28/05/2018
இன்றைய சிந்தனை 28/05/2018 (வாசகங்களுடன்)
முதல் வாசகம்
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப்பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது. இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்.
இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 111: 1-2. 5-6. 9,10உ (பல்லவி: 5b)
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்.
1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்;
நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;
அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். -பல்லவி
5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்;
தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;
6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்;
இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். -பல்லவி
9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;
தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;
அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.
10உ அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். அல்லேலூயா.
மாற்கு 10:17-27
பொதுக்காலம், வாரம் 8 திங்கள்
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27
அக்காலத்தில் இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ``நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், ``நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? `கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட' '' என்றார். அவர் இயேசுவிடம், ``போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்'' என்று கூறினார். அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ``உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்'' என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ``செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்'' என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ``பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது'' என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ``மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
--------------------
1பேதுரு 1: 3 – 9
அன்பு என்னும் அருமருந்து
இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேதுரு தன்னுடைய திருமுகத்தை எழுதுகிறார். வாழ்க்கையின் பலநிலைகளில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த ஆசியா மைனர் பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறார். முரட்டுக்குணம் படைத்த தலைவர்களிடம் பணிவிடை செய்தவர்கள் (2: 18), திருமணமான பெண்கள் (3: 1), அடுத்தவர்களின் பரிகசிப்பிற்கு உள்ளானவர்கள் (4:14) என, குறிப்பிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கிறவர்களுக்கு இதனை எழுதுகிறார். அவர்கள் வாழ்கிற சூழ்நிலை, கடுமையான, வெகு எளிதாக சோர்ந்து போகிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையில், அவர்களுக்கான மருந்து, எதுவாக இருக்க முடியும்? என்பதைச் சிந்தித்து, அந்த மருந்தை அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகக் கொடுக்கிறார்.
அன்பு தான் அவர் கொடுக்கிற அருமருந்து. ஒருவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், அன்பு அவருக்கு அருமருந்தாக அமையும் என்பது அவருடைய தீராத நம்பிக்கை. எதற்காக அன்பை அருமருந்தாகக் கொடுக்கிறார்? பொதுவாக, கடுமையான சூழ்நிலையில் நாம் வாழ்கிறபோது, அடக்குமுறைகளைக் கண்டு, நமக்கு ஏற்படுகிற அநீதிகளைக் கண்டு, நாம் வெறுப்புணர்வு கொள்கிறோம். அந்த வெறுப்பு நமக்குள்ளாக குடிகொள்கிறபோது, இயல்பான நம்முடைய கடவுளின் சாயலை இழந்துவிடுகிறோம். வெறுப்பு நமக்குள்ளாக வருவது, அன்பு குறைவுபடுவதால் தான். இயேசு முழுவதும் அன்பு நிறைந்தவராக இருந்தார். எனவே தான், அவரால் வெறுப்பு இல்லாதவராக மக்கள் நடுவில், தன்னை எதிரியாக நினைத்தவர்கள் மத்தியிலும் சாதாரணமாக பேச முடிந்தது. ஏன்? அவர்களைச் சிலுவையிலிருந்து மன்னிக்கக்கூட முடிந்தது. அதேபோல, அன்பு என்னும் அருமருந்தை நாம் கொண்டிருக்கிறபோது, நாம் சந்திக்கிற கடுமையான சூழ்நிலைகள் நம்மை பெரிதும் பாதிக்காது.
