09/08/2022
கல்குடா சமூகம் விழித்துக்கொள்ளுமா?
போதையின் மத்திய நிலையமாக மாறி வரும் கல்குடா : ஒரு வருடத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது
ஐந்து தினங்களில் போதைப்பொருளுடன் ஐவர் கைது : பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு
கல்குடா பிரதேசத்தில் கடந்த ஐந்து தினங்களில் சுமார் ஐவருக்கும் மேற்பட்டோர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 2022.08.05ம் திகதி 2 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதை மாத்திரைகள்
44 ஆகியவற்றுடன் 58 வயதுடைய சந்தேக நபரொருவர் பிறைந்துரைச்சேனையிலும்,
2022.08.06ம் திகதி 5 கிராம் ஐஸ் போதைபொருளுடன் 45 வயதுடைய சந்தேக நபர் மாவடிச்சேனையிலும்,
2022.08.03ம் திகதி 6 கிரம் ஐஸ் போதைபொருளுடன்
46 வயதுடைய சந்தேக நபர் பிறைந்துரைச்சேனையிலும்,
2022.08.07ம் திகதி
7 கிரம் 360 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 7 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்
27 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் வாழைச்சேனையிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிகக்குறுகிய காலத்தினுள் ஒரே பிரதேசத்தினுள்
ஐந்து போதைப்பொருள், போதை மாத்திரை வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஐஸ்
ஹைரோயின் போன்ற போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதை வைத்து நோக்குமிடத்து எந்தளவு போதைப்பொருள், போதை மாத்திரை வியாபாரமும் விற்பனையும் எமது பிரதேசத்தில் வியாபித்துள்ளதென்பதை நினைத்துப் பார்க்க ஒவ்வொரும் தலைப்பட்டுள்ளோம்.
கடந்த ஒரு வருட காலத்தினுள் சுமார் 100 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
பெருந்தொகையான போதைப்பொருட்களும்
மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத்தகவலுக்கமைய விஷேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புத்தரப்பினரின் அர்ப்பணிப்பான தொடர் நடவடிக்கை காரணமாக போதை வியாபாரிகளும் பாவனையாளர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கட்டுக்கடங்காமல் போய் விட்டதனை உணர முடிகின்றது.
ஏன் இதனை எம்மால் நிறுத்த முடியவில்லை?
போதையொழிப்பு, போதைக்கெதிரான செயற்பாடுகளில் கல்குடா பிரதேச சமூக நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், இளைஞர்கள் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்களின் முன்னெடுப்புக்களும் செயற்பாடுகளும் மந்த நிலையில் உள்ளதாகவே
தெரிகிறது.
கல்குடா பிரதேசத்தில் போதைப்பாவனையை இல்லாதொழிக்கவும், போதைக்கு அடிமையான இளைஞர் சமூகத்தை மீட்டெடுக்கவும் கல்குடா பள்ளிவாயல்கள், சமூக அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டுள்ளதுடன், பலர் பாதுகாப்புத் தரப்பினரிடம் பிடிபட்டு தண்டனை அனுபவித்தும் சிறைவாசம் அனுபவித்தும் வருகின்றனர்.
இது கல்குடா சமூகத்துக்கு பெரும் சாபக்கேடாக மாறி வருகின்றது. போதைப்பாவனை இல்லாத இளைஞர்களைக் காண்பது அரிது என்ற துர்ப்பாக்கிய நிலையும் உருவாகியுள்ளது.
இது பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதுடன், அண்மைக்காலமாக அதிக போதைப்பாவனையாளர்கள் அடையாளங்காணப்படும் பிரதேசமாகவும் கல்குடா பிரதேசம் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை எமது பிரதேசத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்பதுடன், குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வீட்டுக்கொரு போதையாளியை நாமே உருவாக்கி விடுவோமோ என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பில் எமது ஊடகத்தினூடாக பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்தாலும் அதனை கட்டுப்படுத்தி இல்லாதொழிப்பதில் நாம் எடுத்துக் கொண்ட அக்கரை என்பது போதுமானதாக இல்லை என்பதை சகல தரப்பினரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
அதே நேரம், இப்பிரதேசத்திலிருந்து போதையை ஒழிக்கும் நல்லெண்ணத்தோடு பலரது உழைப்பு இருந்துள்ளதையும் மறுதலிக்க முடியாது.
எமது பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப்பாவனை தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரிடம் வினவிய போது, மிகக்கவலையான செய்திகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
அத்தோடு, போதைப்பாவனை கல்குடாவில் மாத்திரமல்ல, ஏனைய பிரதேசங்களிலும் வியாபித்து பரவியுள்ளதை மறுக்க முடியாது.
குறிப்பாக, கல்குடாப்பிரதேசம் போதைப்பொருள் வினியோக மையமாக இருப்பதாக எண்ணத்தோன்றுகின்றது எனத்தெரிவிக்கின்றனர்.
மிகச்சில சில நாட்களின் பின்னர் மீண்டும் போதையொழிப்பில் பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸார் தம்மாலியன்ற செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது.
இருப்பினும், இதனை முற்றாக இல்லாதொழிப்பதற்கான சமூக மட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படாதவரை இதிலிருந்து கல்குடா சமூகம் மீள முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதை மனதிற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகின்றது.
கடந்த காலங்களில் போதையொழிப்புக்காக சமூக மட்ட அமைப்புக்கள், பொது நிறுவனங்கள் தம்மாலியன்ற முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் அதன் வேக அதிகரிப்பு இப்போது மிக மிக அவசியமாகின்றது.
அதே நேரம், போதையொழிப்பு தொடர்பில் அண்மைக்காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார், களத்தில் நின்று பணியாற்றும் படை வீரர்கள் எடுத்துக்கொண்ட செயற்பாடுகள், முயற்சிகள் பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர்கள் முயற்சிகள் தொடரும் நேரத்தில் சமூக மட்ட அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், இளைஞர் அமைப்புக்கள், பள்ளிவாயல்கள் முழு மூச்சுடன் இதனை முற்றாக ஒழித்து முன்மாதிரிமிக்க சமூகமாக மிளிர முன்வர வேண்டும்.