Kogularam- duke

  • Home
  • Kogularam- duke

Kogularam- duke Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kogularam- duke, Media/News Company, .

11/12/2022

ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது.

கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது.

சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது.

விலை அதிகரிப்புகளும் வரி அதிகரிப்புகளுக்கும் குறைவே இல்லை. மக்கள் தலைநிமிர்ந்து வாழமுடியாத அளவுக்கு விலையேற்றம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மின்சாரக்கட்டணமும் மீண்டும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏககாலத்தில் மின்வெட்டும் அமுல்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அகதிகமாகும்.

இலங்கை ரூபாயில் 5,000 தாளொன்றை வெளியில் எடுத்தால் என்ன? நடந்தது என்று யூகிக்கக்கூட முடியாதுள்ளது. அந்தளவுக்கு விலையேற்றம் தலைவிரித்தாடுகின்றது. ஏனைய நாடுகளின் தாள்களை கண்களில் காண்பதே அரிதாகும்.

இந்நிலையில்தான், 10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும் என்றும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறொரு நாட்டின் நாணயமாக மாற்ற முடியும் என்றும் அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையின் வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தை இந்திய வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளான இந்திய நாஸ்ட்ரோ கணக்குகளை திறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் வங்கிச் சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த செயற்பாடானது ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயின் பெறுமதியை வலுவாக்கவும், ஐக்கிய அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதனை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதியழித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கை இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை வழங்கும் எனவும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைய நாட்டவர்களுக்கிடையிலான வங்கி பரிவர்த்தனைகள் ,சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ரூபாயை இலங்கையின் நாணயமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தோன்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தலைவர்கள் தற்போதைய நெருக்கடியைப் பயன்படுத்தி நாட்டை இந்தியாவிடம் பணயக்கைதிகளாக இழுத்துச் செல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அத்துடன் நாட்டின் தேசிய வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு விற்று இலங்கையை இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாற்றும் மனநிலையில் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு குழு தொடர்ந்தும் நாட்டில் ஆட்சியமைப்பது ஆபத்தானது எனவும், உடனடியாக சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருளை விநியோகிக்க வந்தாலும் அவர்களின் சொந்த செலவில் இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வர முடியாது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எதிர்காலத்தில் சுமார் பத்து மணித்தியால மின்வெட்டு ஏற்பட்டால் அரசாங்கத்தினால் தனியாக மின்சாரம் வழங்க முடியாது எனவும் அதனை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம் எனவும் விமல் வீரவன்ச கூறினார்.

அரசாங்கம் கடந்த 20 மாதங்களில் 125,747 கோடி ரூபாக்கு மேல் அச்சடித்துள்ளது வரையறையின்றி பணம் அச்சிடப்பட்டுள்ளமையால் பாரிய நிதி நெருக்கடிக்குள் இலங்கையை தள்ளியுள்ளது

சர்வதேச நாணய நிதியம் போன்ற அங்கிகரிக்கப்பட்ட நிறுவனம் ஊடாக உதவிகளைப் பெறாமல், அரச சொத்துக்களை விற்பது, தமது நண்பர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கி திறைசேறியை வெறுமையாக்குதல் போன்ற காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மீண்டும் பாதாளத்திலேயே விழும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கு அமைய, 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கை மத்திய வங்கியிடமிருற்த அரசாங்க திறைசேறியின் கணக்கு மற்றம் திறைசேறி பிணைமுறியின் மதிப்பு 74.74 பில்லியன் ரூபாயாகும். அது 2021 செப்டம்பர் மாதம் நேற்று (30) வரை 1,3332.21 பில்லியன்களாகியுள்ளன.20 மாதங்களுக்கு அச்சிடப்பட்டுள்ள நிதி 1,257.47 பில்லியனாகும்.

அஜித் நிவ்ராட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், இதுவரை 4,784 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் பணமானது மத்தள விமான நிலையத்தை அமைப்பதற்கு செலவான நிதிக்கு அண்மித்த தொகை என்றார்.

2019ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், தனவந்த வர்த்தகர்களுக்கு வரி நிவாரணம் வழங்கப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்தின் வருமானம் பாரியளவு வீழ்ச்சியடைந்து தற்போதைய நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

தனவந்தர்களுக்கு வரி நிவாரணத்தை வழங்கியதால் ஏற்பட்ட வருமான இழப்பை அடைத்துக்கொள்ள நாட்டின் டொலர் இருப்பை கடன் செலுத்த பயன்படுத்தியுள்ளனர். டொலர் இருப்பு இழக்கப்பட்டதால் எரிபொருள் இறக்குமதிக்காக டொலர் செலுத்துவதை கட்டுப்படுத்தியுள்ளது.

டொலர் இழப்புக்கு பரிகாரமாக உரம், மருந்து, உணவுப் பொருள்கள், இலத்திரணியல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளின் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கத்துக்கு நேர்ந்துள்ளது. அதன் பலனாக இன்று நாடு முழுவதும் வரிசைகளை காணக் கூடியதாகவுள்ளது என்றார்.

