26/03/2022
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பைத் திரும்பப் பெறவேண்டும்; பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்; முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது; விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உரிமைகளைத் தட்டிப் பறிக்கக் கூடாது; உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28, 29 தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் முன்னின்று நடத்தும் நாடு தழுவிய போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது.
சுமார் 25 கோடி பேர் பங்கேற்பர் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் மீது அக்கறைக் கொண்டுள்ள அரசாக இருந்தால் ஒன்றிய அரசு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் போராட்டத்தை நசுக்க பல்வேறு வகையிலான முயற்சியை ஒன்றிய அரசு செய்து வருவதாகத் தெரிகிறது. கோரிக்கைகள் மிகவும் நியாயமானதாக இருப்பதால் பொதுமக்களின் ஆதரவும் பரவலாக இப்போராட்டத்திற்கு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் பங்குகொள்வர் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி