17/11/2025
சூழல் அநீதியின் பிடியில் புத்தளம்: மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள்.
இலங்கையின் கரையோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ள புத்தளம் மாவட்டம், இன்று தனது வரலாற்றில் கண்டிராத ஒரு பாரிய சுற்றாடல் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசுகளால் பல தசாப்தங்களாக அவதியுற்று வரும் நிலையில் அதன் மக்களுக்கு, தற்போது மிக அபாயகரமான கட்டம் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே நீடித்த சுற்றுச்சூழல் அழுத்தத்தால் (Chronic Environmental Stress) பாதிக்கப்பட்டிருக்கும் அருவைக்காட்டு பகுதியில் கொழும்பின் கழிவுகளை கொட்டும் திட்டத்தை செயல்படுத்துவதானது அவ்வாறான ஒன்றாகும். இங்கு நிகழ்வது ஒரு சாதாரண கழிவு முகாமைத்துவத் திட்டம் மட்டுமல்ல, மாறாக, "தனது தவறுகளிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ளுமா?" என்பதைச் சோதிக்கும் ஒரு அரசியல் மற்றும் சுற்றாடல் பரிசோதனையாகும்.
முடிவின்றி குவியும் சுற்றாடல் சுமை…...!
புத்தளத்தின் சுற்றுச்சூழல் சார் வரலாற்றிலிருந்து அருவக்காடு திட்டத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அனல்மின் நிலையம் ஆயிரக்கணக்கான தொன் நுண்துகள்களையும் (Particulated Matter) கந்தகவீரொக்சைட்டையும் (Sulphur Dioxide) வெளியிடுகிறது, இது மக்களிடையே சுவாச மற்றும் இதய நோய்களின் விகிதத்தை அதிகரித்துள்ளது. மறுபுறம், சீமெந்து தொழிற்சாலைகள் பார உலோகங்கள் (Heavy Metals) கலந்த தூசைப் பரப்புகின்றன, இது காற்றை நச்சுப்படுத்துவதோடு மண் மற்றும் நிலத்தடி நீரிலும் கலக்கின்றது. இவையனைத்தும் ஒருங்கிணைந்து, புத்தளத்தை இலங்கையின் மிகவும் மாசடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.
இவ்வாறாக நஞ்சூட்டப்பட்ட நிலத்தின் மீது, ஒரு பாரிய கழிவு மேட்டைக் கூட்டுவது என்பது, சுற்றுச்சசூழல் சுமையை அபாயகரமான மட்டத்திற்கு உயர்த்துவதாகும். கழிவுகளிலிருந்து உருவாகும் "கழிவு நீர்" (Leachate) காப்பு முறைகள் (Insulation systems) எவ்வளவு மேம்பட்டதாக இருப்பினும், நுண்துளைகள் கொண்ட சுண்ணாம்புக் கல் (Porous Limestone) ஊடாக அது நிலத்தடி நீரைச் சென்றடையும். இது குடிநீர் மற்றும் விவசாய வளங்களின் தவிர்க்க முடியாத அழிவையும், புத்தளம் களப்பு மற்றும் கல் ஓயா ஈரநிலப்பகுதியின் பல்வகைமை கொண்ட வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும். இங்குள்ள கண்ணுக்குத் தெரியாத விஞ்ஞான அபாயம் மற்றும் பிரதான சவால் கழிவுகளின் துர்நாற்றமோ அல்லது தோற்றமோ அல்ல, மாறாகக் கசிவின் பின்னணியில் உள்ள மறைமுக இரசாயனவியல் (Hidden Chemistry) ஆகும். இந்தக் கழிவு நீரில் ஈயம் (Lead), இரசம் (Mercury) மற்றும் அமோனியா (Ammonia) போன்ற சேர்வைகள் உள்ளன. இவை சுண்ணாம்புக் கற்களின் நுண்துளைகள் வழியாக விரைவாக ஊடுருவி, நிலத்தின் ஆழத்திற்குச் சென்று, பல தசாப்தங்களுக்கு நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. கழிவு மேட்டின் அடிப்பாகத்தில் (Liner) ஏற்படும் ஒரு சிறிய தவறு கூட, நிலத்தடி நீர் வளத்தை ஒரு நச்சுக் களஞ்சியமாக மாற்றி, ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் விவசாய நிலங்களையும் அச்சுறுத்தும். இது கண்களுக்குப் புலப்படாத, ஆனால் தலைமுறைகளுக்கு நீடிக்கும் ஒரு மாசடைவாகும்.