பொருளாதார நெருக்கடியால் நடந்த போராட்டங்கள் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியபின் பதவியேற்ற ரணில் தற்போதைய சிக்கல்களுக்கு என்ன தீர்வைத் தரப்போகிறார் என்று இலங்கை மட்டுமல்லாது உலகமே எதிர்நோக்கியுள்ள சூழலில் இவ்வாறு கூறியுள்ளார்.

''விருப்பமில்லாமலேனும் இந்த நிலையில் பணத்தை அச்சிட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் இந்த மாதத்திற்கான சம்பளத்தை செலுத்துவதற்காகவும், அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு செலவிட வேண்டியுள்ளமைக்காகவும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது,'' என்று கூறியுள்ளார்.

அப்படியானால், ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்பில் கூறியுள்ளத்தைப் போல அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டின் நாணயத்தை (கரன்சி) அச்சிடுவதன் மூலம் ஏன் தங்கள் பிரச்னைகளையும், மக்களின் பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ளக் கூடாது?



''பணம் அச்சிடுகின்றமையினால், ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்," என்று ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதே அந்த பதில்.

அதாவது அளவுக்கும் அதிகமாக ஒரு நாடு தனது பணத்தை அச்சிடுகிறது என்றால் அந்த பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடையும். வீழ்ச்சி என்றால் நாணய மதிப்பில் உண்டாகும் வழக்கமான சரிவல்ல. இந்த சரிவு ஏன் உண்டாகிறது என்று பாப்போம்.

ஒரு பொருளை வாங்க வேண்டும் அல்லது ஒரு சேவையைப் பெற வேண்டும் என்றால் அந்தப் பொருளையோ சேவையையோ பெறுபவர் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டும். அதுதான் அதன் 'விலை' என்று கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருளின் உள்ளடக்க விலை (தயாரிப்புச் செலவு), சந்தையில் அதற்கு இருக்கும் தட்டுப்பாடு, வேறு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அதே பொருளின் விலை, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறன், அரசு விதிக்கும் வரி, சந்தைப்படுத்தலுக்கு உள்ளாகும் செலவு உள்ளிட்ட பல காரணிகள் அந்த விலையை நிர்ணயிக்கின்றன.

ஒரு வேளை பணம் அச்சடிக்கப்பட்டு எல்லோருக்கும் வழக்கப்படுகிறது என்றால், சந்தையில் இருக்கும் பொருட்கள் அல்லது சேவைகள் ஆகியவற்றைப் பெற எல்லோரிடத்திலும் பணம் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் கொடுக்கும் அளவுக்கு அந்தப் பொருள் இருக்காது. அதாவது சந்தையில் அதன் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

இப்போது அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்க விரும்புவோரில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அது கிடைக்கும். எல்லோரிடத்திலும் பணம் இருக்கிறது என்பதால் எல்லோருமே இப்போது அதிகமான பணத்தைக் கொடுக்க முன்வருவார்கள். ஒருவரைவிட ஒருவர் அதிகம் பண கொடுத்து வாங்க முயல்கிறார், அவரைவிட இன்னொருவர் அதிகம் பணம் தர முயல்கிறார், மற்றோருவர் இன்னும் கூடுதலாகப் பணம் கொடுக்க முயல்கிறார் என்றால் அப்பொருளின் விலை அதிகரித்துக்கொண்டே போகும்.

இறுதியாக யாரிடத்திலும் மேலதிக பணம் இல்லை எனும் சூழல் வரும்போது அப்பொருளின் விலை பன்மடங்கு அதிகரித்திருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் வழக்கமான பணப்புழக்கம் இருந்த நேரத்தில், ஒரு கிலோ அரசியை 50 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

பணம் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்தபின் அதன் விலை 100 ரூபாயாகவோ, 500 ரூபாயாவோ, ஏன் 5,000 ரூபாயாகவோ கூட உயர்ந்திருக்கலாம். முன்னர் நீங்கள் ஒரு விலை கொடுத்து எவ்வளவு அரிசி வாங்கினீர்களோ, இப்போது அதே அளவு அரிசியை வாங்க கூடுதலாக விலை கொடுக்க வேண்டி உள்ளது. இதை வேறு சொற்களில் சொல்வதானால், பணத்துக்கு மதிப்பு குறைந்துவிட்டதால் கூடுதலான பணத்தை அதே ஒரு கிலோ அரிசிக்குச் செலவிடுகிறீர்கள்.

இந்த விலை உயர்வுதான் பொருளாதாரத்தில் 'பணவீக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மத்திய வங்கியிடம் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல ) இருக்கும் அந்நியச் செலாவணி (foreign exchange), தங்கம், வெள்ளி போன்றவற்றின் கையிருப்பு (bullions), பற்று வரவு சமநிலை (ஒரு நாடு வெளிநாடுகளுக்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் வெளிநாடுகள் அதற்கு செலுத்தவேண்டிய பணத்துக்கும் இடையிலான வேறுபாடு - இதை ஆங்கிலத்தில் 'Balance of Payments' என்கிறார்கள்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வளவு பணத்தை அச்சிடுவது என்பதை ஒவ்வொரு நாடும் முடிவு செய்யும்.

