18/04/2021
கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் தேவியானவள் கன்னியாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை இந்த வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். புராண காலங்களில், கடும் தவத்தை மேற்கொள்வதன் மூலம் அசுரர்கள் கூட வரங்களைச் சுலபமாகப் பெற்று விடுவார்கள். கடும் தவத்தில் மயங்கும் அந்த மும்மூர்த்திகளும் வரத்தை அளித்து விடுவார்கள். இப்படித்தான் பாணாசுரன் எனும் அரக்கன் பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் புரிந்து ‘தன்னை யாராலும் அழிக்க முடியாது என்றும்’, ‘ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர தனக்கு வேறு எவராலும் இறப்பு ஏற்படக் கூடாது’ என்றும் வரத்தினை பெற்று விட்டான். அந்த அரக்கன் நினைத்துள்ளான் ‘மென்மையான தேகத்தையும், மனதையும் கொண்ட ஒரு கன்னிப்பெண் மூலம் எப்படி மரணம் நிகழ முடியும்’ என்று இப்படி ஒரு வரத்தை வாங்கி விட்டான்.
வரத்தினை பெற்றுக்கொண்ட பாணாசுரனின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முனிவர்களையும், தேவர்களையும் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தான். இதனால் தேவர்களும், முனிவர்களும் விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்தனர். ஆனால் விஷ்ணுவோ பாணாசுரனின் மரணத்தில் இருக்கும் ‘கன்னிப் பெண்ணால் தான் மரணம்’ என்ற ரகசியத்தை அவர்களுக்குக் கூறினார்.
விஷ்ணுவின் அருகில் அமர்ந்து கொண்டிருந்த சிவபெருமான் இதற்குத் தீர்வு வழங்கினார். அந்த அசுரனை அழிப்பதற்கு, அம்பாளான சக்தி தேவியினால் தான் முடியும் என்ற ஆலோசனையைத் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கூறினார். தேவர்களும், முனிவர்களும் சக்தி தேவியை நினைத்து தவம் மேற்கொண்டனர்.
தேவர்களையும், முனிவர்களையும் அந்த அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, சக்திதேவி கன்னிப் பெண்ணாக, தென்பகுதியான குமரியில் அவதரித்தாள். இந்த பூமியில் கன்னிப் பெண்ணாகப் பிறந்த சக்திதேவி அந்த ஈசனிடம் பக்தி கொண்டு, ஈசனை மணம் முடிப்பதற்கு கடும் தவத்தை மேற்கொண்டாள்.
அந்த சமயத்தில் சிவபெருமானும் சுசீந்திரம் என்னும் இடத்தில் தாணுமாலயன் என்ற பெயர் கொண்டு வாழ்ந்து வந்தார். பூலோகத்தில் கன்னிப் பெண்ணாக அவதரித்த சக்தி தேவியின் அழகினை பார்த்து அவரை மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார் ஈசன்.
இதனை அறிந்த தேவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. சக்தி தேவிக்குத் திருமணம் ஆகிவிட்டால் அந்த அசுரனை எப்படி அழிப்பது என்று தான். ஆனால் முக்காலத்தையும் உணர்ந்த அந்த நாரத முனிக்கு மட்டும் இது அந்த ஈசனின் திருவிளையாடல் தான் என்பது புரிந்தது.
சக்தி தேவிக்கும், ஈசனுக்கும் நடக்கப்போகும் திருமண பேச்சானது சபைக்கு வந்தது. ஆனால் இந்தத் திருமணமானது எப்படியாவது நிற்க வேண்டும் என்பது தான் தேவர்களின் எண்ணமும், நாரதரின் எண்ணமுமாக இருந்தது. திருமணத்தை நிறுத்துவதற்கு நாரதர் கலகத்தைத் தொடங்கிவிட்டார். நாரதர் கலகம் நன்மையில் தானே போய் முடியும்.
நாரதர் சிவபெருமானைப் பார்த்து தேவர்களது சார்பில் ஒரு கோரிக்கையை வைத்தார் ‘சூரியன் உதயத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளையான சிவபெருமான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து விடவேண்டும்’ என்பதுதான் அது. தேவியிடமும் இந்த கோரிக்கையானது கூறப்பட்டது. மாப்பிள்ளை சூரிய உதயத்திற்கு முன்பு வரவில்லை என்றால் இந்தத் திருமணம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது
திருமணம் நடைபெறும் நாள் வந்தது. சுதந்திரத்தில் இருந்து சிவபெருமான் குமரி நோக்கிப் புறப்பட்டார். விடிவதற்கு முன்பாகவே நாரதர் சேவலாக உருவம் எடுத்துக் கூவி விட்டார். சேவலின் சத்தத்தைக் கேட்ட சிவபெருமான் சூரியன் உதித்து விட்டது இனி சென்றாலும் திருமணம் நடக்காது என்று நினைத்துக் கொண்டு திரும்பவும் சுசீந்திரத்திற்க்கே சென்றுவிட்டார்.
குமரிமுனையில் திருமணத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் தேவியின் கோபம் உச்சத்தை எட்டியது. சூரியன் உதித்து விட்டார். ஆனால் இன்னும் தேவியை மணம் முடிப்பதற்காக ஈசன் வரவில்லை என்ற கோபம் தேவிக்கு அதிகமாகியது. திருமணத்திற்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களையும், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூக்களையும் எடுத்து கடல் மணல் பரப்பில் வீசினாள். இதனால் தான் கன்னியாகுமரியில் இருக்கும் மணல் பரப்பானது வண்ணங்களாகக் காட்சி தருகிறது என்று கூறப்படுகிறது.
இந்த சமயம் பார்த்து பாணாசுரன், தேவியின் அழகில் மயங்கி தேவியை மணந்து கொள்வதற்காக வருகை தந்தான். தேவி இப்போது கோபத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றாள். தனது விருப்பத்தைக் கூறிய பாணாசுரனிடம் ‘உன்னை மணப்பது எனக்கு விருப்பம் இல்லை’ என்று கூறிவிட்டாள். ஆனால் பாணாசுரன் விடவில்லை. கட்டாயப்படுத்தி சக்திதேவியிடம் மணமுடிக்க வற்புறுத்தினான்.
தேவியை நெருங்க நினைத்த பாணாசுரனால் அருகில் கூட நெருங்க முடியவில்லை. அவளது கோபம் தீப்பிழம்பு எடுத்தது ஓங்கி உயர்ந்து, வானளாவிய உருவத்தைக் கொண்ட பராசக்தி தேவி பாணாசுரனை தன் கால்களால் மிதித்து வதம் செய்தாள். தேவர்கள் அனைவரும் தேவியைப் பூக்கள் தூவி சாந்தம் அடையச் செய்தனர். தங்களைக் காப்பாற்றிய தேவிக்கு நன்றியையும் பணிவோடு தெரிவித்துக் கொண்டனர்.
கோபம் தணிந்த தேவி சாந்தி அடைந்து அன்று முதல் இன்று வரை கன்னியாகுமரியில் கன்னிப் பெண்ணாக, பகவதி அம்மனாக அமர்ந்து, அந்த சிவபெருமானை நினைத்துக் கொண்டு மக்களின் குறைகளை நீக்கிக் கொண்டிருக்கின்றாள் என்கிறது வரலாறு.
பலன்கள் :-
திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்த கோவிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும். காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
#கன்னியாகுமரி