இன்றைக்கு நாம் வாழ்கிற சூழலில் ஒவ்வொருவரும் வெறுப்புணர்வு மிகுந்தவர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக, குடும்ப வாழ்வில் கணவன், மனைவியருக்கிடையே, பிள்ளைகள், பெற்றோர்களுக்கிடையே வெறுப்புணர்வு அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வெறுப்புணர்வு நிலையிலிருந்து நாம் கடந்து வர வேண்டும். அதற்கு அன்பு ஒன்று தான், அருமருந்தாக அமைய முடியும். இதைத்தான் பவுலடியாரும், அன்பைப் பற்றிய தன்னுடைய மடலில் குறிப்பிடுகிறார். நம்முடைய வாழ்வு அன்பின் வாழ்வாக அமையட்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------
இயேசுவின் பிறர்நலம்
தற்பெருமை நிறைந்த உலகம் இது. இங்கே வாழக்கூடிய அரசியல் தலைவர்கள் தங்களை பெருமைப்படுத்திக்கொள்வதில் அதிக நாட்டம் கொள்கின்றனர். தங்களோடு சில முகஸ்துதிகளை வைத்துக்கொண்டு, அவர்களின் புகழ்ச்சி மழையில் இன்பம் காண்கின்றனர். தாங்கள் செய்வதையும் புகழ்ச்சிக்காகவே செய்கின்றனர். இந்த உலகத்தில் உதவி செய்கிற மனிதர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 1. தற்பெருமைக்காகச் செய்பவர்கள் 2. தன்னை வளா்த்துக் கொள்வதற்காகச் செய்கிறவர்கள் 3. தன்னலமில்லாமல் செய்கிறவர்கள்.
தற்பெருமைக்காகச் செய்கிறவர்கள், தங்களது பெயர், புகழ் மற்றவர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். எதைச்செய்தாலும் தாங்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணமாக இருக்கிறது. தன்னை வளர்த்துக்கொள்வதற்காகச் செய்கிறவர்கள் எதிர்பார்த்து செய்கிறவர்கள். இன்றைக்கு நான் இதைச்செய்கிறேன் என்றால், நாளை இது எனக்கு கிடைக்கும், என்கிற எதிர்பார்ப்போடு செய்கிறவர்கள் தான் இவர்கள். மூன்றாவது வகையான மக்கள் எதையும் எதிர்பார்க்காமல், புகழுக்காக அல்லாமல், நன்மையைச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்கிறவர்கள். இயேசு இந்த மூன்றாம் வகையைச் சார்ந்தவர். அந்த பணக்கார மனிதன் இயேசுவிடத்தில் ”நல்ல போதகரே” என்று சொல்கிறபோது, நிச்சயமாக அந்த வார்த்தைக்கு இயேசு பொருத்தமானவர். அந்தளவுக்கு மக்களுக்கு நன்மைகளைச் செய்திருக்கிறார். ஆனாலும், அவர் தற்பெருமையை விரும்புகிறவர் அல்ல. தன்னுடைய புகழுக்கும், பெயருக்கும் காரணமானவர் இறைவனே என்று மொழிகிறார்.
நமது வாழ்க்கையில் நாம் எப்போதும் கடவுளை மகிமைப்படுத்துகிறவர்களாக வாழ வேண்டும். நாம் செய்யக்கூடிய உதவியை சுயநலத்தோடு அல்லாமல், தற்பெருமைக்காக அல்லாமல், மற்றவர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்வோம். அதையும் கடவுளுக்கு காணிக்கையாக்குவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
செயல்பாடு
இயேசுவைப்பின்பற்ற விரும்பிய இளைஞனின் வேகத்தை நற்செய்தியாளர் எடுத்துரைக்கிறார். வேகமாக, மூச்சிரைக்க ஓடிவந்த அவர், இயேசுவின் காலடியில் தன்னையே விழச்செய்கிறார். செல்வச்செழிப்புமிக்க ஒருவர், ஏழையின் குடும்பத்தில் பிறந்த இயேசுவின் காலடியில் கிடப்பது வியப்புக்குரியது. அவருடைய வார்த்தை இயேசுவைப்பற்றிப் புகழ்வதோடு தொடங்குகிறது. இவ்வளவு நேரம் அனைத்தையும் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருந்து இயேசு, பதில்மொழி சொல்ல ஆரம்பமாகிறார்.
