12/09/2023
Euro Tech - The Braille: எந்தக் குத்தூசி பார்வையைப் பறித்ததோ, அதை வைத்தே சாதித்த பிரெய்லியின் கதை!
ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் The Braille (பிரெய்லி முறை).
அன்று
கண் பார்வை இல்லாதவர்கள் என்றாலே பொதுவாக ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள், இல்லை கோயில் வாசலில் அமர்ந்து கையேந்துவார்கள் என்ற பொதுவான எண்ணம் ஒரு காலத்திலிருந்தது. விழித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்குக் கல்வி கற்றுக்கொள்ள எந்த வழியும் அப்போது இருக்கவில்லை. வாய் பேச முடியவில்லை என்றாலோ, செவிப்புலன் இல்லை என்றாலோ கூட அவர்கள் சைகை மொழி மூலமாக ஏதாவது ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் கண் பார்வை இல்லை என்றால் கல்வி என்பது கனவில் கூட சாத்தியமில்லாத ஒன்றாகிப் போனது. அப்போது எல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே பார்வைக் குறைபாடு எனும் பெருந்தடையையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்துக் காட்டினார்கள். அவர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்த ஆய்வோ, ஆராய்ச்சியோ எதுவுமே அக்காலத்தில் இருக்கவில்லை. இப்படி பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் எதிர்காலமே விடை தெரியா கேள்விக்குறியாக இருந்த சமயத்தில், அவர்களின் இருண்ட உலகில் ஒளிக்கீற்றாக வந்தார் லூயிஸ் பிரெய்லி.
House of Louis BRAILLE | லூயிஸ் பிரெய்லி பிறந்த வீடு
ஐரோப்பாவின் பிரெஞ்சு தேசத்தில் 1809-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி பிறந்த லூயிஸ் பிரெய்லியின் தந்தையார் சைமன் ரெனே, குதிரைகளுக்கான லாடங்களையும், அவற்றுக்குத் தேவையான தோலால் ஆன பிற பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தார். அவர் வைத்திருந்த துளையிடுவதற்கும், செதுக்குவதற்குமான கருவிகள்தான் குழந்தை பிரெய்லிக்கு விளையாட்டுப் பொருள்களாகவும் மாறின. தினமும் தந்தையின் பட்டறைக்குச் செல்லும் பிரெய்லி, அவற்றை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார். ஒருநாள் விதி அவரது வாழ்வில் மிக மூர்க்கத்தனமாக விளையாடியது. விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை பிரெய்லியின் கண்களைக் கூரான குத்தூசி ஒன்று எதிர்பாராதவிதமாகக் குத்திவிட, ஒரு கண்ணை இழந்தார் பிரெய்லி. அப்போது அவருடைய வயது மூன்று.
பாதிக்கப்பட்ட கண்ணைக் குணமாக்க முயற்சிகள் நடந்தன. ஆனாலும் அன்றைய காலகட்டத்தில் மருத்துவ வசதிகள் வளர்ச்சியடையாத காரணத்தினால் சிகிச்சை பலனின்றி அவருடைய மற்றொரு கண்ணிலும் பார்வை பறிபோனது. குழந்தை பிரெய்லி தன் பார்வை முழுவதையும் இழந்த போது அவரது வயது ஐந்து.
