06/11/2021
ஸ்கொட்லாந்தை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானை பின்தள்ளிய இந்தியா!
ஐசிசி T20 உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்றில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தங்களுடைய ஓட்டவிகிதத்தை (NRR) ஆப்கானிஸ்தான் அணியைவிட முன்னிலைப்படுத்திக்கொண்டது.
இந்திய அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்து, அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பினை கடினப்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த உலகக்கிண்ணத்தை பொருத்தவரை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி தோல்வியுற்றால், இந்திய அணிக்கு அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்புகள் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை ஸ்கொட்லாந்து அணிக்கு வழங்கியது. அதன்படி, களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணிக்கு, ஆரம்பம் முதல் அழுத்தம் கொடுத்த, இந்திய அணி, ஸ்கொட்லாந்து அணியை 17.4 ஓவர்கள் நிறைவில் 85 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.
ஸ்கொட்லாந்து அணிசார்பில், ஜோர்ஜ் மன்ஸி 24 ஓட்டங்களையும், மைக்கல் லீஸ்க் 21 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டதுடன், இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், தங்களுடைய ஓட்ட விகிதத்தை அதிகரித்துக்கொள்ளும் முகமாக, வேகமாக ஓட்டங்களை குவித்த இந்திய அணி வெறும், 6.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 89 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.
இந்திய அணிசார்பாக, அதிகபட்சமாக, கே. எல். ராஹூல் 50 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். ஸ்கொட்லாந்து அணிசார்பாக, மார்க் வட் மற்றும் பிரெட்லி வீல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி, இந்த போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில், ஆப்கானிஸ்தான் அணியை பின்தள்ளி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தங்களுடைய ஓட்ட விகிதத்தை +1.619 ஆக அதிகரித்துக்கொண்டுள்ளது. எனவே, அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியுற்று, இந்திய அணி, நமீபியா அணியை வீழ்த்துமானால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.