அந்த இளைஞனின் புகழ்ச்சிக்கு இயேசு மயங்கிவிடவில்லை. தனது நிதானத்தை இழந்துவிடவில்லை. யாருமே எளிதாக உணர்ச்சிவசப்படக்கூடிய அந்த நிலையில் இயேசு, ”கடவுளைத்தவிர நல்லவர் யாருமில்லையே” என்று சொல்கிறார். அந்த இளைஞனுக்கும் இப்போது பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனென்றால், அந்த இளைஞன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறான். வெறும் உணர்வுகளுக்கு மட்டும் நாம் இடம்கொடுத்து, அத்தோடு நாம் நின்றுவிடக்கூடாது. உணர்வுகளையும் கடந்து நாம் செல்ல வேண்டும். உணர்வுகள் நல்லதுதான். ஆனால், உணர்வுகளை நாம் அடைய வேண்டிய எல்லையாக, இலக்காக வைக்கமுடியாது.
இன்றைக்கு சோகமாக, வருத்தமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப்பார்த்து, பலர் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே இருந்து விடுகின்றனர். உணர்ச்சிகளுக்கு அப்பால் செய்யக்கூடிய கடமைகளை மறந்து விடுகின்றனர். அந்த சோகத்தைக் கடந்து செல்வதற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் மறந்துவிடக்கூடாது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
மாற்கு 10: 17 – 27
செல்வம் - இறைவனின் மாபெரும் கொடை
“செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம்” என்று இயேசு சொல்கிறார். அதனைக்கேட்ட சீடர்கள் திகைப்புக்கு உள்ளாகிறார்கள். எதற்காக சீடர்கள் திகைப்புக்கு உள்ளாக வேண்டும்?. பழைய ஏற்பாட்டிலே செல்வம் என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. நீதிமொழிகள்15: 6 “நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்”. நீதிமொழிகள் 10: 22 “ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்”. நீதிமொழிகள் 8: 21 “என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்”. யாரெல்லாம் செல்வந்தர்களாக இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் இறைவனுடைய ஆசீர் பெற்றவர்கள் என்ற பார்வை மக்களின் மனதில் இருந்தது. ஆனால், இயேசு நூற்றாண்டு கால பார்வையை ஒரு நொடிப்பொழுதில் மாற்றக்கூடிய வசனத்தைச்சொல்கிறார். இதுதான் சீடர்களின் திகைப்புக்கு காரணமாக இருந்தது. எப்படி கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கு இறையாட்சியில் இடமில்லாமல் போக முடியும்? என்ற திகைப்பு இன்னும் சீடர்களின் மனதைவிட்டு அகலவில்லை.
இயேசு ‘செல்வம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டது அல்ல’ என்று சொல்லவில்லை. அவர் சொல்வது ‘செல்வர் இறையாட்சிக்கு நுழைவது கடினம் என்றுதான்’. இதை எப்படி புரிந்துகொள்வது? செல்வம் இறைவனுடைய ஆசீர்வாதம்தான், அதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால், செல்வம் என்பது இறைவனுடைய ஆசீர்வாதத்தோடு நின்றுவிடாது, அது மிகப்பெரிய பொறுப்புணர்வும் கூட. எவ்வாறு ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்களோ, அதேபோல செல்வம் என்பது இறைவனின் ஆசீர்வாதம் மற்றும் பொறுப்புணர்வும் கலந்தது. செல்வத்தை இறைவனுடைய ஆசீர்வாதமாக மட்டும் கருதி வாழ்ந்தால், அதன் முழுமையை உணர முடியாது. மாறாக, செல்வத்தில் இருக்கும் பொறுப்புணர்வையும் செயல்படுத்த வேண்டும். இறைவன் ஒருவரை செல்வத்தால் ஆசீர்வதிக்கிறார். எதற்காக? சுயநலத்தோடு தான் மட்டும் இன்பமாக வாழ்வதற்கு அல்ல, அதை மற்றவர்களோடு பகிர்ந்து மகிழ்வோடு வாழ்வதற்காக. ஏழை இலாசர், செல்வந்தர் உவமையில் இதைத்தான் பார்க்கிறோம். அந்த செல்வந்தன் ஏழை இலாசரை துன்புறுத்தவில்லை, கொடுமைப்படுத்தவில்லை. ஆனால், அவன் செய்த தவறு, இறைவனால் செல்வமுள்ளவனாக ஆசீர்வதிக்கப்பெற்றிருந்தும், ஏழை இலாசருக்கு உதவ மறக்கிறான், தன்னிடம் இருப்பதை பகிர்ந்து வாழ மறுக்கிறான். எனவே இறைவனால் தண்டிக்கப்படுகிறான்.
