23/04/2023
#பாதம்வீழ் பாமரன் அல்லன், #பைந்தமிழ்ப் பாவலன்!
#தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு,
எனது அன்பும் வாழ்த்தும் உங்களுக்கு உரித்தாகுக!
ஐயன்மீர்,
கலெக்டராக இங்கு வந்த பின்புதான் எம் மக்களுக்கு நீங்கள் அறிமுகம். ஆனால், குமரி முதல் மதுரை வரையான பத்திரிகை வாசகர்களுக்கு 90 முதலே நான் அறிந்த முகம். ஒழுகு நீர் நுணங்கு அறல் போல், சென்னை வரை கூட ஆங்காங்கே அபிமானிகளை கொண்டவன்.
சமூகப் பயனளிக்கும் 8 நூல்களையும், ஜனரஞ்சக சஞ்சிகைகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகள், நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகள், 50க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி இலக்கியத்தளத்தில் இடம்பிடித்தவன். ஆயிரத்துக்கு மேற்பட்ட மேடைகள், அரங்குகளில் உரைமொழிந்தவன். வானொலியிலும் மக்கள் நடுவிலும் 20க்கு மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியவன்.
இதுவரை என்னை எதற்கும் முன்னிலைப்படுத்தியதில்லை. இப்போது தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.
உங்கள் சொந்த செலவிலல்ல, அரசு செலவில் - மக்கள் செலவில் புத்தக கண்காட்சி நடத்துகிறீர்கள். அதன் முதன்மை நோக்கம், வாசகர், எழுத்தாளர், பதிப்பகத்தாரை ஊக்குவித்து புத்தக புத்தாக்கத்துக்கு வழி வகுப்பது தான். குறிப்பாக, மாவட்டத்து வாசக, எழுத்தாள, பதிப்பக அன்பர்களை உந்துவதற்காகவே மாநில அரசு மாவட்டந்தோறும் கண்காட்சி நடத்துகிறது.
கடந்த முறை நடந்த ஒரு விழாவின்போதே மாவட்ட எழுத்தாளர்கள் பலர் மறுதலிக்கப்பட்டனர். அதை புலனம் மூலம் தங்களுக்கு எடுத்துரைத்தேன். கால அவகாசம் இல்லையென்பதால் அந்த ஆலோசனைகளை நீங்கள் செயலாக்கவில்லை. ஆனாலும், இனி கவனத்தில் கொள்வதாக பதிலளித்தீர்கள்.
இம்முறை இந்த புத்தக கண்காட்சி தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு தங்களால் ஒப்புக்கு (?) அலுவல்சாரா உறுப்பினராக்கப்பட்டுள்ள முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் நேரிலும், தங்களிடம் புலனத்திலும் தெரிவித்தேன். அதுமட்டுமின்றி, இம்மாதம் உழவர் குறைதீர்க்கும் நாளன்று தங்களை நேரில் சந்தித்து மனுவாகவும் கொடுத்தேன்.
ஆனால், முறையாக தமிழ் படித்து, நெறியாக இலக்கியத்தை வழிநடத்தி வருகின்ற என் ஆலோசனையை மயிரளவு கூட நீங்கள் மதிக்கவில்லை. விழா தொடங்கியதற்கு முந்தைய தினம் வரை கூட நம்பிக்கையுடன் இருந்தேன்.
அரசு சார்பிலான விருது, பதக்கம் எதையும் இலக்காக கொண்டு நான் எழுதுவதில்லை. எழுத்து எனது அன்றாட இயக்கம், சமூகத் தொடர்பு, போராட்ட வியூகம். என்னை என் எழுத்தே முன்மொழியும். வழிமொழிய உங்களைப் போன்றோர் உதவி தேவையில்லை. எனினும், அரசு செலவில் நடக்கும் ஒரு விழாவில், அதுவும் 11 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளில், நாளுக்கு இருவர் வீதம் மேடையேற்றினாலும், மாவட்டத்தில் உள்ள என்போன்ற கால்நூறு எழுத்தாளர்களை நீங்கள் கவுரவிக்கலாம். அதாவது, அவர்கள் வரிப்பணத்தில் அவர்களுக்கான மரியாதை - அவ்வளவே!
அலுவல்சார்ந்த உறுப்பினர்களாகிய உங்கள் அதிகாரிகள் இலக்கியம் அறியா அந்தகர்கள். அலுவல்சாரா இரு எழுத்தாளர்களும் தங்கள் தொந்தி நிறைந்தால் போதும் என்று பந்திக்கு முந்துபவர்கள். எனவே அவர்களை குறைகூறினால் என் எழுத்துக்கு இழுக்கு. ஆனால், புலவர்களை மதித்து புரவலர்களே ஆட்சி நடத்திய தமிழ்நாட்டில், மக்கள் பிரதிநிதிகளின் சேவகரான நீங்கள், உண்மையான எழுத்தாளனான என் விண்ணப்பத்தை கழிவறை காகிதமாக கருதிவிட்டீர்கள்.
இப்போது கூட, எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய பொதுமக்களை திரட்டி என்னால் போராட முடியும். எனக்கு இலக்கியம் போல் போராட்டமும் பரிச்சயமே. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற கோட்பாட்டில் வாழும் என்னைப்பற்றி உங்கள் வருவாய், காவல் அலுவலர்கள் மூலம் உசாவி அறிக!
ஆயினும், நூல்நயம் நுவலும் ஒரு விழாவில், என்னால் சிறு குந்தகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக போராட்ட சிந்தனையை கைவிட்டேன்.
இது இரண்டாம் முறை புறக்கணிப்பு, எனக்கு மட்டுமல்ல, என் போன்ற ஏழை எழுத்தாளர் பலருக்கு.
இனியொரு இலக்கிய விழாவை இத்தகைய அலட்சிய பாவத்துடன் நிகழ்த்த நிச்சயம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்பதை விலக்கிவைத்த இலக்கிய கர்த்தாக்கள் அனைவரின் சார்பிலும் துலக்கமாக கூறிக்கொள்கிறேன்.
முத்துநகர் நெய்தல் விழா சிறக்கட்டும்!
புத்தகத்தில் வாசக மனங்கள் லயிக்கட்டும்!
நல்லதையே நாடும்,
இதழாளர் அய்கோ.