ஆனால், புதிய பணவியல் கோட்பாட்டில் மேற்கண்ட காரணிகள் பரிசீலிக்கப்படுவதில்லை. அரசு தாம் விரும்பும் அளவு பணத்தை அச்சிட்டுக்கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்தக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த கோட்பாட்டை பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் ஏற்பதில்லை.

இந்திய ரூபாய் இலங்கையில் புழக்கத்தில் விடப்படுமாயின், இந்திய நிறுவனங்களுக்கு அது வாய்ப்பாக அமைந்துவிடும். எனினும், இலங்கையின் பொருட்களுக்கும், இலங்கையின் ரூபாய்க்கும் எவ்விதமான மதிப்பும் மரியாதையும் கிடைக்காது.

ஆக மொத்தத்தில் இலங்கையின் காசு செல்லாக்காசாகி விடும் என்பது மட்டுமே உண்மையாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

10/12/2022

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.'' இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது.

இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு செய்தி ஊடகங்களில் அது சாதனைப் படைத்து வருகிறது.

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரவின் மிலேச்சத்தனமான படுகொலை சம்பவம், பாகிஸ்தானின் மத தீவிரவாதத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய மற்றுமொரு கொடூரமான நிகழ்வாகும். அந்தக் கொலை நிகழ்ந்து இந்த வருடம் டிசெம்பர் மாதத்தோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

பாகிஸ்தானில் இடம்பெறும் குண்டு வெடிப்புகளும், தாக்குதல்களும், கொலைகளும் ஊடகங்களுக்கு மிகச் சாதாரண செய்திகளாக மாறியிருக்கின்றன. பிரியந்த குமாரவின் கொலை கூட உலகளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி விட்டு, வழமை போல அமைதியடைந்து விட்டது.

அண்மையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான்கான் மீது தொடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் கூட, தீவிரவாதிகளால் பாகிஸ்தானின் ஜனநாயகம் தொடா்ந்தும் சவாலுக்கு உட்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகிறது.

தீவிரவாதத்தோடும், மதவாதத்தோடும் பின்னிப்பிணைந்துள்ள பாகிஸ்தான் மக்களின் சிந்தனைப் போக்கு, அந்நாட்டை அழிவிலிருந்து இலகுவாக மீட்டெடுக்க இடம் கொடுக்குமா? என்ற அங்கலாய்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

பாகிஸ்தானின் இன்றைய இந்த நிலைக்கு என்ன காரணம்?

விடை தேட, நான்கு தசாப்தங்களுக்கு மேல் பின்னோக்கி நாங்கள் நகர வேண்டும்.

தீவிரவாதம் அந்நாட்டுக்குள் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டதற்கு பின்னணியாக இருந்த பூகோள அரசியலை முதலில் நாம் புரிய வேண்டும்.

அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்ட பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும், அதற்கு துணை போன அந்த நாட்டின் மதவாத அரசியல் சக்திகளையும் மறந்து விட்டு யாராலும் இந்த தீவிரவாத பிரச்சினைக்கு தீா்வைத் தேட முடியாது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அந்நாட்டில் தீவிரவாதமும், மதவாதமும் அந்த நாட்டில் அரசியல் தேவைகளுக்காக திட்டமிட்டு வளா்க்கப்பட்டன. பாகிஸ்தானின் இன்றைய தீவிரவாத வன்முறை கலாசாரத்திற்கு அதன் அரசியலே பின்புலமாக இருந்து வந்திருக்கிறது.

பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு, மதவாத சக்திகளின் மறைமுக ஆதரவோடு அன்று ஆட்சியைப் பிடித்த இராணுவத் தளபதி சியாஉல் ஹக்கின் வகிபாகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பொது மக்களின் ஆதரவின்றி, ஓா் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் பதவிக்கு வந்த இவா், மதவாதத்தை பயன் படுத்தி தனது ஆளுமையை கட்டமைத்துக் கொள்ள முயற்சி செய்தாா். மதவாதிகளை தன் பக்கம் ஈா்ப்பதற்காக பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்குவது தொடா்பான பல சட்டங்களையும் கொண்டு வந்தாா்.

இதே வேளை, அமெரிக்க - சோவியத் ரஷ்யாவுக்கிடையிலான பனிப்போர் கூர்மையடைந்திருந்தது. அதனை ஒரு பினாமி போராக மாற்றி ரஷ்யாவுக்கு “தா்ம அடி” கொடுக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருந்தது.

சோவியத் ரஷ்யாவை முழந்தாளிட வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு 1978ம் ஆண்டு, காலம் கனிந்த ஆண்டாக ஆனது. அந்த ஆண்டு டிஸம்பா் மாதம் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படைகளை விரட்டியடிப்பதற்கு அமெரிக்கா வியூகம் வகுத்தது.

இந்த பினாமி போருக்கான சிறந்த தளமாக அமெரிக்க சீஐஏ பாகிஸ்தானை தோ்ந்தெடுத்து, அதன் இராணுவ ஆட்சியாளா் சியாஉல் ஹக்கிடம் பணியை ஒப்படைத்தது.