‘இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்கிறவனே மனிதன்’ என்பதைத்தான் எல்லாவித மதங்களும் வலியுறுத்திக்கூறுகிறது. இறைவன் நம்மை செல்வத்தால் ஆசீர்வதிக்கின்றபோது, நாம் அந்த செல்வத்தால் வளமை பெற்று, மற்றவர்களுடைய வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இறைவனின் எதிர்பார்ப்பை நம் வாழ்வில் செயல்படுத்துவோம்.
- அருட்பணி. தாமஸ் ரோஜர்
--------------------------------------------
இணையதள உறவுகளே
எத்தனை இளைஞர்கள் இன்று முக வாட்டத்தோடு அலைகிறார்கள். போதை, மது, கேளிக்கை இவற்றால் நிம்மதி இழந்து தவிக்கும் இளைஞர்கள் எத்தனைபேர் நம்மிடையே இருக்கிறார்கள். தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தால், நல்ல வேலையும் கையும் பையும் நிறைந்த சம்பளமும் பெறுகிறார்கள். ஆனால் இந்த இளைஞர்களின் கூட்டம் ஒரு வகையான இடங்களில் அதிகம் கூடுவதாக படிக்கிறோம்.இதனால் நம் இளைஞர்கள் பலர் பணத்தையும் உடலையும் உள்ளத்தையும் இறுதியில் வாழ்க்கையையும் இழந்து தவிப்பதை பார்த்திருக்கிறேன்.
இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த இளைஞன் இயேசுவிடம் வந்தான்.இயேசு அவனிடம், நீ நல்லவன். ஆனால் உன்னிடம் உள்ள பணம், சொத்து உன்னை மயக்கிவிட்டது. அதை தவறாகப் பயன்படுத்தி நீ உன் வாழ்வை அழித்துக்கொண்டாய். நீ தவறு செய்யவில்லை. ஆனால் நல்லது செய்ய தவறிவிட்டாய். அதுதான் நீ சந்தோஷமில்லாமல் இருப்பதற்குக் காரணம். ஆகவே இன்றிலிருந்து சில நல்லவற்றைச் செய்யத் தொடங்கு என்றார்.அந்த இளைஞன் இன்னும் முகவாட்டத்தோடு அலைந்து கொண்டிருக்கிறான்.
நம்முடைய வரவில் ஒரு சதவீதம் கஷ்டப்படும் மாணவர்களின் கல்விக்காக கொடுப்போம். மாதம்தோறும் கருணை இல்லங்களில் வாழும் ஒரு குழந்தைக்கு கொடுப்போம்.அதிலே கிடைக்கும் மகிழ்ச்சி உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மகிழ்ந்து நிறைந்து வாழச்செய்யும்.தவறு செய்வதைவிட பெரிய குற்றம் நல்லது செய்யாமல் இருப்பது. நல்லது செய்வோம். நலமே வாழ்வோம்.
-ஜோசப் லீயோன்
--------------------
செல்வமா, மீட்பா ?
இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,
செல்வத்தைப் பற்றிய பார்வையில் கத்தோலிக்கப் போதனைக்கும், பெந்தகோஸ்து சபையினரின் போதனைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. அடிப்படையில், அது பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாடுதான். பழைய ஏற்பாடு செல்வத்தை இறைவனின் கொடையாகவும், ஆசியாகவும் பார்த்தது. செல்வம் இருப்போர் இறையாசி பெற்றவர்களாகவும், செல்வம் இல்லாதோர் இறையாசி குறைந்தவர்களாகவும் பார்க்கப்பட்டனர். ஆனால், புதிய ஏற்பாட்டில் இயேசு இந்தப் பார்வையைத் தலைகீழாக புரட்டிப் போட்டார். செல்வம் மீட்பு அடைவதற்குத் தடை என்று ஆணித்தரமாகக் கூறினார். ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்றும் போதித்தார்.
இன்றைய பெந்தகோஸ்து போதகர்கள் அனைவருமே பழைய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் இயேசுவின் புதிய போதனையைப் போதிக்காமல், பழைய ஏற்பாடு சொல்கின்ற கட்டளைகள், போதனைகள், பத்திலொரு பங்கு காணிக்கை, பரிசேய வாழ்வு போன்றவற்று முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒரு பிரபலமான பெந்தகோஸ்து போதகர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டுமா, கடவுளைத் துதியுங்கள் என்று நிதி நிறுவன ஏஜென்ட் போலப் போதித்ததைப் பார்த்து வியப்படைந்தேன். நல்லவேளை, இயேசுவின் போதனை தெளிவாக இருக்கிறது. செல்வர்கள் இiறாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். இம்மண்ணகத்தில் செல்வராய் இருப்பதைவிட, விண்ணகத்தில் செல்வராய் இருப்பதுதான் முக்கியம். அதற்கு நம்மிடம் உள்ளதை நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இப்போதனை பற்றித் தெளிவாக இருப்போம். பிறருக்கும் எடுத்துரைப்போம்.
மன்றாடுவோம்: ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைவிடப் பெரிய செல்வம் எதுவுமில்லை என்று ;நாங்கள் உணரச் செய்யும். எங்களிடம் இருக்கும் செல்வம், ஆற்றல்கள், திறமைகள் அனைத்தையும் பிறரோடு நாங்கள் பகிர்ந்து வாழ அருள்தாரும். இதனால், நாங்கள் விண்ணகத்தில் செல்வர்களாய் மாறுவோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
--அருள்தந்தை குமார்ராஜா
---------------------------------
''இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு,
'நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'
என்று அவரைக் கேட்டார்'' (மாற்கு 10:17)
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
-- இயேசுவைத் தேடி வந்த இந்த மனிதரைப் பற்றிய செய்தியை ஒத்தமைவு நற்செய்தியாளர் மூவரும் குறித்துள்ளனர் (காண்க: மத் 19:16-30; மாற் 10:17-31; லூக் 18:18-30). இந்த மனிதர் இயேசுவை வழியில் எதிர்பாராத விதத்தில் சந்திக்கவில்லை; மாறாக, இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, ''ஓடிவந்து'' இயேசுவின் முன்னிலையில் தாள்பணிகின்றார். ''முழந்தாள்படியிடுவது'' சீடர் தம் குருவுக்குக் காட்டுகின்ற மரியாதையின் அடையாளம். எனவே, இந்த மனிதர் ஒருவிதத்தில் ஏற்கெனவே இயேசுவின் சீடராகத் தம்மைக் கருதி, தம் குருவிடமிருந்து நற்போதனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் நல்ல எண்ணத்தோடு இயேசுவை அணுகுகிறார். ''நல்ல போதகரே'' என அவர் இயேசுவை அழைப்பதும் கருதத் தக்கது. அதற்கு இயேசு, ''நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே'' என்று பதிலளிக்கிறார் (மாற் 10:18). இயேசு கடவுளுக்கு உரிய பண்புகள் தமக்கு உரியவை என இங்கே உரிமை பாராட்டிப் பெருமை கொள்ளவில்லை. அதே நேரத்தில் கடவுளின் நற்பண்புகள் தம்மில் துலங்கியதால்தான் அம்மனிதர் தம்மை ''நல்லவர்'' எனக் கூறுகிறார் என்பதையும் இயேசு மறைமுகமாக ஏற்கிறார். ''நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?'' (மாற் 10:17) என்னும் கேள்வி நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுகின்ற கேள்வியே. இம்மண்ணக வாழ்வோடு மனிதரின் இலட்சியங்கள் மடிந்துவிடுவதில்லை. சாவுக்குப் பின் வாழ்வுண்டு என்னும் உறுதிப்பாடு மனித உள்ளத்தில் ஆழப் பதிந்த ஒன்று.
