18/01/2021
சாய்ந்தமருது மாளிகைக்காட்டில் நடந்தது என்ன?
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் இணைந்து தமது பிரதேசங்களை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அறிவிக்கிறார்கள். இரவு 08.00 மணிமுதல் காலை 04.00 வரை என நேரமும் அறிவிக்கப்படுகின்றது. இந்த நேரத்தில் குறித்த பிரதேசம் வியாபாரம் களைகட்டும் பண்டிகை காலங்களை தவிர ஏனைய நாட்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காய்ந்து கிடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். மழை, கொரோனா அச்சம் காரணமாக சில மாதங்களாக மக்கள் தாமாகவே 06.00 மணிக்கு பிறகு வீட்டில் இருக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் வேறுகதை
மாளிகைக்காடு - சாய்ந்தமருதுக்கு நிர்வாக ரீதியாக எவ்வித சம்பந்தமில்லை. சாய்ந்தமருதுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனை பொலிஸ், கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது ஜும்மா பள்ளி, கல்முனை நீதிமன்றம், கல்முனை தேர்தல் தொகுதி. மாளிகைகாட்டுக்கு காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி, மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சம்மாந்துறை பொலிஸ், பொத்துவில் தேர்தல் தொகுதி, சம்மாந்துறை நீதிமன்றம். இப்படி நிர்வாகம் முற்றிலும் மாறுபட்டது. இரு ஊருக்கும் இருக்கும் ஒரே பந்தம் எல்லோரும் முஸ்லிங்கள் உறவுக்காரர்கள் என்பது மட்டுமே.
சாய்ந்தமருது வர்த்தக சங்கம், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் என்பன இணைந்து எடுத்த சுய தனிமைப்படுத்தல் தீர்மானத்தை மாளிகைக்காடு சார்ந்த நிர்வாகத்திடம் பேச வில்லை என்பதே இங்கிருக்கும் மிகப்பெரும் குற்றசாட்டு. சுய தனிமைப்படுத்தல் தீர்மானத்தை எடுக்க முன்னர் அந்த ஏற்பாட்டாளர்கள் காரைதீவின் ஆளுமை மிகு தவிசாளர், வினைத்திறன் கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி, மக்களின் குரலுக்கு எப்போதும் செவிசாய்க்கும் பிரதேச செயலாளர், உயிரைக்கூட மதிக்காமல் பணியாற்றும் சம்மாந்துறை பொலிஸ், 100 வீதம் மாளிகைக்காடு மக்களினால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட மூன்று மக்கள் பிரதிநிதிகள் அதில் ஒருவர் பிரதிதவிசாளர், தேசிய ரீதியில் புகழ்பெற்ற சமூக அமைப்புக்கள், வைத்தியர்கள் , கலாநிதிகள், திணைக்கள தலைவர்கள், சட்டத்தரணிகள், தேசிய பாடசாலை அதிபர்கள், அரச காரியாலய பிரதானிகள், வர்த்தக பெருந்தகைகள் என பலரும் இருக்கும் இந்த மாளிகைக்கட்டிலிருந்து அழைத்து கலந்து பேசி தீர்மானம் எடுத்திருந்தால் ஆதரவு மிகப்பலமாக அமைந்திருக்கும்.
மாளிகைக்காட்டு மக்களின் தலைமைகளின் அல்லது அந்த மக்களின் தீர்மானம் இல்லாமல் அடாத்தாக வந்து கடைகளை மூட செல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? மூன்று பள்ளிவாயல்கள் இருக்கும் அந்த ஊரில் இரண்டு ஜும்மா பள்ளிவாசல் இருக்கிறது. முடிவுகளை எடுத்துவிட்டு வந்து அமுல்படுத்த கேட்டால் எப்படி ஒத்துழைப்பு வழங்குவார்கள். நிர்வாக ரீதியாக வேறு பிரதேசமான மாளிகைக்காட்டில் ஏதாவது செய்வதாயின் அந்த ஊரின் நிர்வாகத்துடன் கலந்து பேச வேண்டும் என்பதை அறியாமலா இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது?
சனநடமாட்டம் குறைந்த இரவில் மட்டுமே உலாவித்திரியும் அந்த கொரோனாவை அழிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாளிகைக்காட்டு மக்கள் பிரதிநிதிகள் நிராகரிக்க காரணம் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். சாய்ந்தமருது மாளிகைக்காட்டில் சனநடமாட்டம் கூடிய நேரம் காலை 10.00 முதல் மாலை 07.00 வரை. கொரோனாவை கட்டுப்படுத்த உகந்த நேரம் அதுதான் அதை விட்டு விட்டு ஊரே உறங்கிய பின்னர் ஏன் இந்த தீர்மானம் என்கிறார்கள் சாய்ந்தமருது வர்த்தகர்களும். இந்த தீர்மானத்தில் உடன்பாடு இல்லாத வர்த்தகர்கள் இல்லாமலும் இல்லை. ஆதாரமாக நேற்றிரவு சாய்ந்தமருதில் ஒரு முக்கிய உணவகம் இரவு 11.15 க்கே மூடப்பட்டது. அவர் வர்த்தக சங்க நிர்வாகியும் கூட.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு பக்கம் இல்லாது போனாலும் அது செல்லுபடி ஆகாது. ஒரு ஊருக்கு இன்னுமொரு ஊர் எப்போதும் பக்கபலம். மருதூர் போராட்டத்தில் உரிமையுடன் போராடிய மாளிகைக்காடு மக்கள் அதிகம். அப்படியான மக்கள் தமக்கான நியாயத்தை கேட்கும் போது தவறை உணர்ந்து பெரும் மனம் கொண்டு திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். கல்முனை மாநகரத்தில் இருந்து சாய்ந்தமருது பிரிய என்ன நியாயங்கள் சொல்லப்பட்டதோ அதே நியாயங்கள் தான் மாளிகைக்காட்டு மக்கள் கேட்பதும். சாய்ந்தமருதில் இருந்து மாளிகைக்காட்டை பிரி என யாரும் கோசம் எழுப்ப தேவையும் இல்லை. இப்போதும் மாளிகைக்காடு வேறு ஊர். சாய்ந்தமருது வேறு ஊர். ஆனால் நாங்கள் சதையாலும், உணர்வாலும் பின்னி பிணைந்தவர்கள்.
(இது சிந்தித்து விளங்கும் ஆற்றல் கொண்ட புத்திஜீவிகளும் மட்டுமே ஆன பதிவு. அரைகுறைகள் தள்ளி போகி விளையாடலாம்)
நூருல் ஹுதா உமர்