04/09/2022
ஆசிரியர் குரலின் புதிய
மின் இதழ்
SGS e-magazine.
முதல் தொடர்
வாரம் ஒரு சாதனை ஆசிரியர் அவரின் சாதனை மாணவர்கள் அவ் வாரம் முழுதும்.
5/9/2022
சாதனை ஆசான்
முத்துக் குமரன்
பண்ருட்டி
அ.முத்துக்குமரன்.
ஓவிய ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்.
கூடுதல் பொறுப்பு:
சாரண ஆசிரியர் மற்றும்
நூலகப் பொறுப்பு ஆசிரியர்.
21-ஆண்டு கால ஓவிய ஆசிரியர் பணி.
ஓவிய ஆசிரியராக:
தான் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றும் பள்ளிகளில் ராஜா ரவிவர்மா மாணவர் ஓவிய நுண்கலை மன்றம் மூலம் வருடந்தோறும் இரண்டு முறை ஓவியக் கண்காட்சி,ஒரு முறை ஒளிப்படக் கண்காட்சி, துறை சார் வல்லுனர்களைக் கொண்டு ஓவிய மற்றும் ஒளிப்படப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார்
வாரந்தோறும் ஒருநாள் , நுண்கலை மன்றம் மூலம் மாலை நேர ஓவிய நுட்ப வகுப்புகள் நடத்துகிறார்
பள்ளியின் சிறந்த ஓவிய மாணவர்களை மாநிலத்தின் பலபகுதிகளில் நடைபெறும் பயிலரங்குகள், போட்டிகள், கண்காட்சிகள் என தன் சொந்தப் பொறுப்பில் அழைத்துச் சென்று அவர்களின் உள்ளார்ந்த கலை வளர்ச்சிக்கு துணை நின்று வருகிறார்.
ஓவியம் - காண்கலைப் பிரிவில் மாவட்ட , மாநில , தேசிய அளவிலான போட்டிகளில் தம் பள்ளி மாணவர்களின் வெற்றிக்கு அடிநாதமாக, காரணமாக, பயிற்சியாளராக விளங்கிவருகிறார்.
ஓவியம் மட்டுமல்லாமல், சிற்பம் வடித்தல் , வினாடி வினா, இசைப் போட்டி, பேச்சுப் போட்டி , ஒப்பனைப் போட்டி மற்றும் நாட்டுப் புறக் கலைகளுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெறச் செய்து வருகிறார்.
நன்கொடையாளர்கள் மூலம் பள்ளியின் சுற்றுச்சுவர்களை சுவரோவியங்களால் அலங்கரித்து வருகிறார்.
தம் பள்ளி ஓவிய மாணவர்களைக் கொண்டு அவ்வப்பொழுது தம் பள்ளியில் அங்கங்கு கலை, பண்பாடு, அறிவியல் , சுற்றுச்சூழல் தொடர்பாக அழகிய சுவரோவியங்கள் வரைந்து வருகிறார்.
குறிப்பிட்ட சில சிறப்பு நிகழ்வுகளின் போது தம் மாணவர்களைக் கொண்டு சாதனை ஓவியங்கள் வரையச் செய்தும் வருகிறார்.
மேலும் , தமிழக அரசுப் பாடநூல் தயாரிப்பில் இடம் பெற்ற ஓவியர்கள் குழுவில் முதல் , ஆறு, ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாட நூல்கள் பிரிவில் இவரும் இடம் பெற்று அதற்கான ஓவியங்களை வரைந்ததின் மூலம் சிறந்த பங்களிப்பை வழங்கிவருபவர்.
வருடந்தோறும் மாணவர்களுக்கு ஓவியக் கல்லூரிகள், ஓவியமேற்படிப்புகள், துறைசார்ந்த வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை அளித்து ,துறைசார் ஆர்வம் ஊட்டி ஓவியக் கல்லூரிகளில் - அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சேர ஆர்வமூட்டுவது. சேர்த்துவிடுவது ..
இப்படிப் பல மாணவர்கள் இன்று இவரால் ஓவியம் சார்ந்த துறையில் கால்பதித்து தம் வாழ்க்கைக்கான பொருளை ஈட்டி வருவதோடு அவர்களுள் ஒரு சிலர் ஓவியப் பொருட்களை வாங்கி வழங்கி தம் அடுத்த தலைமுறையின் ஓவிய ஆர்வத்திற்கு துணை நிற்கின்றனர்.
