16/03/2022
இரண்டு இந்தியா!
சாஸ்திரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு! நம்பவே முடியவில்லை! ஆனால், நடப்பவற்றை பார்க்கும்போது நம்பத்தான் வேண்டும். அரசாங்கத்தை விட சில தனி நபர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்டம், நீதி, தர்மம், அரசாங்கம் எதற்கும் கட்டுப்படாத சாஸ்த்ரா பல்கலைக்கழக விவகாரங்களே சாட்சியாகும்!
இந்தியாவில் இரண்டு விதமான சக்திகள் என்ன குற்றம் செய்தாலும் அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படுவதே இல்லை. ஒன்று, அம்பானி, அதானி போன்ற பெரும் தொழில் அதிபர்கள்! இவர்கள் எல்லா சட்டங்களையும் மீறுவார்கள்! அரசு சொத்துக்களையே அபகரிப்பார்கள். ஆயினும், இவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு ஏற்றபடி அரசாங்கமே வளைந்து கொடுத்து சட்ட திருத்தங்கள் செய்து சேவையாற்றும்!
மற்றொன்று, பிராமண சமூகத்து செல்வாக்கான பெரிய மனிதர்கள்! நன்றாகக் கவனிக்க வேண்டும். பிராமண சமூகத்தில் உள்ள சாதாரணமானவர்கள் அல்ல, செல்வாக்கான பெரிய மனிதர்கள்! ஏனெனில், மிகப்பெரிய அக்கிரமக்காரர்களும், அப்புராணிகளும் கலந்ததே அந்த சமூகம்!
கொலை மற்றும் பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட சங்கராச்சாரியாரை எவ்வளவு விரைவாக வெளியே கொண்டு வந்தார்கள்! வெளியே வந்தபிறகு மீண்டும் அவர் லோக குருவாக நடமாட முடிந்தது. தி இந்து, தினமணி, தினமலர் போன்ற பத்திரிகைகள் அவரிடம் இந்து பண்டிகைகளின்போது அருளாசிகளும், வாழ்த்துச் செய்திகளும் வாங்கிப் போடுவதில் வெட்கமே கொள்ளவில்லை. ஆனால், பிரேமானந்தா சாகும்வரை சிறையிலேயேதான் கழித்தார். இந்த வரிசையில் சாகும்வரை இறுதி தீர்ப்பு தராமல் காப்பாற்றப்பட்ட #ஜெயலலிதா தொடங்கி தற்போதைய தேசிய பங்குச்சந்தை #சித்ரா_ராமகிருஷணன், ஆனந்த் சுப்ரமணியம் மற்றும் சிதம்பரம் கோவிலின் #தீட்சிதர்கள் போன்றோர்களே சாட்சி!
நிர்மலா சீதாராமன் எந்த தகுதியும் அனுபவமும் இல்லாமலிருந்தும் புறவாசல் வழியாக எம்.பி. ஆவதும், ராணுவ மந்திரியாவதும், ராஃபேல் ஆவணங்களை வேண்டும் என்றே தொலைப்பதும் ,தேர்தல் நேரத்தில் போர் என்று கூவுவதும் , அப்பாவி இராணுவ வீர்களை பலி கொடுப்பதும்,தேர்தல் முடிந்ததும் தேசத்தை அதானி, அம்பானி, டாட்டா கும்பலுக்கு கூவி விற்பதும், மாமிகள்கூட மக்கள் ஓட்டுப் பெறாமல் , அதிகாரம் பெற்று ஆதிக்கம் செலுத்தலாம் என்பதற்கு நிதர்சனமான ஆதாரம் .
இந்த வரிசையில்தான் சாஸ்த்ரா பல்கலையின் சேதுராமன் வருகிறார். ஆச்சாரமான பிராமண குலத்தில் பிறந்த ஒருவர் அரசாங்க சொத்தையே ஆட்டையை போடத் துணியலாமா? அதுவும், ஏதோ ஒரு கிரவுண்டோ, ஒரு ஏக்கரோ அல்ல!
விரிந்து பரந்துள்ள 58.17 ஏக்கர் நிலங்களை –அதுவும் காவல்துறை சொத்தை–களவாட எவ்வளவு தைரியம் வேண்டும்? இந்த இடம் #எம்ஜிஆர் ஆட்சியின் போது திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்த நிலம். தமிழகத்தில் கோவை, சேலம், சிவகங்கை ஆகிய இடங்களில் இவ்வாறு உள்ளது.
அதாவது, சிறைக் கைதிகளை விவசாயம் மற்றும் கைத்தொழில் சார்ந்த உற்பத்தி முறைகளில் ஈடுபடுத்தி அவர்களின் உழைப்பை நாட்டுக்கும், சமூகத்திற்கும் பயன்படுத்தும் நோக்கமாகும். சுமார் நாற்பதாண்டுகளாக இந்த நோக்கத்தை நிறைவேற்ற அரசாங்கம் ஒரு தனியாரிடம் கெஞ்சியும், சட்டப் போராட்டம் நடத்தியும் தோற்று வருகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் சாஸ்த்ரா கேம்பஸ் இயங்கி வருகிறது. ஒரு பக்கம் சட்டப்போராட்டம் நடத்தினாலும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் 28 கட்டிடங்களை எழுப்புவதற்கு துணைபோன அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார், யார் என்று தீவிர விசாரணை நடத்தி அவர்களை முதலில் அம்பலப்படுத்தி தண்டிக்காமல் இந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
சட்டப் போராட்டத்தில் அநீதிக்கு சாதகமாக அரசாங்கத்தையே அனுசரித்துப் போகும்படி சொன்ன நீதிபதிகளையும் சகித்துக் கொண்டு அடுத்தகட்ட மேல்முறையீடுகளைக் கண்டு 2018 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சாதகமாக இறுதி தீர்ப்பு கிடைத்தது. அதாவது, நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதி வென்றது.
