25/10/2024
ராமச்சந்திர குஹா கட்டுரையிலிருந்து...
¶
குமார் கந்தர்வாவின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதோடு இந்தப் பாடலுடன் எனக்கு ‘உணர்வுபூர்வ’மான நெருக்கம் அதிகம். டேராடூனில் வன ஆராய்ச்சிக் கழக வளாகத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். அந்த வளாகம் முடியும் வட கோடியில்தான் என் பெற்றோர் வசித்தார்கள். அந்த இடம் ஒரு மலைக்குன்றின் உச்சி, அங்கிருந்து பார்த்தால் ‘டன்ஸ்’ (அல்லது டோன்ஸ்) ஆறு நன்றாகத் தெரியும். உள்ளூர் மக்கள் அதை ‘டான்ஸ்’ என்று அழைப்பார்கள். மேற்கு உத்தராகண்டில் சில ஆறுகளுக்கு இந்தப் பெயர். (யமுனைக்கு துணை ஆறாக ஓடும் இதே பெயருள்ள பெரிய ‘டான்ஸ்’ ஆற்றுடன் இதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது). எங்கள் பகுதியில் ஓடும் சிற்றாரில், தண்ணீர் எப்போதாவதுதான் பெருவெள்ளமாகப் பாயும். மற்ற காலங்களில் நீர்ப்பெருக்கு இருக்காது. ஆனால், அதே பெயருள்ள துணை ஆறு, ஆண்டு முழுக்க நீர் நிரம்பி ஓடும்.
என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஆறு, மேற்கில் உள்ள ஆசான் ஆறுடன் போய்க் கலக்கும். அங்கிருந்து அவை இரண்டும் கலந்த ஆறு, மேலும் சில கிலோ மீட்டர்கள் பாய்ந்த பிறகு யமுனையில் சேரும். எனவே, ‘ஜமுனா கினாரா மோரா காவோன்’ என்பது என்னுடைய ஊருக்கும் பொருந்தும் என்று அடக்கத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதனால் அந்தப் பாடலுடன் உணர்வுபூர்வமான நெருக்கம். பொழுதுபோக்க குடும்பத்துடன் அந்த ஆற்றங்கரைக்குச் செல்வோம். அங்கே சீக்கியர்களின் ‘பவோந்தா சாஹிப்’ என்ற குருத்வாரா இருக்கிறது. அங்கிருந்து பார்த்தால் யமுனை மலையிலிருந்து சமவெளியில் பொங்கிப் பாயும் அழகை ரசிக்கலாம்.
மனதுக்குச் சுமையான பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியிருந்தால் அதற்கும் முன்னால் குமார் கந்தர்வா பாடல்களைக் கேட்டு மனதை அமைதிப்படுத்திக்கொள்வது வழக்கம். அவருடைய மகன் பாடிய பாடல்களையும் எப்போதாவது கேட்பேன். முகுல் சிவபுத்திரா பாடிய ‘ஜமுனா கினாரே’ வேறு விதமாக இருக்கும், அதுவும் உணர்ச்சிவசப்பட வைக்கும். அது நெடியதாகவும் நிதானமானதாகவும் ஆழ்நிலையில் தியானம் செய்ய வைப்பதாகவும் இருக்கும்.
முகுலின் பாடல்களும் யூட்யூபில் கிடைக்கின்றன. அவை அவருடைய வித்தியாசமான, ஆழங்காண முடியாத, அவ்வளவு எளிதில் யாருக்கும் கற்றுத்தந்துவிட முடியாத வகையில் இருக்கும். அவர் பாடிய ‘ஜெய்ஜெயவந்தி’, ‘கேதார்’ – ‘கமாஸ்’ ராகப் பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
மேலும் வாசிக்க சுட்டி கீழே!