இந்த ஆப்கான் போரில் சியாஉல் ஹக் கதாநாயகனாக முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவுடன், போருக்கான தளமாக பாகிஸ்தானின் பெஷாவா் நகரை மெருகேற்றப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலுள்ள சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரையும் இலக்கு வைத்து கம்யூனிஸத்திற்கு எதிரான பிரசாரம் சீஐஏவால் வடிவமைக்கப்பட்டது. சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக போராடுவது “உன்னத வழி” என்று போதிக்கப்பட்டது. இதற்காகவே பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான கல்விக் கூடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

அமெரிக்காவின் அப்போதைய ரேகன் நிர்வாகம், சியாஉல் ஹக்கின் இராணுவ ஆட்சியின் தீவிர ஆதரவாளராகவும், பாகிஸ்தானின் மதவாத ஆட்சிக்கு ஆசிா்வாதம் வழங்கும் ஆப்த நண்பனாகவும் இருந்தது.

கம்யூனிசத்தின் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில், எழுச்சிமிக்க சக்தியாக சியாஉல் ஹக்கின் ஆட்சியை அமொிக்கா அடையாளப்படுத்தியது. பாகிஸ்தானை “அமெரிக்காவின் முன் வரிசை" கூட்டாளியாக ரேகன் நிர்வாகம் அறிவித்தது.

அமெரிக்கா தனது பொது எதிரியை வீழ்த்துவதற்காகவும், தனது சொந்த அரசியல் நலன்களுக்காகவும் பாகிஸ்தானை பகடைக்காயாக பயன்படுத்தியதை அன்று யாரும் உணரவில்லை. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை மையப்படுத்தி கல்வி தொடா்பான பாடத்திட்டங்களைக் கூட அமெரிக்கா மாற்றியது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் மாற்றுவதற்கான அடித்தளத்தை, அமெரிக்கா அந்நாட்டு அரசியல்வாதிகளின் ஆசிா்வாதத்தோடு நிறைவேற்றியது.

நாட்டு மக்களின் மத நம்பிக்கையை, அவா்களின் ஆன்மிகத்தை ஆயுதமாக்கி சோவியத் ரஷ்யாவை வீழ்த்தும் திட்டத்தில் அந்நாட்டை இலகுவாக அமொிக்கா சிக்க வைத்தது. சோவியத்துக்கு எதிராக போராட்டத்தை மையப்படுத்தி அந்நாட்டு சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை மூளைச் சலவை செய்யப்பட்டாா்கள்.

பாகிஸ்தான் 'அமெரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் ' கேந்திர நிலையமாக பரிணாமம் பெற்றது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா என உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் போராட்டக் காரர்களைக் கொண்டு வந்து குவிக்கும் இடமாக பாகிஸ்தானின் பெஷாவா் நகரம் மாற்றப்பட்டது.

இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்ற மிகவும்கொடூரமான தீவிரவாத அமைப்புகளாக கருதப்படும் அல்காயிதா, தாலிபான், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இது போன்ற அனைத்து அமைப்புகளுக்குமான விஷ விதை இந்த இரு நாடுகளிலேயே தூவப்பட்டன.

அமெரிக்கா, தான் உருவாக்கிய தீவிரவாதத்தை வைத்து அதன் இலக்கை அடைந்தது. அதன் மூலம் இன்றுவரை இலாபத்தை அடைந்து வருகிறது. அதன் ஆயுத வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. இந்த தீவிரவாதத்தைக் காரணம் காட்டி பல நாடுகளை கபளீகரம் செய்து, வளங்களை அமெரிக்கா இன்றும் கொள்ளையிட்டு வருகிறது.

ஆனால், பயங்கரவாதத்தோடு கை கோா்த்து, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் தாளத்திற்கு ஆட்டம் போட்ட பாகிஸ்தானின் நிலை இன்று பரிதாபமாக மாறியுள்ளது. அது மீள முடியாத தீவிரவாத படுகுழியில் வீழ்ந்து, விழி பிதுங்கி நிற்கிறது.

இன்று உலகின் நாலா திசைகளிலும் நிகழும் இஸ்லாம் என்ற போர்வையில் இயங்கும் தீவிரவாத கும்பல்களின் சமூக விரோத செய்பாடுகளுக்கு அச்சாணியாக இருப்பது இந்த ஆப்கான் போராட்டத்தை வைத்து பாகிஸ்தானில் உருவான மத தீவிரவாதம்தான்.

2000ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, பல்லாயிரக் கணக்கான பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனா். இந்த காலப்பகுதியில் 62990 பேரின் உயிர்கள் தாலிபான் மற்றும் பிற தீவிரவாதக் குழுக்கள் நடாத்திய தாக்குதல்களின் போது பலியாகியுள்ளதாக South Asian Terrorism Portal Index என்ற அமைப்பின் கணிப்பீடு கூறுகிறது.

இன்று பாகிஸ்தான் ஒரு கொடிய, தோல்வியுற்ற, ஜனநாயகம் அறவேயில்லாத, பயங்கரவாத நாடாக வகைப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் மத தீவிரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனா்.

மதவாதிகளை திருப்தி படுத்துவதற்காகவும், உசாா் படுத்துவதற்காகவும் சியாஉல் ஹக்கால் மெருகூட்டப்பட்ட பாகிஸ்தானிலுள்ள மத நிந்தனை சட்டத்தின் மூலம் பலா் அநீதியான முறையில் தண்டிக்கபட்டு வருகின்றனா். மதவாத சக்திகள் சகிப்புத் தன்மையற்ற முறையில் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு உளவியல் ரீதியிலான ஓா் உந்து சக்தியை இந்த சட்டம் வழங்கியிருக்கிறது என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

பாகிஸ்தானில் புற்று நோயாக பரவியிருக்கும் இந்த தீவிரவாதத்தை எதிா்த்து குரல் கொடுப்பவா்கள் கூட இலகுவாக குறி வைக்கப்படும் அபாயம் அங்கு இருக்கிறது.

2011ம் ஆண்டு, பாகிஸ்தானின் முக்கிய அரசியல்வாதியான சல்மான் தசீர் என்பவா், பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடா்பாக கருத்து வெளியிட்டதை ஜீரணித்துக் கொள்ள முடியாத தீவிரவாதி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

சல்மான் தசீர், சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தாா். சிறுபான்மை சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதை, இஸ்லாம் மதத்திற்கு செய்யும் அவமதிப்பாக பாகிஸ்தானிய மதவாதிகள் பாா்க்கின்றனா். இதன் காரணமாக அவரது மெய்பாதுகாவலர் ஒருவராலேயே சல்மான் தஸீா் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

சல்மான் தஸீா் மரணிக்கும் போது, பாகிஸ்தானின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாகாணமான பஞ்சாபின் ஆளுநராக இருந்தார். அவா் பல தசாப்தங்களாக பாகிஸ்தானில் நன்கு அறியப்பட்ட பிரபலமான அரசியல்வாதியாகவும் இருந்தார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) ஸ்தாபக உறுப்பினராகவும், 1960களில் சுல்பிகார் அலி பூட்டோவின் ஜனநாயகமயமாக்கல் பிரச்சாரத்தின் தீவிர ஆதரவாளராகவும் சல்மான் தஸீா் இருந்தார். சுல்பிகாா் அலி பூட்டோவின் மகள், பெனாஸிா் பூட்டோ பிரதமராக இருந்த காலத்தில் அவாின் நம்பகமான ஆலோசகராகவும் அவா் செயற்பட்டாா்.

ஜனநாயகமும், பன்மைத்துவமும் பிரிக்க முடியாதவை என்றும் பாகிஸ்தானில் வாழும் அனைத்து மத சிறுபான்மையினரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தசீர் வெளிப்படையாகவே குரல் கொடுத்து வந்தார்.

ஜனநாயகம் தொடா்பாக தஸீா் வெளியிட்டு வந்த கருத்துக்கள் அந்நாட்டு கடும்போக்கு முல்லாக்களின் கண்டனத்திற்கு உள்ளாகி வந்தன. தஸீரின் சிந்தனைப் போக்கு மேற்கத்தியமயமாக்கலுக்கு துணை போவதாகவும், பாகிஸ்தானில் உண்மையான இஸ்லாம் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருப்பதாகவும் கடும் போக்குள்ள முல்லாக்கள் சல்மான் தஸீரை கண்டித்து வந்தனா்.

பாகிஸ்தானில் உள்ள மத நிந்தனைச் சட்டம் சிறுபான்மை மக்களை இலக்கு வைப்பதாகவும், இந்த சட்டம் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் பாகிஸ்தானின் சிறுபான்மை சமூகங்கள் அடிக்கடி அநீதிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் சல்மான் தஸீா் கூறி வந்தாா்.

மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ இளம் பெண்ணை ஆதரித்து பேசிய தஸீா், அவர் குற்றம் இழைக்காதவா் என்றும், அவா் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். மத நிந்தனைச் சட்டங்களை மத தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவா் வாதிட்டார்.

சல்மான் தசீரின் படுகொலை, மனித உரிமைகளை மதிக்கின்ற, மனித நேயமுள்ள மிதவாத பாகிஸ்தானியா்களின் குரல்களை அடக்குவதற்கு மதவாத தீவிரவாதிகள் எவ்வாறு எதிா்வினையாற்றுகிறாா்கள், எவ்வாறு வன்முறையை பயன்படுத்துகிறாா்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், நடுத்தர வர்க்கம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடியவருமான பெனாசிர் பூட்டோ, 2007ம் ஆண்டு டிசம்பா் மாதம் ஒரு பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டபோது வெடிகுண்டுகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் "மத தீவிரவாதம்" இருப்பதாக கூறுவதை அதிகமான பாகிஸ்தானியர்கள் ஏற்றுக்கொளவதில்லை என்று ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. "இஸ்லாத்தை அதன் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான போராட்டத்தை” மேற்குலகு “வன்முறை” என்று அா்த்தப்படுத்துவதாக பாகிஸ்தானியா்களில் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த தகவல் சொல்கிறது.