சித்திரம் கற்போம் என்ற வாட்ஸ்அப் குழு மூலம் தமிழகம் முழுதும் உள்ள தன் நண்பர்களின் , தன் உறவினர்களின் , தன் மாணவர்களின் குழந்தைகளை மட்டும் அல்லாது ஓவிய ஆர்வம் கொண்ட பிற மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து அவர்களது ஓவியங்களை குழுவில் பகிர வைத்து உற்சாகப்படுத்துதல் , ஓவியம் தொடர்பான ஐயங்களை தீர்த்தல் , ஓவிய நிகழ்வுகள், கண்காட்சிகள், பயிலரங்குகள், போட்டிகள் தொடர்பான செய்திகளைப் பகிர்வதன் மூலம் அவர்களது ஓவியத்திறன் வளர்ச்சிக்கு அவரிடத்தில் இருந்தவாறு உதவி வருகிறார்.
சாரண ஆசிரியராக:
சாரண ஆசிரியர் பொறுப்பை கூடுதலாக ஏற்றிருக்கும் இவர் சாரணப்பயிற்சியில் HWB - Himalayan Wood Badge என்கின்ற இமய வனக்கலைப் பயிற்சியை முடித்துள்ளார்.சாரண ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பயிற்சி இது.
காடாம்புலியூர், பண்ருட்டி ஆகிய இரு பள்ளிகளிலும் சாரண ஆசிரியராக பணிபுரியும் காலகட்டத்தில் இதுவரை 180க்கும் மேற்பட்ட சாரணர்களுக்கு இராஜ்ய புரஸ்கார் என்ற விருதினையும் இரண்டு சாரணர்களுக்கு ராஷ்ட்ரபதி விருதினையும் பெற பயிற்சி அளித்திருக்கிறார்.
மேலும் பள்ளியில் சாரணர் படையின் அனைத்து செயல்பாடுகளையும் மிக உயிர்ப்புடன் நடத்தி வருவதுடன் பள்ளியளவிலான முகாம்களை வருடத்திற்கு இரு முறை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.
சாரணச் செயல்பாடுகள், சேவை முகாம்கள், வழிநடைப்பயணங்கள், பாடித் தீ நிகழ்வுகள், சர்வ சமய வழிபாடு நிகழ்வுகள் என ஒவ்வொன்றிலும் இவரது சாரண இயக்க செயல்பாடுகள் முத்திரை பதித்தவை.
மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கரங்களால் சாரணர்களுக்கான ராஜ்ய புரஸ்கார் விருதினை ஆளுநர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பெற்று வந்ததோடு அங்கு நடைபெற்ற தேநீர் விருந்திலும் பங்குபெறும் பெருவாய்ப்பு இவருக்கும், இவரது சாரணர்களுக்கும் கிடைத்தது.
அடுத்து சென்னையில் நடைபெற்ற கேம்போரி எனப்படும் சாரணர் பெருந்திரளில் தம்பள்ளி மாணவர்கள் இடம் பெற்ற கடலூர் மாவட்ட அணிக்குப் பெறுப்பாசிரியராக , பயிற்சியாளராகப் பயணித்துச் சென்றார் . அங்கு நடைபெற்ற மாநில அளவிலான சாரணப் போட்டிகளில் கடலூர் மாவட்ட அணியானது மாநில அளவிலான இரண்டு முதல் பரிசுகளைப் பெறக் காரணமாக இருந்ததோடு, அந்தக் கேம்போரி வளாகத்தில் மிக நீண்ட புகைப்படக் கண்காட்சியினை நடத்தி அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்றார். மேலும் மாநில அளவிலான சாரணர்கள் பங்கேற்ற ஓவியப்போட்டிகள் மற்றும் BP Wall என்ற நிகழ்வு இரண்டையும் செம்மையாக வடிவமைத்து சிறப்பாக நிகழ்த்துவதில் பெரும் பங்கு இவருடையதாக இருந்தது.
மேலும் இவர் தொகுத்த சாரணர் கையேடு என்ற நூல் அப்போதைய சாரண மாநிலத் தலைவர் மணி அவர்கள் முன்னிலையில், அப்போதைய சாரண முதன்மை ஆணையர் ரெ.இளங்கோவன் அவர்கள் கரங்களால் கேம்ப்போரி மேடையில் வெளியிடப்படும் வாய்ப்பையும் பெற்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக மெசஞ்சர் ஆஃப் பீஸ் ஸ்டார் என்ற சர்வதேச விருதைப் பெற்ற இருபத்து இரண்டு இந்திய சாரணர்களுள் இவரும் ஒருவர் .அந்த விருதைப் பெற்ற இரண்டு தமிழர்களுள் ஒருவர் .இந்த விருதினை கல்கத்தாவில் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அப்போதைய ஆசியா பசிஃபிக் ரீஜியனின் ஆணையர் ரிசோல் பாங்கினைன் அவர்கள் முன்னிலையில், அப்போதைய தேசிய முதன்மை ஆணையர் B. I. நாகரலே அவர்கள் கரங்களால் பெற்ற பெருமைக்குரியவர்.
