28/09/2021
சூப்பரை் முஸ்லிம் வழிகேட்டு கும்பலை பற்றிய ACTJ வின் பத்வா !
FATWA
1442.02.20
2020.10.08
Ash Sheikh U.L.S Hameed Hami,
Secretary,
ACJU Kalmunai Branch,
462/A, Mosque Road,
Kalmunai.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹூ
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
உங்களது கடிதத்தில் தெளிவு கேட்டிருக்கும் விடயங்கள் மறுமைநாள் நெருங்கும் போது நடைபெறும் நிகழ்வுகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.
பொதுவாக அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் மறுமைநாளின் அடையாளங்களில், சில அடையாளங்கள் மிகத்தெளிவாகவும் மற்றும் சில அடையாளங்கள் சுருக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. அவை எவ்வாறு கூறப்பட்டுள்ளனவோ அவற்றை அவ்வாறே நம்பி, ஏற்றுக் கொள்வது போதுமானதாகும். நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டிருந்த சஹாபாக்கள், அவர்களைத் துயர்ந்தவர்கள் மற்றும் இமாம்கள் போன்றோர் அவற்றை அவ்வாறே நம்பி செயலாற்றியுள்ளதுடன், மற்றவர்களுக்கு போதனை செய்தும் வந்துள்ளனர். 1400 வருடங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அடிப்படையை வெறுமனே பகுத்தறிவுக்கு உட்படுத்தி இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு அப்பால் ஒரு தனிநபரின் சிந்தனைக்கு தோன்றிய விடயங்களை மார்க்கமாக ஆக்கி, பிரசாரத்தில் ஈடுபட்டு இஸ்லாத்தில் சந்தேகங்களை ஏற்படுத்துவது பெரும்பாவமாகும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள கேள்விகளை நோக்கும் போது, ஷைக் இம்ரான் ஹுஸைன் (வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர்) என்பவரது சிந்தனைப் போக்கைத் தழுவியவர்களது வினாக்களாகவே தென்படுகின்றன. இவரது கருத்துக்களை நோக்கும் போது அவை, பல தெளிவான குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமானவையாக இருப்பதுடன், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கும் மாற்றமாக உள்ளதையும் காணலாம்.
அவற்றிற் சில பின்வருமாறு :
தஜ்ஜாலுடைய வருகை சம்பந்தமாக ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சரியான கருத்துக்களுக்கு மாற்றமாக, தஜ்ஜால் வெளியாகி உள்ளான் என்ற பொய்யான வீண் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றமை.
மறுமைநாளின் அடையாளமாக வெளிப்படும் புகை தொடர்பில் ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ், உலக சுற்றாடல் மாசடைவதையே குறிக்கின்றது என்று தன்னிச்சையாக பிழையான விளக்கும் கூறுகின்றமை.
முஸ்லிம் உம்மத்தால் 1000 வருடங்களுக்கும் மேலாக மதித்து வருகின்ற அல்குர்ஆனுக்கு அடுத்து வைக்கப்படுகின்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸஹீஹுல் புகாரி போன்ற நம்பத் தகுந்த கிரந்தங்களில் வந்துள்ள ஸஹீஹான பல ஹதீஸ்கள், புனையப்பட்டவை எனக்கூறி அவற்றின் நம்பகத்தன்மையை சிதைக்கின்றமை.
நடைமுறையிலுள்ள அல்குர்ஆன் பரிபூரணமற்றது, அதில் கூடுதல் குறைவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறி அல்குர்ஆனை அவமதித்தல், நபித்தோழர்களில் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லா நபித்தோழர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள் என நம்புதல் போன்ற இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான சிந்தனைகளைக் கொண்ட “இஸ்னா அஷ்ரிய்யாக்கள்” சரியான கொள்கையில் உள்ளனர் என்று நியாயப்படுத்துகின்றமை.
மறுமை நாளின் 10 பெரும் அடையாளங்களில் ஒன்றாகிய தாப்பதுல் அர்ழ் என்ற (மனிதர்களுடன் பேசும்) மிருகம் தோன்றுவது பற்றிய ஸஹீஹான ஹதீஸுக்கு, இஸ்ரேலின் உருவாக்கத்தைக் குறிக்கின்றது என்று மிகப்பிழையாக வலிந்துரைக்கின்றமை.
மேற்கூறப்பட்ட இக்கருத்துக்களையே “சுபர் முஸ்லிம்” என்ற பிரிவினரும் பிரசாரம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அல்லாஹ், சிந்திக்கும் திறனை மனிதனுக்கு வழங்கியுள்ளான். அத்திறனை பயன்படுத்தத் தேவையான இடத்தில் தேவையான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆர்வமூட்டியுமுள்ளான். மறைவான விடயங்களில் ஆய்வை விட நம்பிக்கையே அடிப்படையாகக் கொண்டதாகும். அவற்றில் சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தாது அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் கூறப்பட்டதை அவ்வாறே நம்புவது அவசியமாகும்.