அல் கொய்தா மற்றும் தாலிபான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்கள் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்துவதற்கு “இஸ்லாத்தைப் பாதுகாத்தல் மற்றும் அதற்காகப் போராடுதல்” என்ற வரைவிலக்கணத்தை முன்வைத்து வருகின்றன.

பாகிஸ்தானில் பிரதான நான்கு தீவிரவாத குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் தலிபான்(PT), ஆப்கான் தலிபான் (AT), லஷ்கர்-இ-தொய்பா (LeT), மற்றும் அல் காயிதா (AQ) போன்ற இந்த தீவிரவாத குழுக்கள், அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் உளவுத்துறை இலக்குகள் மற்றும் பொலிஸ் கல்லூாிகளைத் தாக்கியுள்ளது.

பள்ளிவாசல்கள், பாடசாலைகள், ஹோட்டல்கள், பூங்காக்கள் மற்றும் தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரை கொன்றொழித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக பாகிஸ்தானின் பாதுகாப்பிற்கு முக்கிய மிக அச்சுறுத்தலாக இந்த நான்கு அமைப்புகளும் இருந்து வருகின்றன.

இது இப்படியிருக்க,

பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதற்குப் பின்னால், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இருப்பதாக தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

ஊடகங்களுக்கு அவா் அளித்த பேட்டியில், “கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததற்கு இம்ரான்கான் தான் காரணம். பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். பாகிஸ்தானின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார்.

அண்மையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் ஆறு காவல்துறையினா் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், "பயங்கரவாதம் பாகிஸ்தானின் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாகத் தொடர்கிறது” என்று குறிப்பிட்டிருந்தாா்.

பாகிஸ்தானின் தீவிரவாதம் எல்லை கடந்து வந்து தனது நாட்டை இலக்கு வைப்பதாக இந்தியாவும் பாகிஸ்தானை எச்சரித்து வருகிறது.

“இந்தியா ஐஐடி, ஐஐஎம்எஸ், எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது” என்று இந்தியா பாகிஸ்தானை விமா்சித்து வருகிறது. .

பூகோள மற்றும் பிராந்திய அரசியல் ஏஜன்டுகளாகவும், கூலிப்படைகளாகவும் இயங்கும் இந்த தீவிரவாத சக்திகளின் செயற்பாடுகள் உலகை அச்சத்தில் உறைய வைத்து வருகின்றன.

பாகிஸ்தான், இன்று தான் வளா்த்த “தீவிரவாதம்” என்ற கடாவின் தாக்குதலில் தனது நெஞ்சை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது சட்டம் ஒழுங்கு சீா்குலைந்த “பாதாள உலகம்” ஆளுகின்ற ஒரு நாடாக உருவாகியிருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு கருமம் ஆற்றப்போய் மரணப் பொறியில் இன்று மாட்டிக் கொண்டிருக்கிறது.

எந்த ஏகாதிபத்திய சக்திகளின் தேவைக்காக இந்த நாடு கைக்கூலியாக செயற்பட்டதோ, அதே ஏகாதிபத்திய சக்திகளின் கரங்களே இன்று அதன் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது.

“பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நோ்மையாக செயற்படுவதில்லை” என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஏகாதிபத்தியம் என்ற நாயொடு உறங்கப்போய் பயங்கரவாத ஒட்டுண்ணியோடு எழுந்திருக்கிறது பாகிஸ்தான்.

02/10/2022

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும்.

உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகங்களின் குரல்களை அடக்குவதற்காக, ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் போராட்டங்களுக்குள் பொறுக்கிகள், ரவுடிகள், குழப்பவாதிகளை இறக்கிவிடுவது வழக்கம். அதுவும், போராடும் தரப்புக்குள் இருந்தே புல்லுருவிகளை இனங்கண்டு, கூலிப்படையாக ஆட்சியாளர்கள் மாற்றுவார்கள். அது, போராட்டங்களை இலகுவாக தோற்கடிப்பதற்கான உத்திகள்.

விடுதலைப் புலிகளின் தோல்விக் கட்டங்களில், கருணாவின் பிளவு முக்கிய பங்கை வகித்தது. அதனை, இன்றைய ஜனாதிபதியும் அன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவே வெற்றிகரமாக நிகழ்த்தியவர் என்ற விமர்சனம் உண்டு.

இன்றைக்கும் அவர், தமிழ்த் தேசிய அரசியலை குண்டர்கள், கூலிப்படைகளைக் கொண்டு மெல்ல மெல்ல நீக்கம் செய்ய தொடங்கியிருக்கின்றார் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்கள் மட்டத்தில் உண்டு. அதனை, தமிழ்த் தேசியத்தின் போர்வையில் உலவும் சில கட்சிகளினதும் குழுக்களினதும் செயற்பாடுகள் நிரூபிப்பதுபோல் உள்ளன.

