17/05/2021
முன்மாதிரி மாநிலம் குஜராத்தின் அவலநிலை. பாகம் 1
பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதிகள் அண்மையில் தென் மாநிலங்கள் – குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா – போன்ற மாநிலங்கள் எவ்வாறு முன்னேற்றமடையவில்லை என்றும், பாஜக தான் ஆட்சி செய்த மாநிலங்களில் எவ்வாறு வளர்ச்சியைக் கொடுக்கின்றன என்றும் இந்த தென் மாநிலங்கள் தாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பவை குறித்தான உரைகள் மற்றும் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். பாஜக தான் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பற்றி அதிக அளவில் பிரகடனம் செய்கின்றனர், குறிப்பாக பிரதமர் மோடி முன்பு முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை வைத்து ‘குஜராத் மாதிரி’ இந்தியாவின் மற்ற மாநிலங்களின் மாதிரியை காட்டிலும் அதிக அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது, மேலும் உலக அளவிலான ‘நகர மாதிரி’களுக்கு இணையான அளவில் குஜராத் வளர்ச்சி கண்டுள்ளது என்பதாக 2013-2014 கால வாக்கில் மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தினர்.
இதன் விளைவாக பாஜகவிற்கு மிகுந்த செல்வாக்கு மக்களிடையே ஏற்பட்டது, அதன் தொடர்ச்சியாக நரேந்திர மோடி முதலமைச்சரிலிருந்து பிரதமராக ‘பதவி உயர்வு’ பெற்றார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே…
குஜராத்தின் சாலைகள் குறித்து பாஜக அரசியல்வாதிகள் பெருமையுடன் பேசுகின்றனர். முக்கியமாக, பாஜகவை ஆதரிக்கும் பக்தாள்களும், (குருட்டு) நம்பிக்கையாளர்களும் இதனையே முக்கிய மாற்றமாக, வளர்ச்சியாக பேசுகின்றனர்.
மாநிலத்தின் சாலைகள், நெடுஞ்சாலைகள், அணைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் அதிகரிப்பு போன்றவற்றின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அடிப்படையில் ‘பொருளாதார வளர்ச்சி’ என்பனவாக ‘குஜராத் மாதிரி’ முன்வைக்கப்படுகிறது.
வெளித்தோற்றத்தை வைத்து, அதாவது சாலைகள், அணைகள், மின்சார வசதி போன்றவற்றை முன்னேற்றமடையச் செய்ததே மிகப்பெரிய வளர்ச்சி எனவும், இதனை வைத்து மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் குஜராத் மாநிலம்தான் இந்தியாவின் சிறந்த ‘மாதிரி’ மாநிலம் என்பதாக கூறிப் பெருமை அடிக்கின்றனர். உண்மைதான்…
குஜராத் மாதிரி என்றால் என்ன? சுருங்கச் சொல்லவேண்டுமானால், இது 2002-03 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் குஜராத்தில் நடந்த பாஜகவின் ஆட்சியினைக் குறிக்கிறது, இதன் போது குஜராத் அதன் வளர்ச்சி விகிதத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது. அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் புதிய தாராளமயக் கொள்கைகள் குறித்த புதுமையான விளக்கம்தான் அத்தகைய மாற்றத்திற்கு உந்துசக்தியாக இருந்தது.
