17/09/2024
♦நான் ஏன் AKDயை ஆதரிக்கின்றேன்?
- என்.எம்.எம்.மிப்லி
Former Deputy Commissioner General-
Inland Revenue Department.
AKD க்கான எனது ஆதரவு நிச்சயமாக, சத்தியமாக தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகவோ அல்லது நான் சார்ந்துள்ள இனம், மதம் சார்ந்தாகவோ அல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.
நாடு சுதந்திரம் பெற்று 15 வருடங்களில் பிறந்த நான், பல பேரப்பிள்ளைகளைக் கண்டாலும் கூட இந்நாட்டின் சுபீட்சத்தை, இனங்களுக்கு, மக்களுக்கு மத்தியில் அன்னியோன்னியம், பரஸ்பர புரிந்துணர்வு, கண்ணியம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நடைமுறையயை பெரும்பாலும் என்னால் காண முடியவில்லை.
இலங்கையை சுவர்க்க பூமியாக்குவோம் என்ற வாக்குறுதியோடு கடந்த ஏழு தசாப்தங்களாக ஆட்சிபீடம் ஏறிய அரசியல்வாதிகள் தங்களுக்கும், தமது குடும்பங்களுக்குமான சொர்க்கபுரியை உலகில் அமைத்துக் கொண்டார்களே தவிர இதர மக்களுக்கு வங்குரோத்து அடைந்த, இனவாதமும், குரோதமும் நிறைந்த, காட்டு சட்டம் ஆட்சி செய்யும் ஒரு நாட்டையே வழங்கியுள்ளனர்.
இத்தொடர் ஏமாற்று ஜாலங்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் விரக்தியடைந்து விழிப்படைந்து விட்டனர்.
இவ்விழிப்பூட்டலுக்கு மிகச் சரியான, நிதானமான தலைமைத்துவத்தை NPP/AKD வழங்கிக் கொண்டிருக்கின்றது என நான் காண்கின்றேன்.
ஒருவரது நம்பகத் தன்மையை அவரது கடந்த, நிகழ் காலங்களைக் கொண்டு தீர்மானிக்கலாம்.
அந்தவகையில் AKD யின் கடந்த, நிகழ்கால வரலாற்றை அவதானிக்கும் போது ஏனைய வேட்பாளர்களை விட இவரிடம் நான் காணும் விசேட சிறப்பம்சங்களை பின்வருமாறு குறிப்பிடலாம்.
1. AKD ஒருபோதும் குறுகிய இனவாத சிந்தனையோடு செயற்பட்டதாக அவரது அரசியல் எதிரிகள் கூட இதுவரை குற்றம் சுமத்தியதில்லை.
2. ஊழல், மோசடி, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இதுவரை ஏத்தகைய குற்றச்சாட்டும் இல்லை.
(88/89 கலப்பிரிவுகளில் AKD பல்கலைக் கழக மாணவன் என்பதைக் கருத்திற் கொள்க).
3. சட்டத்தின் ஆட்சியை (The Rule of Law) நிலைநாட்டுவதாக AKD வாக்குறுதி அளித்துள்ளது மாத்திரமின்றி, அவர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவோ அல்லது சட்டத்தை தனது கைக்கு எடுத்ததாகவோ இதுவரையில் எந்த ஒரு குற்றச்சாட்டும் AKD க்கு ஏதிராக இல்லை.
குறிப்பு: அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் சட்டம் கோலாச்சாமை. இது பற்றி நான் தனியான ஓர் ஆய்வை வெளியிடுவேன்.
4. AKD எப்போதுமே ஒரு கொள்கைவாதியாக, சாதாரண மக்களுள் ஒருவராக காணப்படுகிறார். அவர் ஒருபோதும் தன்னையோ தனது குடும்ப உறுப்பினர்களையோ முதன்மைப்படுத்துவதோ விளம்பரப் படுத்துவதோ இல்லை.
5. தனது பேச்சிலும் செயலிலும் ஒற்றுமையும் தெளிவும் உள்ளவராக நான் AKD யை காண்கின்றேன். ஒருபோதும் பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட குறுக்கு நேர் எதிர் வினா அம்புகளுக்கு முன்னால், பல்லுடைந்து காயாப்பட்டதாக நான் இதுவரை கண்டதில்லை. தான் கொண்ட கொள்கையில் உள்ள தெளிவையும் உறுதிப்பாட்டையுமே இது பறைசாற்றுகின்றது.
AKD க்கு எதிராக முன்வைக்கப்படும் நியாயமான ஒரு குற்றச்சாட்டு 1994 முதல் 2019 வரை ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களுக்கு துணைபோதல் அல்லது ஒத்துழைத்தல் என்பதாகும்.
மேற்படி குற்றச்சாட்டு அரசியல் பற்றிய தெளிவின்மையின் வெளிப்பாடாகும்.
அரசியலில் தேர்தல் என்பது முன்வந்துள்ள வேட்பாளர்களில் அல்லது கட்சிகளுள் நாட்டுக்கு அதிகம் நன்மை அளிப்பதை அல்லது குறைந்த தீமை அளிப்பதைத் தேர்வதாகும்.
எனவே, அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் காணப்பட்ட நிலைமை, பின்னணி போன்றவற்றை கருத்திற் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படும்.
அவ்வாறே இன்றைய அரசியல் சூழ்நிலையில் எடுக்கப்படும் தீர்மானம், சிலவேளை இன்னும் 5, 10 அல்லது 20 வருடங்களில் அப்போதைய நிலைமைகளின் மாற்றத்திற்கேற்ப மாறலாம். அதனை ஒருவர் சந்தர்ப்பவாதம் எனக்கூறின் அது யதார்த்தத்தின் அறியாமை என்றே குறிப்பிட வேண்டும்.
எனவே, இன்றைய அரசியல் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மிகச் சரியான அறிவுபூர்வமான தெரிவு AKD எனபதே ஆகும். அனைத்தையும் அவனே நன்கறிவான்
என். எம். எம். மிப்லி.
முன்னாள் பிரதிப் ஆணையாளர் நாயகம்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்.