13/06/2024
தமிழரின் பண்பாட்டில் வடிகாதும் அணிகலன்களும்
தொல் பழங்காலத்திற்கு முன்பாகவே தமிழர்கள் தங்களுடைய கலை மற்றும் அழகுணர்ச்சியை அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தினர். இயற்கையைத் தெய்வமாகவும் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட தமிழ் இன மக்கள் தங்களுடைய முதல் அணிகலனை இயற்கையின் எழில்மிகு கற்கள்,பூக்கள், கொடி,ஓலை[1]ஆகியனவற்றை அணிந்து மகிழ்ந்தான். இது தொடர்ச்சியாக உலோகங்களுக்கும் அடிகோலின. கலைத்திறனை வெளிப்படுத்தும் பயன்படு பொருளாகவும் ஒவ்வொரு காலத்திலும் அணிகலன்கள் விளங்குகின்றன.
மனிதகுலத்திற்கு புலன்கள் அவசியமாக கருதப்பெற்றன.தமிழன் அப்புலன்களின் உறுப்புகளுக்கு அழகூட்டிட அணிகளால் சிறப்புற மெருகூட்டினான்.சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ‘’காதொன்று களைதல்’’ [2] என்ற பாடல் அடியிலிருந்து காதணி பற்றிய செய்தியை அறியமுடிகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவரால்,
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை-திருக்குறள்,411.
என்று போற்றப்பட்ட செவியை தமிழன் அலங்கரித்த விதம் பற்றிக் காண்போம்
வடிகாது - காது வடித்தல்
எழில்மிகுச் சிற்பங்களைச் செய்வதை சிலை வடித்தல் என்று கூறுவர். காதினைக் குத்தி , அதில் படிப்படியாக எடையுள்ள சிறிய வளைகளைக் தொங்கவிட்டு காதினைத் தோள் பட்டையைத் தொடாமல் அழகுறத் தொங்கவிடுவது காது வடித்தல் எனப்படும்.
வடிகாது என்ற காதுவடித்தல் வழக்காறு தமிழ் மக்களிடையே சங்க காலம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மங்கலச் சின்னமாக, நம்பிக்கை வயப்பட்ட பழக்க வழக்கமாக இருந்து வந்தது. காது துளையிடப் பெற்று வடிகாதாக நீட்சி பெறச்செய்வர் இது காது வடித்தல் என்றும் கூறப்பெறும்.இது உயர்வான அழகுணர்ச்சியின் அடையாளமாகக் கருதப் பெற்றது.
முற்காலத்தில் இளம்பெண்களுக்கு மணமாவதற்கு முன்பாக காதுவடித்து சிறிய அணிகலன்களை அணிந்து மகிழ்வர். மணமான பெண்கள் பாம்படம், தண்டட்டி, திருகு என்ற கனமான உள்ளீடுகளைப் பெற்ற தங்கம், வெள்ளி நகைகளை அணிவர். வளமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகமாக நகை அணிந்து, வடிகாது தோள்பட்டை வரை நீட்சி பெறுவதுண்டு. இவ்வாறு காதுவடித்து நகைகளைப் பூட்டி மகிழ்வது மங்கலமாகக் கருதப்பட்ட நம்பிக்கை வயப்பட்ட பழக்கமாக இருந்து வந்தது. காதின் மேற்பகுதி, மையப்பகுதி காதின் அடிமடல்பகுதி என மூன்று இடங்களில் விதவிதமாக அணிகளை அணிந்துள்ளனர்.
