27/10/2020
https://youtu.be/Xcfm-H4Yz3k
திரு. குணா அவர்களே!
செயற்குழு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் குழு. அதில் தலைமைப் பண்பின் மேல் மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்தவர்களே இருக்கிறார்கள். அவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்கிறதென்றே அவர்களுக்கு வாக்களித்தவர்களில் ஒருவனாக நம்புகிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்குணம் கொண்டவர்களுக்கு தங்களின் சிக்கலை தாங்களே தீர்க்கும் திறனும் இருக்கவேண்டும். உங்களின் செவிகளுக்கு எட்டிய சிக்கல், மன்றத்தின் முன்னோடிகளுக்கும் எட்டியிருக்கும். இதுபோன்றவை பொதுக்குழுவில் பேசப்படுவதுதான் நடைமுறை. மூத்த முன்னோடிகள் இந்தச் சிக்கலில் தலையிடாமல் அமைதி காக்கும்போது, “பெண்களைக் காப்பாற்ற யாருமே வரவில்லை” என்று நீங்கள் உங்கள் காணொளியில் சொல்லியிருப்பதன் நோக்கம் என்ன?
தமிழ்மன்றத்தின் செயற்குழு திறனற்றது என்று மன்றத்தை இழிவுபடுத்துவதா?
அல்லது தற்போதைய தேர்தலில் இந்தச் சிக்கலை முன்வைத்து வெற்றியைத் தேடிக்கொள்ளலாம் என்ற தன்னலமா?
உங்களுக்குப் போட்டியாக நிற்கும் வேட்பாளர் தற்போதைய செயற்குழு உறுப்பினர். அவரின் மேல் குற்றச்சாட்டுகள் இருப்பின், அவற்றைப் பேசவேண்டிய இடம் தேர்தல் களமா அல்லது பொதுக்குழுவா?
அப்படியே பேசினாலும் இருதரப்பையும் கேட்டறிந்து ஆய்ந்து தெளியாமல், தேர்தலில் உங்கள் போட்டியாளர் என்பதாலேயே அவர் மேல் பழிசுமத்தி வெற்றி பெற நினைப்பது என்னவிதமான மனநிலை?
முன்னாள் தலைவர் என்பதைத் தவிர 2020 ஆம் ஆண்டின் செயற்குழுவிற்கும், அதில் நடந்ததாக நீங்கள் சொல்லும் நிகழ்ச்சிகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளராக இருந்துகொண்டு இதைப் பொதுத்தளத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டிய நோக்கமும் அவசியமும் என்ன?
இச்செயல் பொதுவெளியில் மன்றத்தை இழிவுபடுத்துவதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
மேலும், பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு வாக்கு கேட்கும் உரிமையும் எண்ணமும் உங்களுக்கு எப்படி வந்தது? இது போன்ற பிரச்சனைகளை பொதுவெளியில் பரப்புவதுதான் தலைமைப்பண்பா?
மன்ற நலனைப் பின்னுக்குத்தள்ளி நீங்கள் விரும்புவதை மட்டும் செயல்படுத்தத் தயங்க மாட்டீர்கள் என்று எப்படி நம்புவது?
2020 ஆம் ஆண்டு செயற்குழுவில் இருக்கும் பெண்களை ஒருவர் ஆதிக்கமனப்பான்மையோடு அவமானப்படுத்தியதால், இந்தத்தேர்தலில் போட்டியிட பெண்கள் முன்வரவில்லை என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையாக இருந்தால், நீங்கள் குற்றம் சாட்டும் மனிதருடன் அணிசேர்ந்து, மகளிர் இருவர் இந்த தேர்தலில் களம் கண்டிருக்கமாட்டார்களே?
அதேபோல, “பெண்களின் மாண்பைக் காக்கவேண்டும்” என்று பரிந்து பேசும் உங்களை நம்பி பெண்கள் யாரும் களமிறங்கவும் இல்லையே? ஏன்?
மேலும், நீங்கள் நிற்பது தமிழ்மன்றத்தின் தேர்தல் களம். அதற்கென்று, வரைமுறைகளை தேர்தல் அதிகாரி வரையறுத்து இருக்கிறார். அதற்கு உட்பட்டு நடப்பது வேட்பாளராக உங்கள் கடமை. ஆனால், உங்களின் போட்டியாளரைத் தூற்றியிருப்பதன் மூலம், பின்வரும் இரண்டு விதிகளை நீங்கள் பகிரங்கமாக மீறியிருக்கிறீர்கள்:
2. I will not engage in a negative campaign against any other candidate.
3. I will not engage in negative propaganda against Tamil Manram, the Executive
Committee or the Election Office.
முகநூலில் இருந்து உங்கள் காணொளிப் பதிவை நீங்கள் நீக்கிவிட்டிருந்தாலும், அது பல வாட்சப் குழுமங்களில் இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டீர்கள். நீங்கள் நியாயமானவர் என்றால் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிடும் நேர்மை உங்களிடம் இருக்கிறதா?
