02/04/2024
*சோளப்பயிர் தோட்டத்திற்கு படையெடுக்கும் கிளிகள் - கிருஷ்ணகிரி அருகே கிராம மக்கள் மகிழ்ச்சி*
கிருஷ்ணகிரி அருகே சோளப்பயிர் தோட்டத்துக்கு உணவு தேடி ஏராளமான கிளிகள் வருவதால், சோளத்தை அறுவடை செய்ய மனமின்றி விவசாயிகள் அப்படியே விட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுதானிய பயிர்களான ராகி, சோளம், சாமை, கம்பு உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி ஆகிறது. இதில் 8 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோளம் விதைக்கப் பட்டாலும், கிருஷ்ணகிரி அருகே பெத்தாளப்பள்ளி, தின்னகழனி, கங்லேரி, வடுகம்பட்டி உட்பட சுற்றுவட்டாரக் கிராமங்களில் ராகி, சோளம் அதிகளவில் பயிரிடப்படு கிறது. மேலும், கிருஷ்ணகிரி அணை நீர்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமங்களில் ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உள்ளதால் சோளப் பயிர்களை பயிரிடு கின்றனர். இந்நிலையில், தின்னகழனி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிர் தோட்டத்துக்கு அதிகளவில் பச்சைக் கிளிகள் படையெடுத்து வருகின்றன. இவை ஒன்றோடு ஒன்று விளையாடி எழுப்பும் ஓசையால் தின்னகழனி பகுதி விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தின்னகழனி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அபிமன்னன் கூறும்போது, கிராமப்புறங்களில் உள்ளவர்கள், சோளத்தை முக்கிய உணவாக பயன்படுத்தி வருகின்றனர். சோளத்தில், 'கார்போஹைட்ரேட்' அதிகம் உள்ளதால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவாகவும் விளங்குகிறது. சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு காரணமாக சோளம் நுகர்வு அதிகரித்துள்ளது. தற்போது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளோம். சோளம் கதிர்விட்டு விளைந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், சோளப்பயிர் தோட்டத்திற்கு உணவு தேடி பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பச்சை கிளிகள் அதிகளவில் சோளத்தை திண்பதற்காக கூட்டம், கூட்டமாக வருகின்றன. இதனால் அறுவடைக்கான காலம் முடிந்தும் பயிர்களை கிளிகளுக்காக அப்படியே விட்டுவிட்டேன். கிராமத்திற்கு அதிகளவில் வரும் பச்சை கிளிகளால் குழந்தைகள் உட்பட அனைவரும் அதனை கண்டு ரசிக்கின்றனர், என்றார்.