கி.பி.2 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழரின் பண்பாட்டிற்குள் பெளத்தம் ,சமணம் ஆகிய இரு சமயங்களின் புகுந்து செழித்தன.பெளத்த,சமண முனிவர்கள் தங்களுடைய காதினை வடிகாதாகத் தொங்க விட்டுக் கொண்டனர். என்பதை சமணர்மலை, நாகமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம்,ஆனைமலை, அழகர்மலை, ஆறுநாட்டான்மலை,சித்தன்னவாசல்,ஆகியவற்றில் காணப்படும் புடைச்சிற்பங்கள்,தூண் சிற்பங்கள், எழில்மிகு ஓவியங்கள் மூலம் அறியலாம். தங்களுடைய காதினை வடித்துக் கொண்டது நம்பிக்கை வயப்பட்ட பண்பாட்டுக் கூறாகக் கருதலாம். வடிகாது வழக்காறு தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றாக இருந்தது என்பதற்கு அடிப்படையாக பல்லவர் குடைவரைப் படைப்புக்களில் முதன்மையான மாமல்லபுரத்திலும், பாண்டியரின் குடைவரைப் படைப்புக்களில் கழுகுமலையிலும், சோழரின் கலைப்படைப்புக்களில் வடிகாது வடிவங்கள் தஞ்சையிலும் நிறைந்துள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் காணப்பெறும் சிலைகள், கோபுரங்கள்,தூண் சிற்பங்கள்,ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பல்வேறு காலங்களில் ஆட்சி செய்தவர்களுடைய காலங்களிலும் வடிகாது என்பது தொடர்ந்து வரும் கூறாக காட்சி தருகின்றன. .
இயற்கை அணிகலன்கள்
இயற்கையோடு இயைந்து தங்களுடைய வாழ்வியலை அழைத்துக் கொண்ட தமிழர்கள் தாங்கள் அணிந்த ஆடை,அணிகலன் ஆகியவற்றை இயற்கைப் பொருட்களால் அமைத்துக் கொண்டனர்.
பனைமரத்தின் குறுத்தோலையைச் சுருட்டிக் காதில் அணிந்தனர்.இது குதம்பை ஆகும்.அதன் நடுவில் இடையே நீலத்தாமரையைச் சொருகி வைக்கப்பட்டால் அது நீலக்குதம்பை என்றும் அழைக்கப்பட்டது.
குழைவடிவமாக அழைக்கப்படும் காதணி திருக்குதம்பை ஆகும். வலம்புரிச் சங்கில் செய்யப்பட்ட தோடு பெண்களால் மிகவும் விரும்பி அணியபெற்றது. சங்கினை அறுத்து அணிகலன் தயாரிக்கும் தொழிற்கூடங்கள் தமிழகத்திலுள்ள துறைமுகப்பட்டினங்களில் ஏராளமாக இருந்துள்ளன. இன்றும் அத்துறைமுகப்பட்டினங்கள் இருந்த பகுதிகளில் பூமிக்கடியில் சங்கு அணிகளின் விதவிதமான வடிவங்கள், வேலைப்பாடுகளுடன் கூடியவைகள் கிடைத்து வருகின்றன.
மணிமேகலைப் பாடல் சங்குத்தோடு பற்றி, “ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெந்தோட்டு”என்று குறிப்பிட்டுள்ளது.
காதில் அணியும் அணிகலன்கள் பல்வேறு பெயரிட்டு அழைக்கப் பெற்றன. தோடு என்ற அணிகலன் காதுடன் இணைக்கப் பெற்று ஒட்டியிருக்கும்.தோட்டிலிருந்து தொங்கும் நகை தொங்கட்டான் எனப்படும். ஒட்டு,ஓலை, சின்னப்பூ,கொட்பூ, கன்னப்பூ, குழை [3], கம்பி,வல்லிகை, குணுக்கு,தருப்பு,கடுக்கண், மகரி,வீரசன்னம், திரிசரி, பஞ்சரி, நவசரி, நவகண்டி,அட்டிகை, கடிப்பினை, தண்டட்டி, குண்டலம், கொப்பு,புகடி, முருகு, செவிப்பூ, மடல், சன்னாவதஞ்சம்,பாம்பணி, நாகபடம்,பாம்படம்,குதம்பை, நீலக்குதம்பை, சந்திரபாணி, குரடு, செவியீடு என்பனவாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில்,பெருமாளின் நவத் திருப்பதிகள் பல்வேறு சிறப்பியல்புகளுடன் அமைந்துள்ளன.அவற்றுள் தென்திருப்பேரை [3] மூலவர் மகரத்தை [மீனை] அணிகலனாக குழையாக [4] தனது வடிகாதில் அணிந்து கொண்டதால், மகரநெடுங்குழைக்காதர் என்று அழைக்கப்படுகின்றார்.
பெண்களும் மகரக்குழையை [5] அணிந்தனர் என்று ஒட்டக்கூத்தர் கூறுகின்றார்.
தெய்வங்கள்,உயர் நிலையில் மற்றவர்களால் வழிபடத்தக்க இடத்தில் வாழ்ந்தோர் மட்டுமின்றி எளிய மக்களும் நாகரீகத்தின் வெளிப்பாடாகக் காது வடித்தலைக் கொண்டிருந்தனர்.
பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களுடைய காதுகளை வடித்துக் கொண்டு அழகுபடுத்திக் கொண்டனர் அதற்குச் சான்றாக முற்கால ஓவியங்களும்,சிற்பங்களும் உள்ளன.
பொற்பூ
காதிலணியும் அணிகலன் பொற் கன்னப்பூ என்றும்,மற்றுமொரு அணிகலன் நாறைக்கண்பட்டி என்றும் அழைக்கப்பட்டது. வளைய வடிவில் இருபகுதிகளாகச் செய்யப்பட்டு திருகாணி மூலம் பொருத்துவது தாழக்கூட்டுக்கம்பி ஆகும். சோழர் காலத்தில் முத்து பதிக்கப்பட்ட காதணி வடுகவாலி எனப்பட்டது. அது வட்டவடிவில் அமைந்ததாகும். வட்டவடிவ வாலி மக்களால் இரட்டை வாலி [7] என்றும் அழைக்கப்படுகிறது.
பூடி
மேற்காதில் அழகுற பூவடிவத்தில் அணிவது கொட்பூ எனப்பட்டது. திருகாணியோடு இருக்கும். கொட்பூ “ பூடி “ என்று தூத்துக்குடி வட்டாரத்தில் அழைக்கப்படுகின்றது. நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “முத்தின் சிடுக்கு”எனப்படும்.[8]. இப்பகுதியில் நீலக்கல் மற்றும் முத்து பதிக்கப்பட்ட காதணி “கடுக்கண்” என்று கூறப்படுகிறது. “சிடுக்கு” “கடுக்கனாக”திரிபடைந்துள்ளது.
நாகரிக வளர்ச்சி
நாகரிக வளர்ச்சி , மக்களின் தகவல் தொடர்பு மேம்பாடு இவற்றால் இந்நாளில் காதுவடிக்கும் வழக்காறு நின்று போயிற்று. முன்னரே காது வடித்தவர்கள் மருத்துவ அறுவைச் சிகிச்சை மூலம் வடிகாதை அகற்றி ஒட்டவைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை இழந்தவர்கள் [ நாடார் சமுதாயத்தினர் ] வடிகாதில் அணிகலன் அணியாது வெள்ளை ஆடை அணிந்து இருந்தது, ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கூறாகும்.
முனைவர் தவசிமுத்து மாறன்
குறிப்புகள்
1] தி.வை.சதாசிவ பண்டாரத்தார்,கல்வெட்டுகளில் தமிழ் இலக்கியம்,ப.87.
2] தொல்காப்பியம்,பொருள், 258.
3] ‘குழை என்ப தளிர் துவாரங் குண்டலஞ்சேறு’பிங்கல நிகண்டு,252.
3] தென்திருப்பேரை திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
4] நாராயண தீட்சிதர்,தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை,பக்.25,26.