தங்கள் குழந்தை பார்வையை இழந்துவிட்டதே எனத் துவண்டு போகாமல், பிரெய்லியின் தந்தை அவரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள 'Royal Institute for Blind Youth' என்ற இளம் பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தார்கள். அப்போது உலகில் பார்வை இல்லாதவர்களுக்காக இருந்த ஒரே பாடசாலை அது மட்டுமே. அந்தச் சம்பவம் பிரெய்லியின் வாழ்வில் மட்டுமல்ல, பின்னாளில் உலகில் உள்ள அத்தனை பார்வை மாற்றுத் திறனாளிகளின் வாழ்விலும் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
தொடக்கக் காலத்தில் பிரெய்லி முறை
அந்தக் கல்வி நிறுவனத்தை உருவாக்கிய வேலென்டின் ஹாவி என்பவர் அவருக்குத் தெரிந்த விதத்தில் கண் பார்வை இழந்தவர்கள் படிப்பதற்காக ஒரு முறையை ஏற்கெனவே உருவாக்கியிருந்தார். அதன்படி லத்தீன் எழுத்துகளைக் கடினமான தாளில் புடைப்புருக்களாக அமைத்து, மறுபக்கமாக அவற்றைத் தொடுவதன் மூலம் எழுத்துகளைப் புரிந்துகொண்டு படிக்குமாறு சில நூல்களைத் தயார் செய்திருந்தார். மொழிகள், இலக்கணம், இலக்கியம், இசை, கணிதம், அறிவியல் என அனைத்தும் இந்த முறையிலேயே கற்பிக்கப்பட்டன. ஆயினும் இம்முறையானது பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது. பல சமயங்களில் தெளிவற்ற எழுத்து, நாள்பட நாள்படத் தாள் கிழிந்து போவது, எழுத்துகள் அழிந்து போவது போன்ற பல பிரச்னைகளும் இதிலிருந்தன.
'என்னதான் பார்வை இழந்து உலகம் இருண்டாலும், எனக்குக் கல்வி கற்றுக்கொள்ளவும், பிடித்த இசையைப் பயிலவும் ஓர் இடம் கிடைத்துவிட்டது. ஆக, இது போதும் எனக்கு' என்று லூயிஸ் பிரெய்லி சுயநலத்தோடு ஆறுதல் அடைந்து விடவில்லை. தான் கற்ற கல்விமுறையிலிருந்த குறைபாடுகள் லூயிஸ் பிரெய்லியை உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்கான மாற்றுவழிகளைக் கண்டுபிடிப்பதிலேயே அவர் சிந்தனை நித்தம் மையல் கொண்டு கிடந்தது. கண்பார்வை இழந்தவர்கள் பிறரின் பரிதாபமின்றி, அடுத்தவரின் உதவியை நாடாமல் வாழ முற்பட வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்காக இருந்தது. பிரான்ஸில் மட்டுமல்ல, உலகம் முழுதும் இருக்கும் விழிப்புலனற்றோர் கல்வி கற்க, பொதுவான ஒரு மொழி உருவாக்கப்பட்ட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பிரெய்லி.
அந்த நேரத்தில்தான் ஒருநாள் பிரெய்லி கல்வி கற்ற கல்லூரிக்கு சார்லஸ் பார்பியர் என்ற ராணுவத் தளபதி வந்தார். நெப்போலியன் போனபார்ட்டின் பிரெஞ்சு ராணுவத் தளபதியான அவர் போர்க்களத்தில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக 12 புள்ளிகளைக் கொண்ட நைட் ரைட்டிங் என்ற முறையை அப்போது உருவாக்கி இருந்தார். சார்லஸ் பார்பியர் அந்த முறையை விளக்கிச் சொல்லி, பின்னர் பிரெய்லி பயின்ற பள்ளியில் கற்பித்தலுக்காக அம்முறை பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் அதிலும் கூட பல குறைபாடுகள் இருந்தன. எனவே நைட் ரைட்டிங் முறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாக மாற்றீடு ஒன்றைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று பிரெய்லி முடிவு செய்தபோது அவருக்கு வயது 15.
பிரெய்லி முறை
இரவும் பகலும் பாடுபட்டு ஆராய்ச்சியில் இறங்கிய பிரெய்லி, புள்ளிகளைப் பல விதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, ஒரு புதிய குறியீட்டு மொழியை உருவாக்கினார். வெறும் ஆறே புள்ளிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த மொழியில் மொழி, இலக்கணம், கணிதம், அறிவியல் கோட்பாடு, வரலாறு, புவியியல், இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம் என்பதையும் அவரது 15-வது வயதிலேயே நிரூபித்துக் காட்டினார்.