தியாகி திலீபனின் 35ஆவது நினைவு நாளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள், வேலன் சுவாமி குழு உள்ளிட்டவர்கள், நல்லூரில் நிகழ்த்திய அயோக்கியத்தனங்களைப் பார்த்தால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து மக்களை அகற்றுவதற்காக, இந்தத் தரப்புகள் எவ்வளவு மும்முரமாக இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தரப்புகளிடம், குறுகிய சுயநல அரசியல் இலாப நோக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில், வாக்குகளை முன்னிறுத்திய அரசியல் பிரதானமானது. அதற்காக, குரங்குகள் மாதிரி குட்டிக்கரணங்களை போட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில், தியாகி திலீபன் ஒரு குறியீடு. காந்தியின் வழியாக உலகத்துக்கு அஹிம்சை போதித்த பாரத தேசத்துக்கே, திலீபன் அஹிம்சை போதித்தவர்; ஓர் ஆயுதமுனை போராட்ட இயக்கத்துக்குள் இருந்து, அஹிம்சை வழியில் போராடி உயிர்நீத்தவர் என்ற அடையாளத்தைப் பெற்றவர். அவரின் ஆகுதிப் பயணம், தமிழ்த் தேசிய போராட்டத்தினை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களை இழுத்து வந்தது.

அப்படிப்பட்ட ஒருவரின் நினைவிடத்தில், கட்சிகளின் ஆதரவாளர்கள் என்கிற பெயரில் இயங்கும் பொறுக்கிகள், காவாலிகள், கூலிக் குண்டர்கள் நின்று, ஏட்டிக்குப் போட்டியாக தகாத வார்த்தைகளால் சண்டையிட்டு, நினைவு கோரலுக்கான வெளியை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அங்கு சாதாரண ஒரு தமிழ் மகனோ, மகளோ கட்சி, குழு அரசியலுக்கு அப்பால் நின்று அஞ்சலி செலுத்துவதற்கான கட்டங்களை முன்னணியினரும், ஜனநாயகப் போராளிகளும், வேலன் சுவாமி குழுவும் நிராகரித்தார்கள்.

நினைவுகூரலுக்கான கட்டம் எவ்வளவு ஆத்மார்த்தமாக முன்னெடுக்கப்பட வேண்டுமோ அதுவெல்லாம் தகர்த்தப்பட்டு, ஏட்டிக்குப் போட்டியாக நினைவுச்சுடர் ஏற்றி, பொதுச்சுடரை தூக்கி வைத்துக்கொண்டு இழுபறிப்பட்டு அலங்கோலமாக்கினார்கள். இவ்வளவு அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிய தரப்புகள் எல்லாமும், திலீபனை அவமானப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான வெளியை, பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கி வந்திருக்கின்றது. நெருக்கடி காலங்களில் எல்லாம், பெரும் அர்ப்பணிப்போடு தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுத்திருக்கிறார்கள்; இராணுவத்தினரின் நெருக்கடிகளைத் தாண்டியிருக்கிறார்கள்.

ஆனால், இம்முறை சிங்கள மேலாதிக்கத் தரப்பு, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றது. அதுவும், பிரித்தாளும் உத்தியையும் கூலிப்படைகளையும் இறக்கிவிட்டு பார்த்துக் கொண்டது. தென் இலங்கையின் எதிர்பார்ப்பை முன்னணியும் ஜனநாயகப் போராளிகளும் வேலன் சுவாமி குழுவும், கொஞ்சமும் குறையாமல் நிறைவேற்றியிருக்கின்றன.

‘முன்னணி’ என்கிற முகப்புப் பெயரில் இயங்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் வாக்குக்கான அரசியல் என்பது, தொடர்ச்சியாக கறுப்புப் பக்கங்களால் நிரம்பியது. அமைச்சுப் பதவிக்காக ஜீ.ஜீ பொன்னம்பலம், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுக்காது, காங்கிரஸில் இருந்து தந்தை செல்வா வெளியேறி, தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார்.

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், கட்சி கூட்டங்கள் எங்கு நடந்தாலும், அங்கு காங்கிரஸின் குண்டர்களும் கூலிப்படையினரும் கூட்டங்களுக்குள் புகுந்து, ரௌடித்தனங்களைப் புரிவது வழக்கம். அதுவும், கூட்டத்தில் கூடியிருக்கும் மக்களை நோக்கி, உயிருள்ள பாம்புகளை எறிவது வழக்கம். அதனை, காங்கிரஸார் கூட்டத்தை கலைக்கும் உத்தியாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

சீனியர் பொன்னம்பலம் காலத்தில் காங்கிரஸார் அரங்கேற்றிய ரௌடித்தனத்தை, ஜுனியர் பொன்னம்பலத்தின் காலத்திலும் அவர்கள் விடுவதாக இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஆதரவாளர்கள் என்கிற பெயரில், குண்டர்களையும் ரௌடிகளையுமே தொடர்ச்சியாக வளர்த்து வந்திருக்கிறார்கள்.

