05/11/2022
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.
தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக…..
தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று சிறப்பான அதிகாரிகளை, தங்களது முக்கியமான துறைகளின் செயலாளராக நியமித்ததோடு, எதிர்பாராத இலாக்காக்களுடன் அமைச்சரவை ஏற்படுத்திய தருணத்தை மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கின்றேன். முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் திரு. ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய பொருளாதார வல்லுநர் குழு அமைக்கப்பட்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தையும் நினைத்துப் பார்க்கின்றேன்.
சட்டமன்ற பேரவை தேர்தல் பிரச்சாரத்திலும், தேர்தல் அறிக்கையிலும், தாங்கள் மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளில், குடும்ப அட்டைக்கு ரூபாய் 4000 வீதம் வழங்கியது, மகளிருக்கு அரசு நகர்ப்புற பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்தது, பால் விலை குறைப்பு போன்ற சில நிறைவேற்றப்பட்டாலும்,குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவது, மாதம்தோறும் மின் கணக்கீடு செய்வது போன்றவைகள் எல்லாம் 18 மாத காலத்திற்குப் பின்னரும் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக் காட்டப்பட கூடிய உண்மையாக உள்ளது. அதிலும் மாத மின் கணக்கீடு வந்தால், மின்கட்டணம் குறையும் என எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு பேர் அதிர்ச்சியாக செப்டம்பர் 2022 முதல் 50 விழுக்காடு வரை மின் கட்டணத்தை உயர்த்தி அமல்படுத்தி வருவது உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏற்படுத்திய ஏமாற்றம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.
மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள, இஸ்லாமிய சிறைவாசிகளை உட்பட அணைத்து சிறைவாசிகளை விடுதலை செய்வதாக தேர்தல் நேரத்தில் சொல்லியது போல, ஒய்வு பெற்ற நீதியரசர் ஆதி நாதன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பல மாதங்கள் கடந்த பிறகும் அந்த குழு இதுவரை என்ன அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது என்பது தெரியவில்லை. இந்நிலையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பாத்திருந்த நேரத்தில், பலரும் விடுதலை செய்யபடும் தருணத்தில் முஸ்லிம் சிறைவாசிகள் மட்டும் இதுவரை விடுதலை செய்யபடவில்லை. ஆனால், சர்தார் என்கின்ற முஸ்லிமை கொலை செய்த வலதுசாரி சிந்தனையுடைய இருவர் 04/10 அன்று விடுதலை செய்யபட்டுள்ளார்கள்.அதே தகுதியில் உள்ள முஸ்லிம்கள் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.அதனால்,இனியும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால்,தங்களுக்கு நான் இம்மடலை எழுத நேர்ந்தது மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் அல்ல. ஒன்றிய பாசிச அரசு உள்நோக்கத்தோடு, மாநிலங்களவையின் தனிச்சட்டம், பொது மக்களின் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை மீதான நிலை குழு வெளியிட்ட ஒரு அறிவிப்பின் அடிப்படையில் தங்களது அரசின் சட்டத்துறை, மேல் குறிப்பிட்ட நிலை குழு அறிவிப்பின்படி பரிந்துரை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி திரு எம். சத்திய நாராயணா தலைமையில் அவசரம் அவசரமாக குழு அமைத்து, 28.10.22 அன்று உத்தரவிடப்பட்டுள்ள நிகழ்வே நான் இம்மடலை எழுத காரணம்.
ஒன்றிய அரசின் மாநிலங்களவையின் நிலைக்குழு வெளியிட்ட அறிவிப்பில், தனிச்சட்டங்கள் குறித்து ஆலோசித்து கருத்துக்களை ஒன்றிய அரசுக்கு அளிக்க பின்வரும் அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
* இந்திய அரசியலமைப்புச் சட்டத்துடன் மாறுபடும் தனிச்சட்டங்கள் குறித்த விபரம்
* ஆண் பெண் சம உரிமைக்கு ஏற்றவாறு தனி சட்டத்தில் மாற்றம்
* மதங்களின் பழக்கவழக்கங்கள் நியாயப்படுத்தும் சமூக விரோத நடவடிக்கைகள்
* அனைத்து தனிச்சட்டங்களையும் விளக்குவது பயன்படுத்துவதில் உள்ள தெளிவின்மையை நெறிப்படுத்துவது.
* சிறப்பு திருமண சட்டம் 1954 உள்ளிட்டவற்றை சீர்படுத்துவது.
* இரு வேறு சாதி மற்றும் மதம் மாறி மனம் புரிந்த தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது.
* தனிச்சட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தங்களை பொதுமக்களின் புரிதலுக்கு ஏற்ப கொண்டு செல்வது.
* அரசியல் சட்டத்தின் ஆறாவது அட்டவணைப்படி குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகளின் படி தனிச்சட்டம் மற்றும் குடும்ப சட்டங்களை சீர்திருத்துவது.
* நாட்டின் தனிச்சட்டங்களை சர்வதேச அளவில் முறைப்படுத்துவது.
ஆனால் இந்த அம்சங்கள் குறித்து மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு இதுவரை கருத்துக்கள் கேட்கவில்லை. மேலும் இது தொடர்பாக வேறு எந்த மாநிலமும் குழு அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதா வேண்டாமா என்று ஒரு ஆய்வு செய்ய, தங்கள் அரசு அவசர அவசரமாக ஒரு குழு அமைத்து விரைவாக அறிக்கை கூறுவது நியாயமானதாக தெரியவில்லை. பல்வேறு மதங்களும், ஜாதிகளும், மொழிகளும் பின்பற்றக்கூடிய மக்கள் நிறைந்த நாட்டில் பொது சிவில் சட்டத்தை திணிப்பது அவரவர் மத சடங்குகளில் குழப்பம் விளைவிப்பது, இந்தியாவின் இறையாண்மையை பறிக்கக் கூடிய விளைவை நிச்சயம் ஏற்படுத்தும். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்கள்,கிறித்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு எதிரான ஒரு அடக்குமுறை நிகழும், பல்வேறு ஜாதி மக்களும் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதாக அமையும்.
எனவே இந்த குழுவை உடனடியாக ரத்து செய்து உத்தரவை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இத்தகைய கொடிய சட்டங்களுக்கு எதிராக நேரடியாக சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, எதிர்ப்பு தெரிவித்து, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தாங்கள் திகழ வேண்டும் என
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கனிவுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
நேசத்துடன்..
#செ_ஹைதர்_அலி,
#தலைவர்,
#ஐக்கிய_முஸ்லிம்_முன்னேற்ற_கழகம்.