ஆனால் பாருங்கள், ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அம்மாநிலத்தின் உள்கட்டமைப்புடன் முடிந்துவிடுவது அல்ல, மாறாக அம்மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் தனது கால்தடத்தை பதிக்க வேண்டும், முக்கியமாக மனித வள மேம்பாடு, கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வறுமை சார்ந்த பிரச்சனைகள், ஜிடிபி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, பழங்குடியினர் நல மேம்பாடு – இவ்வாறு அனைத்து துறைகளிலும் அம்மாநிலம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களை ஒப்பிடுகையில் முன்மாதிரியாக சிறந்து விளங்கவேண்டும். பாஜகவினர் தான் ஆளும் மாநிலங்களில் குறிப்பாக குஜராத் மாதிரி மாநிலங்களின் வளர்ச்சியை தேர்தல் காலங்களில் மக்களிடம் வாக்கு கேட்கும் கேடயமாக பயன்படுத்துகின்றனர். முன்மாதிரி மாநிலம் என்ற தகுதிக்கு குஜராத் மாநிலம் உரியது தானா? வளர்ச்சி என்பது எதனடிப்படையில் குஜராத்தில் கணக்கிடப்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும். நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் மெச்சிக்கொள்ளும் குஜராத் மாநிலம் ‘மாதிரி’யா? அல்லது வெறும் மாயையா? என்பதை ஒரு சில புள்ளிவிவரங்களின் மூலம் நிதர்சனரீதியாக தெரிந்துகொள்ளலாம்…
1) கல்வி:
பக்தாள்களும், பாஜகவின் ஆதரவாளர்களும் குஜராத்தை மிகச்சிறந்த மாதிரியாக புகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் குஜராத்தின் கல்வித்தரம் என்பது மிக மோசமான நிலையில் இருக்கின்றது. நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்தே அவருடைய முதல்நிலை இலக்காக கல்விமுறையை மாற்றுவது என்பது இருந்துள்ளது. சங்பர்வார்களின் கீழ் இளைய தலைமுறையினருக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் தேசியவாத இந்துத்துவா பற்றின ‘பொருத்தமான’ அறிவு வழங்கப்படவில்லை. மேலும், ஆர் எஸ் எஸ் சித்தாந்தவாதியான தினானத் பத்ரா மாநில அரசின் ஆதரவுடன் பள்ளிப்பாடப் புத்தகங்களில் சில பாடங்களுக்கு ஆசிரியராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமல்ல அப்போதைய முதல்வர் மோடியின் அனுமதியில் தினானத் பத்ராவின் 9 தொகுதி புத்தகங்கள் குஜராத் ஸ்டேட் போர்டு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் துணைக்கட்டுரையாக (Supplementary Reading) சேர்க்கப்பட்டுள்ளது. உண்மைகளுடன் பொய்யை கலப்படம் செய்யும் இத்தகு மாற்றம் அப்போதைய வரலாற்றாசிரியர்கள் ரோமிலா தப்பார் மற்றும் இர்ஃபான் ஹபீப் போன்றவர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. காவிமயமாக்கல் புத்தகங்களுடன் நின்று விடுவதில்லை, மாணவர்களுக்கு சிறுவயதிலிருந்தே ஆர் எஸ் எஸ்ஸினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக வலதுசாரி சிந்தனைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதன்மூலமாக மாணவர்களுக்கு விஷமத்தனமான சித்தாந்தங்கள் கற்பிக்கப்பட்டு முடிவில் ஹிந்துத்துவாவின் காலாட்படையாக அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமநாராயண் சன்ஸ்தா (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha – BAPS) கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் சைவ கலாச்சாரம் மற்றும் மென்மையான இந்துத்துவ கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன, மேலும் வித்யா பாரதியின் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள் இந்துத்துவ அணிதிரட்டலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
மிகப்பெரிய அளவில் ‘கல்வி தனியார்மயமாக்கல்’, கல்வித்தரத்தை சீர்குலைப்பதற்கு மிக முக்கிய காரணியாக உள்ளது. பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் தனியார் நிறுவனங்களின் வருகையின் காரணமாக பொது நிறுவனங்களின் கல்வித்தரம் குறைய ஆரம்பித்தது. முகேஷ் அம்பானியின் சொந்த கல்வி நிறுவனமான பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் 2007 ஆம் ஆண்டு வாக்கில் புகழ்பெற்ற கல்வியாளர்களை கவர்ச்சிகரமான சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தியது. இதே போக்கையே மற்ற தனியார் கல்லூரிகளும் பின்பற்றத் தொடங்க, இதன் காரணமாக தரமான கல்வி கிடைக்க வேண்டுமெனில் அதிகளவு பணம் செலவழித்து படிக்க வேண்டும் நிலை உருவானது. இது தரமான கல்வி, பணக்காரர்களுக்கு மட்டுமே எளிதாக கிடைக்கும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தது.
பொது கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை குறைந்த தரம் கொண்ட கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கொண்டு திக்குமுக்காடியது, மேலும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச தகுதி தேர்வான SET (State Eligibility Test) தேர்வு அதிகபட்ச தகுதி என்ற வரையறைக்கு மாறியது. NET (National Eligibility Test) தேர்வு என்பது நிரந்தர ஆசிரியர் பணிக்கான தேர்வும் அல்ல. மாநில அரசான பாஜக கல்வித்துறைக்கு மற்ற துறைகளை ஒப்பிடும்போது தேவைக்கு குறைவான அளவிலேயே நிதியை ஒதுக்கியது. இதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கல்வித்தரம் மோசமான மாதிரியாக மாறியது.
