02/06/2025
2025 -அனைத்துலக தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பத்துமலைத் தமிழ்ப்பள்ளி வெற்றி வாகை சூடியது.
2 தங்கம் , 6 வெள்ளி பதக்கங்கள்
இம்மாதம் 29 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை தலைநகரில் உள்ள KLCC கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 36 ஆவது அனைத்துலக கண்டுபிடிப்பு புத்தாக்க தொழில்நுட்ப கண்காட்சியில் (ITEX -WYiE) பத்துமலைத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். பள்ளியின் அறிவியல் பாடக்குழுவின் தலைவி ஆசிரியை சாந்தி அச்சையா மற்றும் அனுபவமிக்க அறிவியல் ஆசிரியர் குழுவினரால் இம்மாணவர்கள் சுமார் மூன்று மாதக் காலங்கள் பயிற்சியை மேற்கொண்டு இவ்வெற்றியை அடைந்துள்ளனர். பள்ளியைப் பிரதிநிதித்து மாணவர்கள் எட்டு குழுக்களாகத் தங்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி நீதிபதிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். அவ்வகையில், புதுமையான முறையில் தங்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்காக இவர்கள் 2 தங்கம் மற்றும் 6 வெள்ளி பதக்கங்களை
வென்றுள்ளனர். நேற்று 31/05/2025 KLCC கண்காட்சி மையத்தில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. பத்துமலைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இப்போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி வாகை சூடுவதில் பள்ளியின் நிர்வாகம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் உயரிய வெற்றிக்குப் பள்ளியின் அறங்காவலர் டான் ஶ்ரீ டாக்டர் R.நடராஜா, மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம்,முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களும் எந்நேரமும் பக்கபலமாய் இருப்பதாக தலைமையாசிரியை திருமதி சரஸ்வதி த/பெ செங்கல்ராயன் அவர்கள் உறுதியாகக் கூறினார்.