எந்தக் குத்தூசி தன் பார்வையைப் பறித்ததோ, அதே குத்தூசியைக் கொண்டே ஆறு புள்ளிகளின் அட்சரத்தை உருவாக்கினார் பிரெய்லி. அந்த ஆறு புள்ளிகளும் கோடுகளுமே பின்னாளில் அவரைப் போன்ற பல கோடி பார்வைச் சவால் உள்ளவர்களின் பார்க்கும் கண்களாக மாறின.
ஆனாலும் லூயிஸ் பிரெய்லியின் இந்த ஒற்றை விரல் புரட்சியை (எப்போதும் போலவே) அன்றைய உலகமும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ளவில்லை. லூயிஸ் பிரெய்லியின் கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் அதற்காகவெல்லாம் அவர் தளர்ந்து போகாமல் மேலும் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். பார்வைக் குறைபாடு என்பது மட்டுமே ஒருவனின் வளர்ச்சிக்கான முற்றுப்புள்ளியாக இருந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த பிரெய்லியை துர்ப்பாக்கிய வசமாக எலும்புருக்கி மற்றும் ஆஸ்துமா நோய்கள் பீடிக்க 1852ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, தனது 43-வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரெய்லியின் மறைவுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து அவரின் கண்டுபிடிப்புகள் பிரெஞ்ச் அரசால் அங்கீகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர் பயின்ற கல்லூரியிலேயே பிரெய்லியின் கண்டுபிடிப்பு முறைகளை முதன் முதலாகப் பின்பற்றத் தொடங்கினார்கள். அந்த எழுத்துரு முறைக்கு 'பிரெய்லி' என்ற அவரது பெயரையே வைத்துக் கௌரவித்தது பிரெஞ்சு அரசு. மெல்ல மெல்ல பிரான்ஸ் முழுவதும் பரவத்தொடங்கிய பிரெய்லி முறை, அப்படியே ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா என உலகம் முழுதும் விரிவடைந்தது.
Braille's memorial in the Panthéon
இன்று
1932ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் பிரெய்லி ஆங்கில முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 133 மொழிகளுக்கு மேல் பிரெய்லி குறியீடுகள் உள்ளன. கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், அரசியல், சட்டம், மருத்துவம், கைத்தொழில் என அத்தனை பாடங்களும் பிரெய்லி மூலம் கற்பிக்கப்பட்டு, வருடம் தோறும் பார்வைப் புலன் அற்ற லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறது. வக்கீல், கலெக்டர், டாக்டர், பேராசிரியர் என எல்லாத் துறைகளிலும் பார்வையற்றோரும் சாதிக்கலாம் என்று இன்று நிரூபித்து விட்டது பிரெய்லி.
பிரெய்லி கம்ப்யூட்டர்ஸ், ஈமெயில் வசதிக்காக Robo Braillie.Org, கணக்கியல் மற்றும் அறிவியல் தொடர்பான குறியீட்டு முறைகளைக் கொண்ட Namak Braillie, ஹார்போ அடாப்டிவ் டெக்னாலஜியில் இருந்து பிரெய்லி பேனா, Refreshabraille இலிருந்து APH, ஹ்யூமன்வேரில் இருந்து Brilliant, Smart Beetle, ALVA braille displays, Vario 340 மடிக்கணினிகள், ஃப்ரீடம் சயின்டிஃபிக்கில் இருந்து Focus braille displays என இன்று மாறிவரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொண்டு பிரெய்லியும் தன்னை வெவ்வேறு வடிவங்களில் புதுப்பித்துக்கொண்டே செல்கிறது.
