய நிலையில் இதுவரை 30 கூட்டங்களே கூட்டப்பட்டு இருக் கின்றது. அதேவேளை மகாசபையும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகியது போல் 1987 - 1988 காலப்பகுதியில் 635 பேராக இருந்த மகாசபை அங்கத் தவர்கள் 2014 ஆம் ஆண்டளவில் மஹோற்சவ உறுப்பினர்களை மட்டும் உள்ளடக்கிய 42 பேராக மட்டுமே காணப்படுகின்றது. இதில் பரம்பரை உறுப்பி னர்களாகவும் ஆயுட்கால அங்கத்துவ உறுப்பினர்களாகவும் இணைந்து கொண்ட வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் உள்ள புத்திஜீவிகளும் செல்வந்தர்களும் எல்லாம் எவ்வாறு காணாமலும் விலக்களிக்கப்பட்டனர் என்பதும் உரிய முறையில் அவர்களுக்கு அறிவிக்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளனர். ஜி.ஜி.பொன்னம்பலத்திற்குரிய தேர்த்திருவிழா வேறு ஒருவருக்கு கைமாற்றப்பட்டுவிட்டது. இது தொடர்பாக அவரின் பேரன் கஜேந்திரகுமார் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆண்டு கணக்கறிக்கையானது அடுத்த நிதியாண்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலையில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை என்று காண்பிக்கப்பட்டு தற்போது கடந்த 9 வருடங்களுக்கு மேலான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.
யாப்பிற்கு முரணான நிர்வாக முறையும் சீர்திருத்த முடியாத காரணிகளும்
30 ஆண்டுகளாக தர்மகர்த்தா சபைத் தலைவராக ஒருவரையே திரும்பத் திரும்ப நியமிக்கப்பட்டு 635 பேராக இருந்த மகாசபை உறுப்பினர்கள் இன்று 1000 பேர் வரை இருக்க வேண்டிய மகாசபை உறுப்பினர்கள் வெறும் 42 பேராக மட்டுமே காணப்படுகின்றனர். அதிலும் பலர் எவ்வாறு இதற்குள் உள்வாங்கப்பட்டனர் என்பதற்கான ஆவணங்களும் இல்லை.
இந்நிலையில் மகாசபையில் இருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் இவர்களுக்கு எதிராக 30 ஆண் டுகளுக்கு பின் துணிந்து கேள்வி கேட்கத் தொடங்கினர். அதனடிப்படையில் 2019 இல் மகாசபையில் சிரேஷ்ட உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து விஸ்னுகாந்தன் என்பவராலும் இவர்களுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரதேச செய லருக்கு ஊடாக முன்னகர்த்தினர். இந்தக் குற்றச்சாட் டுக்களை ஆராய்ந்து பிரதேச செயலர் இணக்கமாக தீர்வு காணுங்கள் என்று கூறிய நிலையில் அவரால் அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் தன்னைத் தலைவராக ஆக்கிக் கொண்டு தான் உட்பட தன்னோடு ஐந்து பேரை தர்மகர்த்தா சபைத் தலைவராகவும் தெரிவு செய்து கொண்டார்.
இதன் பின் உரிய எந்த முறையும் பின்பற்றப்ப டாமல் தான் அவசர அவசரமாக பழைய நிர்வாகத்திடம் பொறுப்பெடுத்தார்கள் கோவில் ஆதனங்கள், கணக்கறிக்கைகள், நகைகள், சொத்துக்கள் என்பன உரிய முறையில் பொறுப்பெடுக்காமையினாலும் இவற்றை தவிர்த்தும் மூடிமறைத்தும் மறுபடியும் இயங்கிக் கொண்டு இருப்பதனால் இவருடன் இணைந்து செயற்பட்ட ஏனையோருக்கு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இதன் நிமிர்த்தம் தற்போதைய மகாசபைத் தலைவர் செயலாளர் என்ற முறையில் உரிய மகாசபை உறுப்பினர்களுக்கு அறிவித்து 2021.04.24 அன்று மகாசபைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்திலே பங்கு பற்றிய பழைய சிரேஷ்ட உறுப்பினர் ஆலயத்தின் சீர்கேடுகளின் தன்மை குறித்து ஆராய்ந்து இக்கோவிலை உரிய யாப்பு விதிகளுக்கு உட்பட்டு இயங்கச் செய்வதற்காக ஓர் ஆண்டிற்கான நிர்வாக சபையை நிறுவினர். ஆனால், அந்த முன்னெடுப்புக்களில் முதலில் அவர்க ளுடன் இருந்து விஸ்னுகாந்தன் தற்போது தான் தலைவர் என்ற முறையில் இக்கோவிலை யாப்புக் குள் கொண்டு வரவேண்டும் என்று இவருடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கு எதிராகவே நீதிமன்றம் சென்று அவர்கள் தெரிவு செய்த நிர்வாக சபைக்கு எதிராகவும் பிரதேச செயலருக்கு எதிரா கவும் நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு , தடையாணையும் பெற்று இருக்கிறார்.
தீர்வுத்திட்டம்
இவ்விடயங்களை ஆராய்ந்து பார்க்கும்பொழுது கோவிலானது யாப்பு விதிகளுக்கு மீறி அப்பட்ட மாகச் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவற்றை சீர்செய்வதற்கும்
கோவிலை யாப்பின் விதிகளுக்கு அமைவாக இயங்கச் செய்வதற்கும் ஆளுநர் மற்றும் அரச அதிபர் இணைந்து ஒரு சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து இதற்கு ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
01.1.2022 தீம்புனல் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை