காலாற நான் நடந்த,
களத்துமேடு சுகந்தானா..?
நல்ல தண்ணீ நான் குடிச்ச,
நலிஞ்ச ஓடை நலந்தானா..?
காட்டுல என் கால் துளச்ச,
முங்கி முள்ளு சுகந்தானா..?
வலிபொறுக்க நான் மிதிச்ச,
பசுஞ்சாணமது நலந்தானா..?
பசங்க நாங்க கூத்தடிச்ச,
பாலமது சுகந்தானா..?
காத்துல நான் பறக்கவிட்ட,
பட்டமது நலந்தானா..?
குச்சி தந்து வாங்கிவச்ச,
மயிலிறகு சுகந்தானா..?
குறிபாத்து நான் எறிஞ்ச,
நாத்துக்கட்டு நலந்தானா..?
பட்டிக்காட்டில் நான
் பறிச்ச,
பட்டிப்பூவு சுகந்தானா..?
பல்துலக்க நான் ஒடச்ச,
வேப்பங்குச்சி நலந்தானா..?
நித்தம் நீந்தி குளிச்சிருந்த,
கொளமும் அது சுகந்தானா..?
நீராகாரம் நான் குடிச்ச,
கலயமும்தான் நலந்தானா..?
நலமறிய நான் கேட்டேன்!
ஆனா,
என்னக் கேட்க நாதியில்ல!
நம்பித்தான நானும் வந்தேன்...
இந்த பாழும் நகரத்துக்கு!
வாகன சத்தமெல்லாம்...
வண்டு சத்தத்துக்கு ஈடாகுமா..?
இத்தன பேர் இங்கிருந்தும்...
இருக்குதிங்க அனாதை இல்லம்!
அங்க, தண்ணி தெளிச்சு கோலம் போட்டோம்.
இங்க, தண்ணி இல்லாம ஓலம் போட்டோம்.
'குக்கர்' சொல்லுது 'பொங்கலோ பொங்கல்'
கோயில் 'மிஷின்' அடிக்குது மேளச்சத்தம்!
பணத்த பாத்த மக்கா-மனித
மனத்த பாத்ததுண்டா!
எங்காத்தா சொல்லும்...
நாலு ஓடைய தாண்டுனா
நம்ம வயலுடான்னு!
இங்கயும் சொல்றான்...
நாலு சாக்கடைய தாண்டுனா
சந்துக்குள்ள வீடுன்னு!!
ஒத்தயடிப் பாதயில...
நெரிசலின்றி போய்வருவோம்!
கட்டவண்டி ஏறி நாங்க...
காடுகள தாண்டிடுவோம்!
மாடுகள மேய்ச்சு நாங்க...
மனநிறைவா வாழ்ந்திடுவோம்!
அசந்துவர தூக்கத்துல...
கனவுபல கண்டிடுவோம்!
வீறுகொண்ட சிங்கம்போல...
வீதியெங்கும் வந்திடுவோம்!
வெக்கப்படும் பொண்ணப் பாத்தா...
'வெள்ளந்தியா' சிரிச்சிடுவோம்!
அன்பு வச்ச உள்ளத்துக்கு...
ஆயுசுக்கும் உழைச்சிடுவோம்!
அதுல வர சந்தோசத்தில்...
ஆயுள் நூறு வாழ்ந்திடுவோம்!