கல்லூரிகளில் நடத்தப்படும் மாணவர் தேர்தல்களில் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் என்பது கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகும். மாணவர் சங்கத்தின் பதவிகள் பெரும்பாலும் உயர் சாதி இந்துமாணவர்களுக்கே வழங்கப்பட்டு நடத்தப்படுகின்றன.
பொதுக் கல்விமுறை தவறாக சென்று கொண்டிருந்த காரணத்தால், மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளை நம்பி சென்றனர். பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவாயில்கள், SSC / UPSC / GPSC, வங்கி P.O தேர்வுகள் போன்றவற்றுக்கான தனியார் பயிற்சி வகுப்புகள் குஜராத் முழுவதும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அங்கீகாரமும் இல்லாமல் காளான் போல பரவிக்கிடக்கின்றன. இந்த தனியார் நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் கார்ப்பரேட்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் ரீதியாக தொடர்புடைய ஆசிரியர்களாக உள்ளனர்.
இதன் காரணமாகவே அம்மாநிலத்தின் கல்வி முறை மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.
2001 – 2011 கணக்கெடுப்பின்படி குஜராத் மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வியறிவு 79.31% விகிதத்துடன் 18வது இடத்தை பெற்றுள்ளது, தமிழ்நாடு 14வது இடமும், முதலிடத்தை கேரள மாநிலமும் பெற்றுள்ளது.
கல்வியறிவு பெற்ற ஆண்களின் வரிசையில் 87.23% விகிதத்துடன் 15வது இடத்தையும், பெண்களின் வரிசையில் 70.73% விகிதத்துடன் 20வது இடத்தையும் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது. இவை இரண்டிலும் கேரளாவே முதல் இடமாகும்.
கல்வியறிவு பெற்ற பெண்களின் வரிசையில் குஜராத் மாநிலம் 2001ல் 21வது இடத்தையும், மோடி தலைமையிலான ஆட்சியில் 10 வருடங்களில் ஒரு இடம் மட்டுமே முன்னேறி 2011ல் 20வது இடத்தையும் பெற்றிருப்பது பெண்களின் கல்வியறிவு விஷயத்தில் அரசு எந்தளவுக்கு அக்கறையுடன் செயல்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
நரேந்திர மோடி முதலமைச்சரிலிருந்து பிரதமராக நியமிக்கப்பட்ட பின்பும் குஜராத் மாநிலம் கல்விமுறையில் முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை.
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதாக குஜராத் அரசாங்கத்தின் கூற்று இருந்தபோதிலும், நடைமுறையில் நிலைமை மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. கல்வி சார்ந்து நிறைய வளர்ச்சிகளை செய்யத் தவறியதற்காக அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த 2019 ஜனவரி மாதத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால்(HRD) வெளியிடப்பட்ட தேசிய அடைவுக் கணக்கெடுப்பின் (National Achievement Survey – NAS) தகவல்கள், குஜராத் மாநிலத்தில் கல்வியை பொறுத்தவரை மாற்றங்கள் அதிகளவு தேவை என்பதைக் காட்டுகிறது.
குஜராத்தில் ஆரம்பக் கல்வியின் மோசமான நிலையை NAS தகவல்களில் இருந்து அறிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக, 3ஆம் வகுப்பில், 41 சதவீத மாணவர்களுக்கு 999 வரையுள்ள எண்களைப் படிக்கவும் எழுதவும் தெரியவில்லை. நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. உதாரணமாக, 8ஆம் வகுப்பு பயிலும் 41,393 மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53 சதவீதம்) அன்றாட வாழ்க்கை சூழ்நிலைகளில் கூட்டல், கழித்தல் மற்றும் அளவு நிலுவைகளும் 56 சதவீதம் பேருக்கு வகுத்தல் மற்றும் பெருக்கல் சம்பந்தப்பட்ட கணக்குகளைக் கூட தீர்க்கத் தெரியவில்லை. மேலும் 10 மாணவர்களில் 7 பேருக்கு (69 சதவீதம்) கனசதுரம் மற்றும் உருளை பொருட்களின் மேற்பரப்பு மற்றும் பரப்பளவுகளை (Surface Area and Volume) கணக்கிட தெரியவில்லை.
