தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 34 வருடங்களாக "துளிர்" சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழை நடத்தி வருகிறது. 'அறிவியல்' மாத இதழ் என்றால் வெறும் இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான கட்டுரைகள் மட்டும் வெளி வருவது என்றில்லாமல் சமூக அறிவியல், சூழலியல் என்று பலதரப்பட்ட பொருள்களில் துளிரில் படைப்புகள் வெளிவருகிறது. துளிர் படிப்பவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது துளிரின் முக்கிய பண
ி. அறிவியலுக்கு புறம்பான விஷயங்கள், பலவிதமான மூடநம்பிக்கைகள் இவற்றை சாடும் பணியையும் துளிர் செய்து வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்கள் மத்தியில் பல்வேறு அறிவியல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. துளிரில் வரும் படைப்புகள் மூலமும் இத்தகைய அறிவியல் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது (உதாரணம்: தேசிய அறிவியல் நாள், ஹிரோஷிமா நாகசாகி தினம், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் வினாடி வினா).
பாடப்புத்தகதன்மையற்ற படைப்புகளை வெளியிடுவதில் துளிர் அதிக கவனம் செலுத்துகிறது. குழந்தைகள் அறிவியலை தங்கள் சூழலோடு ஒன்றிப் பார்த்து புரிந்து கொள்ளவும், அவர்களே அறிவியலைச் செய்து பார்த்துக் கற்றுக் கொள்ளவும் துளிர் ஊன்றுகோலாக இருந்து செயல்படுகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமான படைப்புகளும் (கதை, புதிர்கள்) துளிரில் வெளிவருகிறது.
பெரும்பாலும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் (6,7,8 வகுப்பு மாணவ மாணவியர்) புரிந்து கொள்ளும் இதழாகவே துளிர் தயாரிக்கப் படுகிறது. துளிர் வாசகர்களாக சிறுவர் சிறுமியர் மட்டும் இல்லை. துளிரை அவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியர்கள், அறிவியல் இயக்க ஆர்வலர்கள், முகவர்கள், பெற்றோர்கள் என்று துளிருக்கு ஒரு விரிவடைந்த வாசகர் வட்டம் உள்ளது.