தேர்தல் விதிமுறைகளையே மீறும் உங்களைத் தேர்ந்தெடுத்தால், மன்றத்தின் Bylaw-வை மீறிச் செயல்படமாட்டீர்கள் என்று எப்படி ஏற்பது?
நீங்கள் செய்திருப்பது அமெரிக்காவின் Exceptions to freedom of speech, first amendment-ன்படி ஒரு தனி மனிதரை பொது வெளியில் அவதூறு செய்து அவமானப்படுத்திய குற்றமாகும். இதனால், நீங்கள் வழக்கிற்குக்கூட உள்ளாக்கப்படலாம் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை! இருப்பினும், உங்கள்மீது உள்ள மதிப்பாலும், அக்கறையினாலும் தவிர்க்கமுடியாமல் இதைச் சுட்டிக்காட்டவேண்டியதாக இருக்கிறது. மன்னித்துக்கொள்ளுங்கள்!
அப்படி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் கூட அது உங்களோடு முடிந்துவிடாமல், இது போன்ற சர்ச்சைகளால் தமிழ்மன்றத்தின் மாண்பு கெடும் என்பதை நீங்கள் உணரவில்லையா?
இதையெல்லாம் சிந்தித்து தொலைநோக்கு சிந்தனையுடன்தான் இந்த காணொளியை வெளியிட்டீர்களா? உணர்ச்சிவயப்பட்டு காணொளி வெளியிடும் குணம் கொண்ட ஒருவரை, தேர்தல்களத்தில் பிறரைக் குற்றம்சாட்டி “நான் நல்லமனிதன்” என்று காட்டிக்கொள்ளும் குணம் கொண்ட ஒருவரை, என்போன்ற சாதாரண மன்ற உறுப்பினர் எப்படித் தேர்ந்தெடுப்பது?
இந்தக்கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டு மையத்தைப் பற்றியும் அரசியலமைப்புச்சட்டம் பற்றியும் உங்கள் காணொளியில் குறிப்பிட்டிருந்தீர்கள். சென்ற ஆண்டு வரை திரு. மணி மணிவண்ணன் அவர்கள் பொறுப்பேற்ற குழுவில் (TCC ByLaw Committee ) தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் அரசியலமைப்புச்சட்டத்தை எழுதவும், அதை ஒரு வடிவத்திற்கு கொண்டு வரவும் கூட்டங்களைக் கூட்டி சில வேலைகள் நடந்துகொண்டிருந்தது. நீங்களும் அந்த குழுவில் ஆரம்பத்திலிருந்து இருக்கிறீர்கள். அவர் தன் தனிப்பட்ட காரணங்களுக்காக பொறுப்பினைத் துறந்த பிறகு அக்கூட்டங்கள் நடக்கவில்லை. நீங்கள் வெளிக்காட்டிக்கொள்வதுபோல மன்ற நலனில் அக்கறையிருந்தால், தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மீது அக்கறையிருந்தால், தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய தன்னலமற்றத் தலைமைப் பண்பிருந்தால், இந்த ஆண்டில் அக்கூட்டங்களை நீங்கள்கூட பொறுப்பேற்று தொடர்ந்து நடத்தியிருந்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. இப்படியே ஒரு வருட காலத்தை கடத்திவிட்டு, விட்டுசென்ற வேலைகளை செய்து முடிக்கவே மன்றத்தின் தலைமைப்பொறுப்புக்குப் போட்டியிடுகிறேன் என்று சொல்லி வேட்பாளராக நின்று வாக்குக்கேட்கிறீர்களே, இது உங்களுக்கே நேர்மையாகப்படுகிறதா?
உங்கள் தலையாய கொள்கையாக “தமிழ்ப் பண்பாட்டு மையத்தை சீரமைக்கும் பணிகளை செய்வேன்” என்று இந்த காணொளியில் சொல்லியிருக்கும் நீங்கள், இந்த வருடத்தில் அதற்காக என்ன செய்தீர்கள் என்பதை ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை? அதிகாரமும் பதவியும் இருந்தால் மட்டும்தான் தொண்டு செய்ய முன்வருவீர்களா?
மன்றத்திற்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்பதையும், இனி பொறுப்பேற்றால் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதையும் மட்டும் எடுத்துச்சொல்லி வாக்கு கேட்டிருந்தால், தேர்தல் விதிகளை மீறாமல் இருந்திருந்தால், மன்றத்தலைவர் பொறுப்புக்கு நிற்கும் உங்களுக்கு வாக்களிக்க நினைத்திருப்பேன். மாறாக, மற்றவரைத் தூற்றி மட்டுமே வாக்குகேட்கும் உங்களுக்கு நான் எந்த அடிப்படையில் வாக்களிப்பேன்?
இவ்வாறு வாக்கு கேட்கும் உங்களுக்குத் தலைமைக்குணம் இருக்கிறது என்று நீங்களே நம்புகிறீர்களா?
உங்களின் இந்த நிலைப்பாடு எந்த வகையில் அறமாகும்?
நன்றி!
தண்டபாணி பொன்னுரங்கம்
26 அக்டோபர் 2020