ஏனெனில், ஆதரவாளர்கள் என்கிற கட்டம், கேள்வி கேட்கும் கட்டங்களைக் கொண்டது. குண்டர்களுக்கோ, ரௌடிகளுக்கோ கேள்வி கேட்கும் அதிகாரம் ஏதும் இல்லை; அவர்கள், ஏவல் அடிமைகள். பொன்னம்பலம் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வதுதான் அவர்களின் ஒரே வேலை.

திலீபன் நினைவிடத்தில், காங்கிரஸின் குண்டர்கள் மஞ்சள் நிற ரீ சேர்ட்டுக்களோடு நின்று அரங்கேற்றிய அடாவடிகளே அவற்றுக்குச் சாட்சி. நினைவேந்தலுக்கான உரிமை பற்றி, பாராளுமன்றத்துக்குள் மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் அதனை, நியாயமாக மக்கள் அனுஷ்டிப்பதற்கான கட்டங்களை முடக்காது இருக்க வேண்டும்.

தென் இலங்கையில் பொங்கிவிட்டு வந்து, மக்கள் அஞ்சலிப்பதற்கான கட்டங்களை கட்சியின் குண்டர்களை வைத்து குழப்பித் தடுக்கக் கூடாது. நல்லூரில் காங்கிரஸின் குண்டர்கள் அடாவடி புரிந்து கொண்டிருக்க கஜேந்திரகுமார் அதனை பார்த்திருந்தது, அற்பத்தனமாக அரசியல்.

ஜனநாயகப் போராளிகள் என்கிற பெயரில், கட்சியை நடத்தும் முன்னாள் போராளிகள் சிலரும் அபத்தமான அரசியலை தொடர்ச்சியாக செய்ய எத்தனிக்கிறார்கள். அவர்கள் நினைவேந்தலுக்கான வெளியை காங்கிரஸ் கட்சியினர் போன்றே, மோசமான வழிகளில் குழப்பும் அணுகுமுறையோடு செயற்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய போராட்டத்தில் முன்னாள் போராளிகளின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது. அதனை எந்தவொரு தருணத்திலும் நிராகரிக்க முடியாது. ஆனால், முன்னாள் போராளிகள் என்கிற பெயரை வைத்துக் கொண்டு, அற்பத்தனமான நடவடிக்கைகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியிலுள்ள சிலர் இயங்குகிறார்கள். அதுவும், நினைவேந்தலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்கான வேலைகளை ஆற்றியமை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

நினைவேந்தலை ஓர் ஒழுங்கில் நடத்துவதற்குப் பதிலாக, ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடுகளுடன் அணுக வேண்டும் என்பது எந்தத் தருணத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை புதிய மீட்பராக காட்டிக் கொண்டு, வேலன் சுவாமி எனும் நபர் யாழ்ப்பாணத்தில் வலம் வருகிறார். அவர், ‘பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை’க்கான மக்களின் போராட்டத்தை தன்னுடைய போராட்டமாக அபகரித்த ஒருவர். அவரின் நோக்கம் பலத்த சந்தேகங்களுக்கு உட்பட்டது.

விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலுக்குள் முடிவை அண்மித்துக் கொண்டிருந்த காலத்தில், கொழும்பில் சின்மயா மிஷன் எனும் அமைப்பில் ‘சுவாமிஜி’ என்ற வேடத்தில் இருந்தவர். பின்னரொரு காலத்தில் யாழ்ப்பாணம் வந்த அவர், சின்மயா மிஷனோடு பிணக்கப்பட்டு ‘வேலன் சுவாமி’யாக மாறினார். அவரின் செயற்பாடுகளில், ‘தமிழர் நலன்’ என்பதைத் தாண்டி, பிறத்தியரின் நலன்களே அதிகமாக இருப்பதான சந்தேகம் உண்டு.

இம்முறை திலீபன் நினைவேந்தலை அவரும் கையகப்படுத்த முனைந்தார். ஆனால், அவரைத் தாண்டிய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களுமாக, காங்கிரஸ் கட்சியினரும் ஜனநாயகப் போராளிகளும் போட்ட அடிதடிக்கும் வேலன் சுவாமி தூக்கி எறியப்பட்டுவிட்டார்.

தமிழ் மக்களுக்கு நினைவேந்தலுக்கான வெளி கிடைத்தாலும் அதனை வாக்குப் பொறுக்கி அரசியல்வாதிகளும், வெளித்தரப்புகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தரப்புகளும் ஒருபோதும் அனுமதிக்காது.

அப்படியான நிலையில், தமிழ்ச் சமூகம், ஒவ்வொரு நினைவேந்தலுக்குமான பொதுக் கட்டமைப்பை நோக்கி நகர வேண்டும். அந்தக் கட்டமைப்புக்குள், தமிழ்த் தேசிய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமயப் பெரியார், முன்னாள் போராளிகள், பெற்றோர், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் உள்வாங்கப்பட வேண்டும்.

இல்லையென்றால், திலீபனின் நினைவிடத்தில் அரங்கேற்றப்பட்ட அசிங்கத்தை, முள்ளிவாய்க்காலிலும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நிகழ்த்துவதற்கு தயங்கமாட்டார்கள்.

Address


Telephone

+33606704535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kogularam- duke posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kogularam- duke:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share