தொழில்நுட்பம் மேம்பட்டு, மலிவு விலையில் அதிகமான மக்களின் கைகளில் பிரெய்லி சென்று சேரும் வகையில் பல நிறுவனங்கள் சமீப ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் போன்ற packed notetakers-களை தயாரிக்கத் தொடங்கியுள்ளன. அவற்றில் பெர்கின்ஸ் பாணி விசைப்பலகை மற்றும் விசைகள் (perkins style keyboard and the keys) பொருத்தி இருப்பதால் அழுத்துவதற்கு எளிதாக இருக்கின்றன. இதன் காரணமாக அதைப் பயன்படுத்துவோர் மிக இலகுவாக பிரெய்லியில் எழுத மற்றும் படிக்க முடியும். அதே போல அதில் கோப்புகள், கடிகாரங்கள், காலண்டர்கள் மற்றும் pdf அல்லது excel போன்றவற்றையும் நிர்வகிக்கலாம். Braille Plus18, Orbit reader, EasyLink 12 Touch, ESYS Displays போன்றவை சில பிரபலமான பிரெய்லி ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களின் வகைகளாகும்.
பிரெய்லி மீ என்ற இன்னோவிஷன் தொழில்நுட்பத்தின் புதிய ஸ்மார்ட் பிரெய்ல் டிஸ்ப்ளேக்கள் மூலம் பெர்கின்ஸ் ஸ்டைல் கீபோர்டுடன் கூடிய, 6-புள்ளி, 20-செல் டிஸ்ப்ளேக்களைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க பிரெய்ல் டிஸ்ப்ளேக்கள் (refreshable braille display) iOS மற்றும் Android சாதனங்களுடன் இணைக்கப்படலாம். அத்தோடு மைக்ரோ USB, SD கார்டு ஸ்லாட் மற்றும் DC ஜாக் ஆகியவற்றையும் கூட அதில் இணைக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போலச் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னும் மேம்பட்ட கையடக்கமான பிரெய்லி டெர்மினல்களைக் கொண்ட Brailliant Braille Displays, பிரெய்லியின் பயன்பாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றுவிட்டன.
Brailliant Braille Displays
சமீபத்தில் சில பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘டக்டைல்’ எனும் தொட்டு உணரக்கூடிய சாதனம் அச்சிடப்பட்ட எழுத்துகளை பிரெய்லி எழுத்துக்களாக உடனடியாக மொழிபெயர்க்கிறது. அச்சடிக்கப்பட்ட எழுத்துகள் கொண்ட புத்தகத்தின் ஒரு பகுதியை அந்தக் கருவியில் பொருத்தினால் அதிலுள்ள கேமரா, குறிப்பிட்ட பகுதியில் உள்ள எழுத்துகளை மைக்ரோ கண்ட்ரோலருக்குத் தகவலாக அனுப்பும். மின்காந்தம் செயல்படுத்தும் பொறிமுறையின் மூலம், சாதனத்தின் மேற்புறத்தில் உள்ள பிரெய்லி எழுத்துகள் அதற்கேற்றாற்போல மேலும் கீழுமாக அசையும். இதன் மூலம் அச்சடிக்கப்பட்ட எழுத்துகளின் தகவல்கள் பிரெய்லி எழுத்து வாசகமாக மாற்றப்படும். இந்த டிவைஸ் மூலம் விழித்திறன் அற்றவர்கள் கூட எதை வேண்டுமானாலும் சரளமாகப் படிக்கலாம் என்ற நிலை உருவாகி, கல்வி என்பது எல்லோருக்குமானது என்பதை பிரெய்லி மொழி இன்று நிரூபித்துவிட்டது.
ஒரு காலத்தில் பார்வை உள்ளவர்களுக்கு என்று மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு இருந்த கல்வி உட்படப் பல விஷயங்கள் இன்று விழிப்புலன் அற்றோருக்கும் சாத்தியமாகி உள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பார்வையற்றோரின் கல்வியறிவு, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் தொடர்கிறது பிரெய்லி எனும் மந்திர மொழி!
- Euro Tech Loading...
from Latest news https://ift.tt/0F1cdAo
ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத.....