25/04/2021
பள்ளிவாசல்கள் மூடப்படுமா?
கொவிட் 19 செயலணி மற்றும் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றத் தவறும் பள்ளிவாசல்களை நோன்பு முடியும்வரை மூடிவிடுவதற்கு வக்பு சபை தீர்மானித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் அநேகமான பள்ளி வாசல்களில் கொவிட் 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் மீறப்படுவதாகவும் பெரும் எண்ணிக்கையானோர் பள்ளிவாசல்களுக்குள் சுகாதார வழிகாட்டல்களை அசட்டை செய்வதாக வக்பு சபைக்கு ஆதாரங்களுடன் முறைபாடுகளை முன்வைத்திருப்பதனாலே இவ்வாறான தீர்மானமொன்றினை மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.
நாட்டில் மீண்டும் கொவிட் 19 தொற்றுநோய் பரவல் உருவாகும் சாத்தியம் உருவாகியிருப்பதாக சுகதார அமைச்சு எச்சரித்திருக்கின்ற நிலையில் குருநாகல் மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் மேலும் தெரிவிக்கையில் “அண்மையில் சுகாதார அமைச்சு நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் சுற்றிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது.
அவ்வறிக்கையில் பள்ளிவாசல்களில் ஜமாஅத் தொழுகைகளில் 100 பேருக்கு உட்பட்டவர்களே தொழ முடியும். ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து முஸல்லாக்களை எடுத்து வர வேண்டும். வீடுகளிலே வுழூச் செய்து வரவேண்டும். ஒவ்வொருவரும் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும்.ஒரு மீற்றர் இடைவெளி பேணப்படவேண்டும். பள்ளிவாசலுக்குள் நுழையும் ஒவ்வொருவரதும் உடல் உஷ்ண நிலை சோதிக்கப்படவேண்டும் என்பன உட்பட பல நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் இவைகளில் எவையும் பின்பற்றப்படுவதில்லை என வக்பு சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கஞ்சி விவகாரமும் சுற்றறிக்கையின்படி பேணப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கஞ்சி பள்ளிவாசலுக்கு வெளியே வழங்கப்படவேண்டுமென சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரமும் பின்பற்றப்படாது அலட்சியம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் புகைப்படங்கள் மூலம் வக்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் கொவிட் 19 மூன்றாவது அலை உருவாக முஸ்லிம் சமூகம் காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டு எம்மீது சுமத்தப்படலாம். அதனால் பள்ளிவாசல்கள் நோன்பு காலத்தில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.
பள்ளிவாசல்களில் சுகாதார வழிகாட்டல்கள் மீறப்படுகின்றமைக்கு பள்ளிவாசல் நிர்வாகங்களே பொறுப்புக் கூறவேண்டும். இவ்வாறான நிலையில் வக்புசபை குறிப்பிட்ட பள்ளிவாசல்களை மூடாமல் இருப்பதற்காக வக்பு சபைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.