நல்லது. ஆயிற்று நான்காண்டுகள்! ஆயினும், அவர்களை அசைக்க முடியவில்லை. ஊர்ப்பட்ட நியாயங்களை பேசுகின்ற ஊடகங்களில் எத்தனை ஊடகங்கள் இந்த சாஸ்த்ரா பல்கலையின் ஆக்கிரமிப்பு செய்திகளை சரியாக பிரசுரித்தார்கள்? இந்த அநீதியை கண்டித்தார்கள்?
சென்ற ஆட்சியாளர்கள் இந்த தீர்ப்பை செயல்படுத்த வக்கின்றி ஊமையாக இருந்து விட்டனர். புதிய ஆட்சியாளர்கள்தான், வந்தவுடன் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழு அமைத்து களஆய்வு செய்து சென்ற ஆண்டு நவம்பரிலேயே பல்கலைக்கழக நிர்வாகத்தை நிலத்தை காலி செய்து தரும்படி கூறிவிட்டனர்.
அங்கு கட்டப்பட்டுள்ள 28 கட்டிடங்களை இடித்து நிலத்தை பழையபடி ஒப்படைக்க கூறிவிட்டனர்.
அதற்கான கால அவகாசம் தந்து நோட்டீஸ் ஒட்டியும் வந்தனர். அந்த காலக்கெடுவும் முடிந்துவிட்டது. ஏனோ இன்னும் அவர்களை காலி செய்ய முடியவில்லை! அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கு மாறாக இந்த நிறுவனத்தை அரசே கையகப்படுத்தி வேறு பெயரில் அரசின் கல்வி நிறுவனமாக்கி வணிக நோக்கமற்ற கல்வியை வழங்கலாம்!
அந்த சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழக வளாகத்தில்தான் அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் நடக்கின்றன. அந்த கல்லூரி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத பிரபலங்கள் அரிது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியாக உட்கார்ந்து கொண்டு இந்துத்துவ செயல்பாட்டாளராக தன்னை கூச்சமின்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நீதிபதி #ஜிஆர்சுவாமிநாதன் இந்த சாஸ்த்ரா பல்கலைக் கழக நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஊரறிந்த களவாணிகள் நடத்தும் கல்வி நிறுவனத்தில் ஒரு நீதிபதி கால் பதிக்கலாமா?
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்,
இன்றைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போன்றோர் இதன் நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்கள். நேர்மையான அரசியலை வலியுறுத்தி பக்கம், பக்கமாக எழுதும் குருமூர்த்தி இப்படிப்பட்ட களவாணிகளுக்கு பக்கபலமாக இருக்கலாமா? இன்னும் மத்திய ஆட்சியாளர்கள் பலர் இந்த சாஸ்த்ரா பல்கலைக்கு நெருக்கமானவர்களாம். அப்படியானால், அவர்கள் இவர்களுக்கு நல்ல புத்திமதி சொல்லி இருக்க வேண்டுமல்லவா?
சாஸ்த்ரா பல்கலைக்கழக நிகழ்வில் பிரபல வழக்கறிஞர் கே. பராசரன், ஆடிட்டர் குருமூர்த்தி போன்றோர் கலந்து கொள்கின்றனர்.
களவாடப்பட்ட நிலத்தில் கட்டிடங்களை எழுப்பி, கற்றுத் தரப்படுவது கல்வியாகுமா?
சாஸ்திரங்களை, வேதங்களை பேசுபவர்கள் பொதுச்சொத்தை அபகரிக்கும் சதிச் செயல்களை செய்யலாமா? நீதிமன்றங்களுக்கும் மேலானவர்களா இவர்கள்?
சட்டம், நீதி, ஒழுக்கம் இவையெல்லாம் இவர்களுக்கு செல்லாக்காசா? இங்கே ஒரு கண்கூடான அநீதியை, அக்கிரமத்தை நீதிமன்றத்தாலும் , அரசாங்கத்தாலுமே கூட தடுத்து சரி செய்ய முடியாதா?
அப்படியானால், இந்த அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மையும், மரியாதையும் கேள்விக்குள்ளாகாதா? ‘வலுத்தவன் என்ன அக்கிரமம் செய்தும் வாழலாம்’ என்பதற்கு இது முன்னுதாரணம் ஆகிவிடாதா?
தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகமானது நீதிமன்றம், அரசாங்கம் ஆகியவற்றின் இயலாமைக்கு சான்றாக, கம்பீரமாக எழுந்தோங்கி நிற்கிறது!
வெட்கம்! வேதனை! தமிழக அரசு நிச்சயமாக சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்! எடுக்கும்! அதுவரை காத்திருப்போம்!