09/09/2012
கிழக்கில் சட்டவிரோத பிரசாரங்கள் தொடர்வதாக முறைப்பாடு மாகாணசபை தேர்தல் பிரச்சாரங்களுக்கான காலம் நிறைவடைந்த பின்னரும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாணத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம், தாக்குதல், மனித உரிமை, விடுதலைப் புலிகள், சம்பந்தன், தேர்தல், வன்முறை, போர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், மண்டூர், மட்டக்களப்பு நகர், வாகரை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறான சட்டவிரோத பிரசாரங்கள் நடந்துள்ளதாக ஃகபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் சட்டவிதி மீறல்கள் மற்றும் சட்டவிரோத பிரச்சாரங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளில் அதிகமானவை ஆளுங்கட்சியினருக்கு எதிராகவே கிடைத்திருப்பதாக கஃபே கூறுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் தேர்தலுக்கு முந்தைய தினமான இன்று வெள்ளிக்கிழமையும் அரசாங்க கட்சி ஆதரவு ஊர்வலங்கள் நடந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.
இதேவேளை, வாக்காளர்களை தமக்கு வாக்களிக்குமாறு ஊக்குவிக்கும் விதத்தில் இலவசமாக பொருட்களை அன்பளிப்பு செய்யும் நிகழ்வுகள் நடந்துள்ளமை பற்றியும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொண்டு இருந்ததையும் எதிரணிக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு கிராமத்தில் தேர்தல் நலனுக்காக மக்களுக்கு மின்சார விளக்கு உள்ளிட்ட உபகரணங்களை விநியோகித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கஃபே அமைப்பு கூறியுள்ளது.
இதேவேளை, இம்முறை தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான வேட்பாளர் ஒருவர், ஏறாவூரில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் துண்டுபிரசுரங்களுடன் பணத்தையும் மக்களுக்கு விநியோகித்துள்ளதாக பிராந்திய கண்காணிப்பாளர்கள் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, தேர்தல் சட்டவிதிகள் மீறப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தேர்தல் செயலகம் கூறியுள்ளது.
சட்டவிரோத நிகழ்வுகள் பல தமக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தேர்தலுக்கு பின்னர் நடத்துமாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.