19/09/2024
15 பாவங்களும், அவற்றுக்கான பயங்கர தண்டனைகளும்!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اتُّخِذَ الفَيْءُ دُوَلاً، وَالأَمَانَةُ مَغْنَمًا، وَالزَّكَاةُ مَغْرَمًا، وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ، وَعَقَّ أُمَّهُ، وَأَدْنَى صَدِيقَهُ، وَأَقْصَى أَبَاهُ، وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ، وَسَادَ القَبِيلَةَ فَاسِقُهُمْ، وَكَانَ زَعِيمُ القَوْمِ أَرْذَلَهُمْ، وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ، وَظَهَرَتِ القَيْنَاتُ وَالمَعَازِفُ، وَشُرِبَتِ الخُمُورُ، وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا، فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ، وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ.
(سنن الترمذي 2110، والمعمجم الكبير للطبراني مع بعض الزيادة)
பதினைந்து பாவங்களும், அவற்றுக்கான தண்டனைகளும்.
(எனது “உம்மத்” - சமூகத்தில் பின்வரும் 15 விடயங்கள் - பாவங்கள் நடக்குமாயின் அவ்வேளை சிவந்த காற்றை - நெருப்புக் காற்றையும், நில நடுக்கத்தையும், பூகம்பத்தையும், உரு மாற்றத்தையும், கல் மழையையும், இன்னும் சில அடையாளங்களையும் எதிர்பாருங்கள். அவை பல மணிகள் கோர்க்கப்பட்ட ஒரு நூலை அறுத்துவிட்டால் - துண்டித்து விட்டால் அதிலுள்ள மணிகள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து சரிந்து வருமோ அவ்வாறு அவை வரும்) என்று கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: ஸுனனுத் துர்முதீ
பக்கம் 2110, முஃஜமுல் கபீர், தபறானீ
15 பாவங்களும் பின்வருமாறு.
01. “ஙனீமத்” என்பது ஒவ்வொருவரினதும் சொந்தப் பொருளாக ஆக்கப்படல்.
02. அமானிதம் ஒருவனின் அல்லது ஒரு குழுவின் சொந்தப் பொருளாக ஆக்கப்படுதல்.
03. “சகாத்” கடனாக ஆக்கப்படல்.
04. மார்க்கத்திற்காகவன்றி மார்க்க அறிவு கற்றுக் கொள்ளப்படல்.
05. கணவன் தனது மனைவிக்கு வழிப்படுதல்.
06. ஒருவன் தனது தாயை வேதனைப்படுத்தல்.
07. ஒருவன் தனது நண்பனை தனக்கு நெருக்கமுள்ளவனாக ஆக்கிக் கொள்தல்.
08. ஒருவன் தனது தந்தையை தன்னை விட்டும் தூரப்படுத்தல்.
09. பள்ளிவாயல்களில் சத்தங்கள் வெளியாதல்.
10. ஒரு கூட்டத்தை அவர்களில் கெட்டவன் தலைமை தாங்கி வழி நடத்துதல்.
11. ஒரு கூட்டத்தின் தலைவன் அவர்களில் தரம் குறைந்தவனாக இருத்தல்.
12. ஒருவனின் தீமையைப் பயந்து அவனை கண்ணியப்படுத்தல்.
13. பாடகிகளும், நாட்டியக் காரிகளும், இசைக் கருவிகளும் வெளியாதல்.
14. மதுபானம் அருந்ததல்.
15. முன்னோரைப் பின்னோர் சபித்தல்.
மேற்கண்ட 15 பாவங்களும் எனது “உம்மத்” சமூகத்தில் நிகழ்ந்தால் பின்வரும் விளைவுகளை எதிர்பாருங்கள்.
அவை - சிவப்புக் காற்று (நெருப்புக் காற்று), நில நடுக்கம், பூகம்பம், உரு மாற்றம், கல் மழை என்பனவாகும். அவற்றுடன் இன்னும் சில விளைவுகள்.
அதாவது பல மணிகள் கோர்க்கப்பட்ட ஒரு நூலை அறுத்துவிட்டால் அதிலுள்ள மணிகள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து சரிந்து விழுமோ அவ்வாறு தொடரான தண்டனைகள் இறங்கும்.