தன் சிறு வயது மூலம் வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவர் ஓவியராக ஆனதற்கும், ஓவிய ஆசிரியராக ஆனதற்கும் காரணம் இவர் வாசித்த நூல்களே காரணம் ...ஆம் சிறுவயதில் வாசித்த சித்திரக்கதைகளில் இருந்த ஓவியங்களையும் தொடர்கதைகளில் இருந்த ஓவியங்களையும் பார்த்து வரைந்து பார்த்தே தன் திறமையை வளர்த்துக்கொண்டவர்.
நூல்களின் மேலும், வாசிப்பு மேலும் தனியாத ஆர்வமும், அபிமானமும் கொண்டவர். சிறுவயது முதல் தனது சேகரிப்பில் உள்ள புத்தகங்களைக் கொண்டு தனது வீட்டில் ஒரு நூலகம் அமைத்திருக்கிறார்.
அதில் துறைவாரியாக நூல்களை அடுக்கி பராமரித்து வருகிறார்.இன்னும் புத்தகக் கண்காட்சி நடக்கும் இடங்களில் எல்லாம் அவரும் இருப்பார்...
தனது வாசிப்பு தந்த கொடையால் மன வண்ணங்கள் என்ற கவிதைத்தொகுப்பு நூலையும் , மகாபாரதம் - எளிய கவிதை நடையில் ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார். தற்போது இராமாயண காவியம் எளிய கவிதை நடையில் தயாராகி வருகிறது. மேலும் பல நூல்கள் வெளியிடும் அளவிற்கு தம் கவிதைப் படைப்புகளையும், சிறார் கதைகளையும் கைவசம் வைத்துள்ளார்.
சாரணர் கையேடு என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். அதில் நிறைய சாரணர் இயக்கம் தொடர்பான பாடல்கள் சிலவற்றையும் இயற்றிச் சேர்த்துள்ளார்.
தன் மாணவர்கள் மேல் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக தன்னை மாணவ நண்பன் என்று அழைத்துக்கொள்ளும் இவர் அந்தப் பெயரில்தான் படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.
நூல்களின் மேல்கொண்ட ஆவலால் பள்ளி நூலகர் பொறுப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து மாணவர்களை வாசிப்பின் பக்கம் ஈர்க்க தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
தம் மாணவர்களை வருடந்தோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
நிச்சயம் வேறு எந்த அரசுப் பள்ளிகளிலும் இல்லாத அளவுக்கு ஏராளமான சிறார் மாத இதழ்கள் , காலாண்டு இதழ்களுக்கான சந்தாக்களை செலுத்தி நூல்களை வரவழைத்து மாணவர்களை வாசிக்கச் செய்து வருகின்றார். மேலும் வண்ணமயமான ஓவியங்கள் நிறைந்த சிறார் இலக்கிய நூல்களை, காமிக்ஸ் ரகநூல்களை ஏராளமாக வாங்கி மாணவர்களை வாசிக்க வைத்து வருகிறார்.
இவை அத்தனையுமே - சிறார் நூல்களுக்கான சந்தா உட்பட ,
இவரது முன்னாள் மாணவர்களின் நன்கொடைகள் மூலம் பெறப் பட்டவைதான்.
வகுப்பு நேரங்களுக்கிடையே சிறிது இடைவெளி நேரம் கிடைத்தாலும்கூட மாணவர்கள் நூலகம் தேடி வந்து... சார்.. புத்தகம் படிக்கணும் என்று நிற்கும் அளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார்..
ஸ்வாசிகா இயக்கத்தின் நிறுவனராக:
மேலும் ஸ்வாசிகா என்ற மாணவ-இளைஞர் சமூக சேவை அமைப்பை நிறுவி இருபத்தேழு ஆண்டுகளுக்கும் மேலாக பண்ருட்டி பகுதி மாணவர்களின் உள்ளார்ந்த பல்வகைத் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வண்ணம் , சிறப்பு தினங்களின் போது சுற்று வட்டாரப் பள்ளிகளுக்குச் சென்று பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி பரிசுகள் சான்றிதழ்களை வழங்கி வருவதோடு, தேசிய அறிவியல் தினவிழாவையொட்டி பண்ருட்டி வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ,
வினாடி- வினாப் போட்டி ஆகியவற்றை நடத்தி சுழற்கோப்பைகளை வழங்கி வருகிறார்.