5ஆம் வகுப்பு மாணவர்களில் 10 பேரில் 4 பேருக்கு 1000 க்கும் அதிகமான எண்களை படிக்கவும், எழுதவும் தங்கள் சுற்றுப்புறங்களில் அவ்வெண்களை பயன்படுத்தவும் தெரியவில்லை.
3 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் 17 சதவீத மாணவர்களுக்கு தங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு பயணித்து செல்வதே கடினமாக உள்ளது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களில் 15 சதவீத பேர் தங்கள் படிப்பை விட்டுவிடுகிறார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குஜராத் பல துறைகளில் ஒரு முன்மாதிரியான மாநிலமாக இருக்கிறது, ஆனால் கல்வியில் மட்டும் அல்ல என்று அம்மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.பரவாயில்லை, இவர் இந்த விஷயத்தில் மட்டுமே நேர்மையாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆசிரியர்களின் பற்றாக்குறை, பள்ளிகளின் மோசமான நிலை மற்றும் பள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லாதது குறித்த அரசாங்கத்தின் பதிவுகளை வைத்து ஒரு பார்வை பார்க்கும் போது குஜராத் அரசே வருந்தும் நிலை இருக்கிறது.
செப்டம்பர் 2018 நிலவரப்படி, மாநிலத்தில் 4,033 அரசு தொடக்கப் பள்ளிகளின் வகுப்பறைகள் பாழடைந்து இருக்கின்றன. அத்தகைய வகுப்பறைகளின் எண்ணிக்கை மட்டும் 12,000 ஐ தாண்டும்.
11,376 தொடக்கப்பள்ளிகள் இரும்பு கூரை தாள்களைக் கொண்டுள்ளன என்றும், அதில் வகுப்பறைகளின் எண்ணிக்கை 38,700 என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், குழந்தைகள், மாணவர் பருவம் விளையாட்டு இல்லாமல் இருக்கமுடியாது அல்லவா? இங்கு ”9,000 தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை எனவும் அதில் 6,977 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1,750 பள்ளிகள் தனியார் தொடக்கப் பள்ளிகள் ஆகும்” எனவும் அவரே கூறியிருக்கிறார்.
6,528 அரசு தொடக்கப்பள்ளிகளில் தடுப்புச்சுவர் (Compound Wall) இல்லை.
தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 8,600 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி உரிமைச் சட்டத்தின்படி தேவையான தகுதி இல்லை.
20 அரசு பள்ளிகளில் மின்சாரம் இணைப்பு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் சமீபத்தில் கூட குஜராத்தில் நடந்த ஸ்டேட் போர்டு தேர்வில் 63 பள்ளிகள் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அப்பள்ளிகளில் பயிலும் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை…
இந்த இலட்சணத்தில் குஜராத்தை மாதிரியாகவும், முன்னேற்றமடைந்த மாநிலமாகவும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரி மாநிலமாக காட்ட வேண்டும் என்றே பாஜகவினர் பொய்களை பரப்புகின்றனர். ஆனால் உண்மை நிலையோ அதற்கு மாற்றமாக உள்ளது.
இது வெறும் கல்வித்துறை சார்ந்த விஷயங்கள் மட்டுந்தான், இன்னும் பல துறைகளை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
நான் மேற்கூறியது போல ஒரு மாநிலத்தின் வளமே அம்மாநிலத்தின் அதிகளவு சிந்தனைவாய்ந்த, படிப்பறிவு, எழுத்தறிவு பெற்ற ஆண், பெண் மக்கள் இருப்பதுதான்.
ஆனால் கல்வியறிவு விஷயத்திலே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய மாநிலம் எப்படி சிறந்த மாதிரி மாநிலமாக இருக்க முடியும்.?
ஆகவே, குஜராத் மாநிலம் கல்வியறிவு மற்றும் கல்வித் தரம் போன்ற விஷயங்களில் கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய தென்மாநிலங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்…
- முகமது சாதிக் இப்னு ஷாஜஹான்
#குஜராத் #மோடி #தமிழன் #தமிழ்