மேற்கண்ட 15 காரியங்கள் எனது “உம்மத்” சமுதாயத்தில் நிகழ்ந்தால் - எனது சமூகத்தவர்கள் அவற்றைச் செய்தால் மேற்கண்ட விளைவுகள் ஏற்படுமென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
அன்பிற்குரிய முஸ்லிம், முஸ்லிமல்லாத சகோதர, சகோதரிகளே!
மேற்கண்ட தலைப்பில் நான் நூல் ஒன்று எழுதி பல வருடங்களுக்கு முன்னால் அதை அச்சிட்டு அன்பளிப்பாக வழங்கியுள்ளேன். பலருக்கு கிடைக்காமலிருக்கலாம். அவர்கள் எமது கைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
நான் வெளியிட்ட நூலில் 15 விடயங்களுக்கும் தனித்தனியே விளக்கம் கொடுத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரையில் அதேபோல் விளக்கம் கொடுக்காமல் 15 விடயங்களில் 10ம், 11ம் விடயங்களுக்கும் மட்டும் சிறு விளக்கம் எழுதுகிறேன்.
10ம் விடயம்:
ஒரு கூட்டத்தை அவர்களில் கெட்டவன் தலைமை தாங்கி வழி நடத்தல்.
கூட்டம் என்ற சொல் ஒரு குழுவையும் உள்வாங்கிக் கொள்ளும்.
ஒரு கூட்டத்தை அவர்களில் கெட்டவன், அல்லது ஒரு சங்கத்தை அவர்களில் கெட்டவன் தலைவனாயிருந்து வழி நடத்துதல் மேலே சொல்லப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துவதற்கு காரணமாகும்.
உதாரணமாக ஒரு பள்ளிவாயல் தலைவர் குடி காரனாயும், விபச்சாரியாயும், தொழாதவனாயும், தீக்குணம் உள்ளவனாயும், நீதி தெரியாதவனாயும், ஆளுக்கு ஒரு சட்டம் சொல்பவனாயும், பொதுச் சொத்தில் கையாள்பவனாயும் இருப்பது போன்று. இவன்தான் மார்க்க அடிப்படையில் கெட்டவனாவான்.
“தரீகா”வின் “ஷெய்கு” என்ற பெயரில் மேலே கூறப்பட்ட பாவங்கள் செய்பவன் இருப்பதும் அடங்கும்.
ஒரு பள்ளிவாயலின் தலைவராக, ஒரு பாடசாலையின் தலைவராக, ஏதோ ஒரு சபையின், அல்லது சங்கத்தின் தலைவராக இருப்பவரும் இதில் அடங்கிவிடுவார்.
குறிப்பாக ஒரு நாட்டின் மன்னராக, அல்லது ஜனாதிபதியாக இருப்பவரும் இதில் அடங்கிவிடுவார்.
இன்று நமது இலங்கைத் திரு நாட்டிலும் மற்றும் உலக நாடுகளில் அநேக நாடுகளிலும் மேற்கண்ட நடைமுறைகள் இருந்தே வருகின்றன. இது நபீ மொழியில் கூறப்பட்ட தண்டனைகளும், சோதனைகளும் எப்போது இறங்குமென்று என் போன்றவர்களால் சொல்ல முடியாது. இதை நபீமார். வலீமார் மட்டுமே அறிந்து கொள்வர்.
11ம் விடயம்:
ஒரு கூட்டத்தின் தலைவர் அவர்களில் குல வழி அடிப்படையிலும், தொழிலடிப்படையிலும் தரம், அந்தஸ்து குறைந்தவராயிருத்தல்.
பெருமானார் அவர்களின் குல வழி அந்தஸ்து “குறைஷ்” வமிசமாகும். குல வழி அடிப்படையில் “குறைஷ்” வமிசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
“குறைஷ்” வமிசம் தவிர ஏனைய வமிசங்களில் பலர் குலவழி அடிப்படையில் சிறந்தவர்களாகவும், கண்ணியத்திற்குரியவர்களாகவும் இருக்கலாம்.
ஆயினும் சிலர் செய்கின்ற தொழிலைப் பொறுத்து அவர்கள் சமுக ரீதியில் தரம் குறைந்தவர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். பின்வருவோரும் சமூக ரீதியில் தரம் குறைந்தவர்களாக கணிக்கப்படுகிறார்கள். “கத்னா” செய்பவர்கள், முடி திருத்தும் வேலை செய்பவர்கள், பாதைகளைத் துப்பரவு செய்பவர்கள், கழிவறை சுத்தம் செய்பவர்கள், உயிரினங்களை அறுத்து வியாபாரம் செய்பவர்கள், வண்ணான்கள் போன்றவர்களாவர்.