அதேபோல பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்களைக் கண்டறிந்து வயது வேறுபாடின்றி - அந்தச் சாதனையாளர்களுக்கு -குறிப்பாக , மாணவர்களுக்கு - விருதுகள் வழங்கி ஊக்கம் அளித்து வருகிறார்..
எல்லாவற்றுக்கும் மேலாக , வருடந்தோறும் கோடைக்கால விடுமுறையின்போது - மே -1 முதல் மே- 10 வரை அனைத்து பகுதி மாணவர்களும் பயன் பெறும் வண்ணம் 27ஆண்டுகளுக்கும் மேலாக, இலவச ஓவியப் பயிற்சி முகாமை நடத்தி , நிறைவாக கண்காட்சிகளும் நடத்தி வருவதன் மூலம் பெருவாரியான மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாதையாக ஓவியப் பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டிவருகிறார்.
பயணங்கள் செய்வதில் பெரும் ஆர்வம் கொண்ட இவர் , அனேகமாக இந்தியாவின் பல பகுதிகளைச் சுற்றி வந்தவர். தன் மாணவர்களுக்கும் பயண அனுபவங்களைக் கொடுத்துவருபவர். அவர்களையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது பயணிக்க ஊக்கமளிப்பவர்.
இசையில் பெரும் ஈடுபாடு உடைய இவர் தன் வீட்டில் ஆடியோ கேசட் , ஆடியோ CD , வீடியோ CD க்கள் கொண்ட சிறிய அளவிலான ஆடியோ & வீடியோ லைப்ரரியையும் வைத்திருக்கிறார்.
மேலும் கேள்வி ஞானம் கொண்டு சொந்தமாக டியூன் போட்டு பாடல்களை இசையாகப் பாடவும், மெட்டுக்கு பாடல்களை எழுதவும் திறன் கைகூடியவர்.
மேலும் தம் பள்ளி மாணவர்களைக் கொண்டு வில்லுப்பாட்டுக் குழு அமைத்து 10 க்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்வுகள் - 20 நிமிட நிகழ்வுகள் முதல் 1.15 மணிநேர நிகழ்வுகள் வரை நடத்தியுள்ளார்..
தோட்டக்கலையில் , குறிப்பாக மலர்களின் மேல் பெரும் விருப்பம் கொண்ட இவர் தன் வீட்டிலும், மாடித்தோட்டத்தில் வகைவகையான அழகு மலர்ச் செடிகளை வளர்த்து வருகிறார்.
தன் மாணவர்களிடம் அன்பாகவும், நட்பாகவும் பழகும் அதேநேரத்தில் கண்டிப்பாகவும் இருந்து வழிநடத்துவதாலும் ஒவ்வொருவரின் தனித்திறனையும் கண்டு உற்சாகம் அளித்து ஊக்கம் தந்து வருவதாலும், அந்தந்த மாணவர்களின் சுக துக்கங்களிலும் நேரடியாக பங்கெடுத்துவருவதாலும் மாணவர்கள் மனத்தில் இடம்பிடித்தவர்...
22 வருட காலமாக இவருடன் தொடர்பில் இருக்கும் மாணவர்கள் ஏராளம்... அரசுப் பணியில் சேர்வதற்கும் முன்பே தனியார் பள்ளியிலும், தனிப்பயிற்சி நிலையத்திலும் இவரிடம் படித்த மாணவர்களும் இவரிடம் இன்றும் நட்பாக இருப்பதும், இவர் கேட்டுக் கொண்டதற்காக தம்மால் முடிந்த உதவிகளை இவரது பள்ளி மாணவர்களுக்கு செய்து வருவதும் உண்மையில் மகிழ்ச்சிக்கும், பெருமிதத்திற்கும் உரிய செய்தி.
தனது மாணவர்கள் சார்ந்த முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி வரும் இவரை ரோட்டரி உள்ளிட்ட , தமிழகத்தின் பல்வேறு அமைப்புகள் பல்வேறு சிறப்பான விருதுகளை அளித்து கெளரவித்துள்ளன.
ஆனால் தனக்கென வரும் சிறப்புகளை முதன்மையாகக் கருதாது முழுக்க முழுக்க மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் சிறப்புகளை கண்டு பெருமிதம் எய்தவும்
அவர்களின் எதிர்கால முன்னேற்றம் கண்டு மகிழவும் தன் அர்ப்பணிப்பான பணியை தொடர்ந்து வருகிறார்... இந்த
மாணவ நண்பன் முத்துக்குமரன்.