தமக்கு தெளிவில்லாத விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒழுக்க விழுமியங்களை பின்வரும் அல் குர்ஆன் வசனமும் ஹதீஸும் தெளிவுபடுத்துகின்றது.
عن مسروق عن عبد الله بن مسعود - رضي الله عنه - ، قال : يا أيها الناس ! من علم شيئا فليقل به ومن لم يعلم فليقل : الله أعلم ، فإن من العلم أن تقول لما لا تعلم : الله أعلم : قال الله تعالى لنبيه قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين. (متفق عليه)
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் சென்றோம். அவர்கள், மக்களே! ஒரு விடயத்தை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும்! அறியாதவர், “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று கூறட்டும், ஏனெனில், ஒருவர் தாம் அறியாத ஒரு விடயத்தை “அல்லாஹ்வே நன்கறிந்தவன்” (எனக்குத் தெரியாது) என்று சொல்வதும் அறிவில் நின்றும் உள்ளதாகும். அல்லாஹூ தஆலா நபியவர்களுக்குக் கட்டளையிடுகின்றான். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (மனிதர்களே! இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அன்றி, (நீங்கள் சுமக்கக்கூடாத யாதொரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை. (திருக்குர்ஆன் 38:86) (நூல் : புகாரி, முஸ்லிம்)
ஷைக் இம்ரான் ஹூஸைன் என்பவர் அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் வந்துள்ள இவ்வாறான பல விடயங்களுக்கு தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி சொந்த விளக்கம் கொடுத்ததனாலேயே இவ்வாறான தவறான வழியில் தான் சென்றது மாத்திரமல்லாது மற்றவர்களும் வழிகெட்டுப் போவதற்குக் காரணமாக இருக்கின்றார்.
இவ்வாறான விடயங்களை தகுதியான ஆலிம்களிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். மாறாக இணையதளங்களில் வரும் விடயங்களைப் பார்த்து தாமாக மார்க்க விடயங்களில் ஒரு முடிவை எடுத்துச் செயற்படுவது, தமக்கும் முழு சமூகத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் பெரும் கேடு விளைவிக்கக் காரணமாக அமையும்.
பிழையானதும் தீவிரவாத, பயங்கரவாதக் கருத்துக்களையும் மிதவாதிகளது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்த இணையங்கள் மிகப் பெரும் கரிசனை செய்கின்றன. ‘பயங்கரவாதக் குழுக்களுக்கு இணையம் மிகப் பெரும் வசதியானதொரு தொழில் நுட்பமாக அமைந்து விடுகிறது’. ‘உலகில் எங்கோ இருந்து இயங்கும் ஒரு குழு அல்லது எமக்கு அறிமுகமற்ற ஒரு நபரிடமிருந்து பெறும் அறிவை, நாம் முழுமையாக ஏற்பது ஆரோக்கியமானதல்ல’.
ஆகவே, நீங்கள் கேட்டிருக்கும் பல விடயங்கள் வஹிய்யுடன் சம்பந்தப்பட்டவையாகவும், எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விடயங்களாகவும் இருப்பதனால், அவை தொடர்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டவைகளை அவ்வாறே நம்புவதே மிக அவசியமானதாகும்.
மறுமைநாளின் அடையாளங்கள் மற்றும் அது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசும் ஷைக் இம்ரான் ஹூசைன் என்பவருடைய கொள்கையானது, அல்-குர்ஆன், ஹதீஸின் மற்றும் பெரும்பான்மையான ஆலிம்களின் தெளிவான வழிகாட்டல்களுக்கு முரணாக இருப்பதால், அவ்வாறான விடயங்களை விட்டும் சமூகம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவது அவசியமாகும்.
ஆகவே, இவ்வாறான விடயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதையும், அவற்றை பிரசாரம் செய்வதையும் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும், இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், இதிலிருந்து முற்றாக விடுபட்டு தௌபா செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சமூகப் பொறுப்புதாரிகள் இவ்வாறான கொள்கையில் உள்ளவர்களை நேரான வழியின் பக்கம் நளினமாகவும், அன்பாகவும் நெறிப்படுத்த வேண்டும்.
எனவே, இதுபோன்ற மார்க்க விடயங்களில் இந்நாட்டு ஆலிம்களின் தெளிவுகளையும், வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுகின்றோம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.