முஸ்லிம்களில் சாதி வேற்றுமை கிடையாதென்றும், அது இந்துக்கள், பௌதர்களிடம்தான் உள்ளதென்றும் சிலர் சொல்கிறார்கள். இது சரியாயின் “ஸாதாத்”மார்களுக்கு தனிப்பட்ட கண்ணியம், கௌரவம் இருக்க முடியாது. முஸ்லிம்கள் தொன்று தொட்டு ஸெய்யித்மார்களை - நபீ குல வழி வந்தவர்களைக் கண்ணியம் செய்தே வருகின்றனர்.
சிலர் ஹஸனீ என்றும், சிலர் ஹுஸைனீ என்றும் சொல்கிறார்கள். இந்த விபரங்கள் மூலம் முஸ்லிம்களில் சாதி வேற்றுமை இருந்தாலும்கூட உயர் குல வழி வந்தவர்கள் கண்ணியம் செய்யப்படுவார்களேயன்றி இந்துக்களிடம் உள்ள சாதி வேற்றுமை போன்று உயர் குல வழி வராதவர்கள் ஒதுக்கப்படமாட்டார்கள். அவர்கள் கழித்தும், தூரப்படுத்தியும் வைக்கப்படமாட்டார்கள்.
விசுவாசிகளில் யாராவது குடித்து மிஞ்சிய நீரில் “ஷிபா” மருந்துண்டு என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். سُوْرُ الْمُؤْمِنِ شِفَاءٌ விசுவாசி குடித்து மிஞ்சிய நீரில் “ஷிபா” உண்டு என்றுதான் நபீ மொழி வந்துள்ளதே தவிர குலங்களை அடிப்படையாகக் கொண்டு நபீ மொழி வந்துள்ளதாக நான் அறியவில்லை.
நமது இலங்கைத் திரு நாட்டை ஆளப் போகின்ற ஜனாதிபதி யார் என்பது எதிர்வரும் 21ம் திகதிக்குப் பிறகுதான் தெரியவரும்.
நமது இலங்கைத் திரு நாடு செழிக்க வேண்டுமாயின், பஞ்சம் எதுவுமின்றி அது சிரிக்க வேண்டுமாயின், பொருளாதாரத்தில் மக்கள் உயர வேண்டுமாயின், சண்டை, “பித்னா”, யுத்தம் என்று மக்கள் பீதி அடையாமல் இருக்க வேண்டுமாயின் பாரபட்சமின்றி இலங்கை மக்கள் அனைவரையும் வழி நடாத்தக் கூடிய ஒருவர்தான் இந்நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும்.
நான் அரசியல்வாதியுமல்ல. எந்த ஒரு அரசியல் கட்சி பற்றும், பிடிவாதமும் உள்ளவனுமல்ல. யார் எந்தக் கட்சியில் எத் தேர்தலில் வேட்பாளராக வந்தாலும் அவர் நேர்மையானவரா? இல்லையா? அவர் பாரபட்சம் காட்டி ஆள்பவரா? இல்லையா? அவர் நாட்டையும், நாட்டு மக்களையும் வளர்ப்பவரா? அல்லது தன்னையும், தனது குடும்பத்தையும் வளர்ப்பவரா? இல்லையா? இழி குலத்தவனா? அல்லது உயர் குலத்தவனா? என்ற அம்சங்களை மட்டும் கவனித்தே ஆதரிப்பேன்.
இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்ரமசிங்ஹ ஐயா அவர்களை ஆதரிப்பதென்றுதான் நானும், எனது ஸூபிச சமூகத்தைச் சேர்ந்தவர்களும் முடிவு செய்துள்ளோம்.
இன்ஷா அல்லாஹ்! இலங்கையில் வாழும் மக்களில் எனது முரீதீன்களும், முரீதாத்துகளும் மற்றும் ஸூபிசத்தையும், இறைஞானத்தையும் நேசிக்கின்றவர்களும் என் வழியே அவர்களின் வழியாக இருக்குமென்று நான் நம்புகிறேன்.
முற்றும்.