ஆட்சி மற்றும் நீதியின் நெருக்கடி:
புத்தளத்தின் சுற்றுச்சூழல் துயரமானது, சுருக்கமாக, ஒரு ஆட்சி நிர்வாக நெருக்கடியின் (Governance Crisis) பிரதிபலிப்பாகும். தேர்தலுக்கு முன்பு இத்திட்டத்தை நிறுத்துவதாக அதிகாரிகள்/ அரசியல்வாதிகள் உறுதியளித்தனர், ஆனால் அதனைச் செயல்படுத்த நிதி ஒதுக்கியதன் மூலம், அரசுக்கும் சமூகத்திற்கும் இடையிலான சமூக ஒப்பந்தத்தின் (Social Contract) பலவீனத்தை வெளிப்படுத்தினர். கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே (Waste at Source) முகாமைத்துவம் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, அரசியல் ரீதியாக எளிதானதும், சுற்றாடல் ரீதியாக மிகவும் அபாயகரமானதுமான ஒரு தீர்வை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது: அதாவது, பிரச்சினையை தலைநகரிலிருந்து விளிம்பு நிலப் பகுதிக்கு மாற்றுவது.
இந்த முடிவை, "மையத்திற்கும்" "விளிம்பிற்கும்" இடையிலான அதிகாரம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் சமநிலையற்ற பகிர்விலிருந்து பிரிக்க முடியாதுள்ளது. தலைநகரம் (மையம்) தனது கழிவுகளை அகற்றி விடுகிறது, அதே நேரத்தில் புத்தளம் (விளிம்பு) நிதி மற்றும் நிர்வாகத் திறமையின்மையின் விலையைக் கொடுக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட சுற்றாடல் அநீதி (Environmental Injustice) என்பதன் தெளிவான வடிவமாகும், இதில் பொருளாதார நலன்களும், ஒன்றுபட்ட உள்ளூர் குரலின்மையும் குறுக்கிடுகின்றன.
அறிவியல் மற்றும் அரசியல் ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் இதன் தாக்கத்தை எதிர்கொள்வது இன்னமும் சாத்தியமே – ஆனால், அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, இத்திட்டத்தின் விலையானது பில்லியன் ரூபாய்களில் அல்ல, மாறாக மக்களின் உயிர்களிலும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திலுமே அளவிடப்படும் என்பதை முடிவெடுப்பவர்கள் உணர வேண்டும்.
பின்வருவன உடனடியாகத் தேவைப்படுகின்றன:
• திட்ட அமுலாக்கத்தைக் கண்காணிக்கவும், நீர் மற்றும் மண்ணின் தரத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்யவும் ஒரு சுயாதீனமான விஞ்ஞானக் குழுவை (Independent Scientific Committee) அமைத்தல்.
• கண்காணிப்பின் முடிவுகளை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவித்தல்.
• அனல்மின் நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளின் வருவாயில் ஒரு பகுதியை, புத்தளம் மக்களுக்கான நிரந்தர சுற்றாடல் சுகாதார நிதிக்கு (Environmental Health Fund) ஒதுக்குதல்.
• கழிவு உற்பத்தியைக் குறைத்தல் (Reduction), மீள்சுழற்சி (Recycling) மற்றும் கழிவுகளை அவை உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கு அருகிலேயே சக்தியாக மாற்றுதல் (Waste-to-Energy) ஆகியவற்றின் மூலம், கொழும்பு நகருக்குள்ளேயே கழிவுகளை மூலத்தில் முகாமைத்துவம் செய்வதற்கான ஒரு துணிச்சலான தேசியத் திட்டத்தை ஆரம்பித்தல்.
அபிவிருத்தி என்பது இருப்புக்கான அச்சுறுத்தலாக மாறும் போது, புத்தளத்திற்குத் தேவை புதிய வாக்குறுதிகள் அல்ல, மாறாக அபிவிருத்தி என்பதன் அர்த்தத்தை மறுவரையறை செய்யும் ஒரு அரசியல் உறுதிப்பாடு (Political Will) ஆகும். இந்த நிலை தொடர்ந்தால், இன்று நடப்பது இலங்கையின் வரலாற்றில் ஒரு "அபிவிருத்தித் திட்டம்" என்று பதியப்படாது, மாறாக, இந்நாட்டின் சுற்றாடல் நீதியின் (Environmental Justice) சரிவிற்கான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே பதியப்படும்.
என் புத்தள சமூகம் மற்றுமல்ல, எந்த சமூகமும் உத்தியோகப் பூர்வமாக பாதிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் எழுதுகிறேன்.
Ash-Sheikh Ahsan Muhajiri
Master Research Student in Education, جامعة الملك خالد_King Khalid University (KSA)