15/07/2020
ஒரு சமூகம் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும், தனி மனிதர்களும்/தலைவர்களும் தன்னால் ஆனவற்றை செய்து இந்த சமூகத்தை உந்தி தள்ளுகின்றனர். அப்படி பல்வேறு பணிகளை/சாதனைகளை செய்து இந்த தமிழ்த்திரு நாடு தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு பெரும் பங்காற்றியவர் பெருந்தலைவர் காமராஜர்..!
காமராஜர் அவர்களின் முதல் மற்றும் முக்கியமான பள்ளிக் கல்வி பணி.. தமிழ் நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் கல்வி போய் சேர வேண்டும் என்று அயராது உழைத்தார். அதில் ஒரு முக்கிய அம்சமாக, இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். இது பல கால கட்டங்களில் பல பரிணாமங்களைக் கடந்து இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது!
மின்சாரம் மற்றும் நீர் மேலாண்மையின் தேவையை உணர்ந்து கொண்டு மணிமுத்தாறு, வைகை, அமராவதி, சாத்தணூர் போன்ற பல்வேறு அணைகளை கட்டியமைத்தார்.
முதலமைச்சர் தேர்வில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்ரமணியம், அவரை முன்மொழிந்த பக்தவத்சலம் ஆகியோரை தன்னுடைய அமைச்சரவையில இணைத்துக் கொள்ளும் அளவிற்கு அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் நாகரிகம் கொண்டவராக இருந்தார்.
ஒரு காலகட்டத்திற்கு மேல், ஆட்சிப் பணிகளை விட கட்சிப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மற்ற தலைவர்களையும் ஆட்சிப் பணிக்கு வருமாறு அறிவுறுத்தினார் (‘K’ plan)..! இவருடைய இந்த தொலை நோக்கு பார்வைதான், பின்னாளில் இவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆவதற்கும், பிரதமரை தேர்ந்தெடுக்கும் (King Maker) இடத்தை அடைவதறுகும் வித்திட்டது..!
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது எதிரணியில் இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களே, காமராஜர் வெற்றி பெற்று வர வேண்டும் என்று எழுதிய அளவிற்கு அனைவராலும் நேசிக்கப்பட்டவராக இருந்தார்..!
பெருந்தலைவரின் பிறந்த நாளில் அவரது நினைவுகளைப் போற்றுவோம்!
❤️❤️❤️