-- எனவே, ''நிலைவாழ்வை'' அடைய வேண்டும் என்னும் உள்ளார்வத்தால் நாம் உந்தப்பட்டு, நிறைவடைய முனைகின்ற வேளையில் அக்குறிக்கோளை எட்டுவதற்கான வழியைத் தேடுவது இயல்பே. இயேசு அவ்வழியை நமக்குக் காட்டுகிறார். அவரை முழு மனத்தோடும் விருப்போடும் பின்செல்வோர் அவர் வாக்களிக்கின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வர். அதற்கு நிபந்தனையாக இயேசு நமக்குக் கூறுவது: ''கடவுளிடமிருந்து உங்களைப் பிரிக்கின்ற அனைத்தையும் துறந்துவிடுங்கள்; கடவுளையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்''. இயேசுவின் குரலுக்குச் செவிமடுப்போர் அவர் காட்டிய வழியில் நடப்பார்கள். அந்த வழி நம்மை நிலைவாழ்வுக்கு இட்டுச் செல்லும்.
மன்றாட்டு
இறைவா, நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
--------------------------------
நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள
அன்பார்ந்த இணையதள நண்பர்களே!
உங்கள் வாழ்க்கையில் நிறைவையும் நிம்மதியையும் காண விரும்புகிறீர்களா? வாழ்க்கையில் எப்போதும் வசந்தம் வீச விரும்புகிறீர்களா? இதோ இன்று ஆண்டவர் சொல்லுவதைக் கேளுங்கள். அந்த பணக்கார இளைஞரிடம் நிறைய நல்ல மனது உள்ளது. நியாயமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ளது. தன் வாழ்வில் கடவுளின் கட்டளைகளையும் அன்றாடக் கடமைகளையும் தவறாது கடைபிடித்து வாழ்ந்துள்ளான். ஆனாலும் இவற்றில் தான் எதிர்பார்த்த நிறை வாழ்வையும் நிம்மதி வாழ்வையும் அவன் காணவில்லை. ஆகவே இயேசுவிடம் வந்துள்ளான்.
இயேசுவோடு உங்கள் வாழ்வில் ஆழத்துக்குள் செல்லுங்கள். உங்கள் குடும்பத்தின் ஆழத்துள் அவரை அழைத்து செல்லுங்கள்.உங்கள் வாழ்வின் பிரச்சினைகளின் ஆழத்துள் இயேசுவை கூட்டிச் செல்லுங்கள. அவர் அந்த பணக்கார இளைஞனை கூர்ந்து நோக்கியது போல உங்கள் உள்ளத்தையும் குடும்பத்தையும் பிரச்சனைக்குரிய இடங்களையும் கூர்ந்து நோக்கட்டும். நோயின் ஆழத்திற்குச் செல்லட்டும்.
நிறைவாழ்வு தேடிய பணக்கார இளைஞனின் வாழ்வின் ஆழத்துள் சென்று, கூர்ந்து நோக்கிய இயேசு, அவனது நோயின் காரணம் அறிந்து அதற்கு மாற்று மருந்து கொடுத்தார். "நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்." (மாற் 10:21) உங்கள் வாழ்வைக் கூர்ந்து நோக்கும் இயேசு உங்கள் நல்வாழ்வுக்கும் நல் விருந்தும் மருந்தும் தருவார்.மகிழ்வோடு ஏற்று வாழுங்கள். நிறை வாழ்வைக் காண்பீர்கள்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
--அருட்திரு ஜோசப் லீயோன்
நன்றி : bibleintamil.com